என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:&

    கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீரினை இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் தொலை நோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு  விவசாயிகளுக்கு, பாசன நீரை இறைத்திட புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்கவும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார்           பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ. 10 ஆயிரம்  மானியம் வழங்கப்படும்.

    எனவே, விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற சிறு,குறு விவசாயி சான்றிதழ், அடங்கல், கிணறு அமைந்துள்ள நிலவரை படம், மின்சார இணைப்பு அட்டைவிபரம் மற்றும் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன், இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் , வேளாண்மைப் பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை  அலுவலகத்திலும், அறந்தாங்கி கோட் டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல்துறை, ராஜேந்திரபுரம், அறந்தாங்கி உபகோட்டத்திலும் மனுக்கள் அளித்து பதிவு செய்து பயன் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 65). இவருக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது. மேலும் திருமணமும் செய்துகொள்ளவில்லை.  

    இவர் புதுக்கோட்டை அரசு பழைய தலைமை மருத்துவமனையில் தற்காலிக பெண் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் இரவு நேரங்களில் தனக்கா ஒதுக்கப்பட்டிருந்த ஓய்வு அறையிலேயே தங்கிக்கொள்வார்.

    நாகரத்தினம் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது, மருத்துவமனை வளாகத்தினை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தனது ஓய்வறைக்கு தூங்க சென்றார். இன்று காலை அவரது அறையில் நாகரத்தினம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுதொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட நாகரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள் நாகரத்தினத்தை அடித்துக்கொலை செய்துள்ளனர். முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொள்ளை முயற்சியில் இந்த கொடூர சம்பவம் நடந்ததா? என்று போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்து கொண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத் தில் கறம்பக்குடி, ஆலங்குடி, பொன்னமராவதி, அரிமளம், கீரமங்கலம், அன்னவாசல், கீரனூர், இலுப்பூர் ஆகிய 8 பேரூராட்சிகள் உள்ளன.

    இவற்றில் கறம்பக்குடி தவிர மற்ற 7 பேரூராட்சிகளிலும் ஏற்கனவே பெண் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர். தற்போதும் கறம்பக்குடி, கீரமங்கலம் தவிர மற்ற 6 பேரூராட்சிகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கறம்பக்குடி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 60 ஆண்டுகளாக, பெண் தலைவர்களே தேர்வு செய்யப்பட்டது இல்லை.தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவி, பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மாதர் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்நிலையில இம்முறையும் தலைவர் பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாதர் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர்.

    கறம்பக்குடி பேரூராட்சியில் சுழற்சிமுறை ஒதுக்கீடு கடைப் பிடிக்காதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் தங்களுக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவதாக தெரிவித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

    இதுகுறித்து கறம்பக்குடி மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கூறுகையில், உலக நாடுகளின் தலைவர்கள் வந்து செல்லும் சென்னை மாநகராட்சியிலேயே மேயர் பதவிக்கு பட்டியலின பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதே வேளையில் கறம்பக்குடி பேருராட்யில் இதுவரை பெண் தலைவராக முடியவில்லை. இந்த பேரூராட்சியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். எனவே கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
    அறந்தாங்கி, ஆவுடையார் கோவிலில் ரூ.5.84 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்தது வைத்தார்.
    புதுக்கோட்டை :
    புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி   தாலுகாவில் 52  ஊராட்சிகளில்  105  வருவாய்  கிராமங்கள்  உள்ளன. ஆவுடையார்கோவில் தாலுகாவில் 35 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டா, சிட்டா மாறுதல்,        வருமானச்சான்று, போன்ற வருவாய்த்துறை தொடர்பான தேவைகளுக்கு அறந்தாங்கி   வட்டாட்சியர் அலுவலகம்   பெற்று வந்தனர். 
    இந்நிலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தில் போதிய உறுதித்தன்மை குறைந்ததால்,    அதனை மாற்றி புதியக் கட்டிடம் கட்ட ஏற்பாடு  செய்யப்பட்டது. அதற்காக அங்கிருந்த தாலுகா அலுவலகம் கடந்த 2020 ஆம் ஆண்டு வேறு தனியார் வாடகைக் கட்டிடத்திற்க்கு மாற்றப்பட்டது. 

    அதனைத்  தொடர்ந்து பழைய தாலுகா அலுவலகம் அகற்றப்பட்டு ரூ.2 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. அதேபோன்று ஆவுடையார்கோவிலில் ரூ.2 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக அறந்தாங்கி மற்றும் ஆவுடையார்கோவில்  வட்டாட்சியர் அலுவகங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி மூலம் செயல்பாட்டிற்க்கு திறந்து வைத்தார். 

