search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்பநாய்.
    X
    சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்ட மோப்பநாய்.

    அரசு மருத்துவமனை பெண் ஊழியர் கொலை

    புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 65). இவருக்கு உறவினர்கள் என்று யாரும் கிடையாது. மேலும் திருமணமும் செய்துகொள்ளவில்லை.  

    இவர் புதுக்கோட்டை அரசு பழைய தலைமை மருத்துவமனையில் தற்காலிக பெண் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். மேலும் அவர் இரவு நேரங்களில் தனக்கா ஒதுக்கப்பட்டிருந்த ஓய்வு அறையிலேயே தங்கிக்கொள்வார்.

    நாகரத்தினம் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது, மருத்துவமனை வளாகத்தினை சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் வழக்கமான பணிகளை முடித்துவிட்டு தனது ஓய்வறைக்கு தூங்க சென்றார். இன்று காலை அவரது அறையில் நாகரத்தினம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுதொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட நாகரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் அங்கு வந்த யாரோ மர்ம நபர்கள் நாகரத்தினத்தை அடித்துக்கொலை செய்துள்ளனர். முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொள்ளை முயற்சியில் இந்த கொடூர சம்பவம் நடந்ததா? என்று போலீசார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை பதிவு செய்து கொண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×