    நிகழ்ச்சியில்  தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் கவிதாராமு,  ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகரச் செயலாளர் ஆனந்த், மாநில  தேர்தல்  பணிக்குழு  செயலாளர் பரணி கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் கலைமணி, முன்னாள் நகரச்செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பொன்கணேசன், சக்திராமசாமி   உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கறம்பக்குடி அருகே மயான பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் தூக்கி செல்லும் அவலநிலை உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பட்டத்திக்காடு ஊராட்சி மயிலாடி தெருவில் 100&க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் 40 வருடத்திற்கு மேலாக மயானத்திற்கு செல்ல விவசாய நிலங்கள் மற்றும் குளத்தில் இறங்கி தான் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் மயிலாடி தெருவை சேர்ந்த குழந்தையன் மனைவி சிந்தாமணி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடலை குளத்தின் வழியாக கழுத்தளவு தண்ணீரில் தூக்கி சென்று உறவினர்கள் தகனம் செய்தனர். எனவே மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    திருமயம் அருகே மலையகோவிலில் தைபூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஏராளமான காளைகள், காளையர்கள் பங்கேற்றனர்.


    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  அருகே குலமங்கலத்தில் உள்ள மலையக்கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைபூச திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபானி, திருமயம் தாசில்தார் பிரவினாமேரி ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    முதலில் கோவில் மாடு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    வெற்றி காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.


    புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதில் 500 காளைகள் 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காயமடைந்த வீரர்களுக்கு வாடிசால் அருகே இருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


    அறந்தாங்கி அருகே காற்றின் வேகம் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர் பலியானார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் வன்னிச்சியேந்தல் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்படகு மீனவர் தவசிமணி (வயது 56). இவர் 17&ந்தேதி மாலை கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். 

    அப்போது கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால், படகு அலைக்கழிக்கப்பட்டு உள்ளது. இதில் நிலை தடுமாறிய படகு கவிழ்ந்ததில், தவசிமணி  கடலில் விழுந்து மாயமானார். 

    இதற்கிடையே நேற்று காலை கரை திரும்ப வேண்டிய சூழ்நிலையில் மதிய வேளை ஆகியும் கரை திரும்பாததைக் கண்டு பதறிய உறவினர்கள் கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவித்தனர். 

    அதன்பேரில் சக மீனவர்களின் உதவியுடன் கடலோர காவல் படையினர் நேற்று மாலை இருள் சூழும் வரை மாயமான மீனவரை தேடும் பணியல் ஈடுபட்டனர். 

    இந்தநிலையில் வடக்கு புதுக்குடியில் பாய்மரப்படகு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அம்மாபட்டினம் கடற்கரையிலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் தவசுமணியின் உடல் மிதந்ததை சக மீனவர்கள் பார்த்து உள்ளனர். 

    உடனடியாக அந்த உடலை மீட்ட மீனவர்கள் கரை சேர்த்தனர். இறந்த மீனவரின்  உடல் தற்போது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காற்றின் வேகம் காரணமாக தவறி விழுந்து மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி அருகே மீனவ கிராமத்தில் தைப்பூச விழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடி தாலுகா வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்தை முன்னிட்டு பாய்மரப்படகு போட்டி நடைபெறுவது வழக்கம். 

    இந்தாண்டு நடைபெற்ற படகு போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 27 பாய் மரப் படகுகள் போட்டியில் பங்கேற்றன.

    ஒரு படகிற்கு 6 வீரர்கள் வீதம் 162 வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். ஒரு படகிற்கு    ஒரு சொருகு பலகை, ஒரு கடல் பலகை, ஒரு பாய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என  விதிகள் வகுக்கப்பட்டிருந்தது. 

    மேலும் பந்தைய  தூரத்திற்கு சென்று வர 12 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யப்பட் டிருந்தது. 

    போட்டி தூரத்தை கடக்க வீரர்கள் முந்திக்கொண்டு செயல்பட்டது காண்போருக்கு   மிகவும் உற்சாகம் அளிக்கும் விதமாக இருந்தது. போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கேடயம் பரிசாக   வழங்கப்பட்டது. 

    படகு போட்டியை ஏராளமான ரசிகர்கள் , பொதுமக்கள் கடற்கரையோரம் திரண்டனர்.
    ஆலங்குடி அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த திருவரங்குளம் அருகே கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 35). 

    இவரது மனைவி கவுதமி (24). இவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு அறிவழகன் நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென்று இறந்து விட்டார். இதனால் கவுதமி நிர்கதியாய் நின்றார்.

    கணவன் இறந்த நிலையில், கைக்குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று கூறியவாறு அக்கம்பக்கத்தினர் புலம்பியுள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த கவுதமி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.

    இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வல்லதிராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு மன்னகுடியில் நடைபெற்றது.

    மாநாட்டுக்கு அரோக்கியசாமி தலைமை தாங்கினார். துரைராஜ், கொடியேற்றி வைத்தார்.

    மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பி னர் தண்டாயுதபாணி  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் மன்னகுடி ஊராட்சியில் மன்னகுடி கிராமத்திற்கு குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும்.

    மன்னகுடி கிழக்கு குடியிருப்பு சிஎம்பி பாலம் மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே அந்த பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டித்தர தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    சுப்பிரமணியபுரம், மன்னகுடி, பிடாரிகாடு, நாட்டுமங்களம் வழியாக அறந்தாங்கி செல்ல பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
    மன்னகுடி, நாகுடி வரை செல்லும் சிஎம்பி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக தமிழக அரசு செப்பனிட்டு தரவேண்டும்.

    மன்னகுடி ஊராட்சியில் மன்னகுடி ஏடி காலனி 1996 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்பு தொகுப்பு வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. எனவே பழுதடைந்த தொகுப்பு வீடுகளை மராமத்து செய்ய உரிய நிதி ஒதுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

    மன்னகுடி நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அரசியல் கட்சியினர் அப்செட் ஆகியுள்ளனர்.
    புதுக்கோட்டை: 


    புதுக்கோட்டை நகராட்சி உட்பட 58 நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கபட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

    புதுக்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட அனைத்து கட்சியினரும் உரிய நடவடிக்கை எடுத்து வந்தனர். 

    குறிப்பாக ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக வடக்கு மாவட்ட பொருளாளர் செந்தில், நகரச் செயலாளர் நைனாமுகமது, முன்னாள் நகரச் செயலாளர் அரு.வீரமணி, முன்னாள் கவுன்சிலர் லியாகத்அலி உள்ளிட்டோர் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர். 

    இதே போல் அ.தி.மு.க. சார்பாக முன்னாள் தலைவர் சேட் என்கிற அப்துல்ரகுமான், ராஜசேகர் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தனர். 

    இந்தநிலையில் புதுக்கோட்டை உட்பட 58 நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட் ஆகியுள்ளனர். 

    இருப்பினும் கட்சி அறிவிக்கும் வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளனர். இதற்கிடையே துணை தலைவர் பதவிக்கு பெரிய அளவில் போட்டி நிலவும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. 

    தி.மு.க. சார்பாக முன்னாள் தலைவர் மணிமேகலை ராஜேந்திரன் உட்பட சிலர் பெயர்கள் முன்னிருத்தபடுகின்றன.
    அறந்தாங்கி அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சகோதரர்கள் 2 பேர் திடீரென்று மாயமானார்கள்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கற்பூரசுந்தரேஸ்வரபாண்டி (வயது 29). இவர் தனது மனைவி சுந்தரி (26) மற்றும் மகன்கள் நித்தீஸ் (6), வித்தீஸ் (4) ஆகியோருடன் கும்பகோணத்தில் தங்கி டீ கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சுந்தரியோடு   ஏற்பட்ட   கருத்து வேறுபாட்டால், அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் அவர் தனது இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரான திருநாளூருக்கு வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

    நேற்று சிறுவர்கள் நித்தீஸ் மற்றும் வித்தீஸ் ஆகிய இருவரும் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் சென்ற சுந்தரேஸ்வரபாண்டியின் சகோதரர் செல்லபாண்டி, சிறுவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு சென்றுள்ளார்.

    ஆனால் சிறுவர்கள் வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே விளையாடிக்கொண்டு  இருந்துள்ளனர்.

    நண்பகல் 2 மணியைத்தாண்டியும் சிறுவர்கள் வீட்டிற்கு வராததையடுத்து, தெருவில் சென்று பார்த்தபோது அவர்களை காணவில்லை. இதையடுத்து கற்பூர சுந்தரேஸ்வரபாண்டி மற்றும் உறவினர்கள் சிறுவர்களை தேடிச்சென்றனர். சிறுவர்கள் விளையாடக்கூடிய இடங்கள், வீட்டருகே உள்ள குளக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவர்கள், அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.  புகாரின்  அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவர்களை தீவிர மாகத்தேடி வருகின்றனர்.

    சிறுவர்களை யாராவது மர்ம நபர்கள் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    ×