என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது
    • அமைச்சர் சிவ வீ. மெய்யநாதன் வழங்கினார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 125 மாணவர்களுக்கும், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 231 மாணவிகளுக்கும், ரகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 165 மாணவ மாணவிகளுக்கு என மொத்தம் 521 விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவ வீ. மெய்ய நாதன் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மாணவ, மாணவியரின் நலனை கருதி பல்வேறு நலத்திட்டங்களையும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு வசதிகளை செய்துள்ளதால் அதிக மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் கல்வி தரத்தினை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • வீட்டில் இருந்த பெண் மாயமானார்
    • விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள திருக்கட்டளையைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மகள் தனலட்சுமி (வயது19). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-ந் தேதி விடுமுறைக்கு திருப்பூரில் சொந்த ஊருக்கு வந்த தனலட்சுமி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் வல்லத்திராக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    • செயல்படாத குடிநீர் எந்திரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
    • அறந்தாங்கி அம்மா உணவகத்தில்

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றிற்கு 400க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் காலை சிற்றூண்டி, மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். உணவு சாப்பிட்டவர்கள் குடிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பான் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குடிநீர் சுத்திகரிப்பான் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக பழுதடைந்து செயல்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சாப்பிட வரக்கூடியவர்கள் வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இது குறித்து புகார் கொடுத்தும், கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊர்வலமாக தாரை தப்பட்டை அடித்து செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பானுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தினை தொடர்ந்து சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 10 நாட்களுக்குள் உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தில் ஒன்றியத் தலைவர் கோபால், மாவட்டத் தலைவர் மகாதீர், மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி, முன்னாள் மாவட்டத் தலைவர் கர்ணா, ஒன்றியப் பொருளாளர் சங்கர், ஒன்றியக்கமிட்டி உறுப்பினர்கள் அய்யனார், கிருஷ்ணன்,தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மாதர் சங்கம் இந்திராணி, லதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கவிபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • டிராக்டரிலிருந்து விழுந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது
    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட காத்தான் விடுதியை சேர்ந்தவர் குமார். இவர் தனது டிராக்டர் மூலம் மாங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வல்லக்குளம் பகுதியில் உழவு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வீரையா மகன் தயாநிதி (வயது14) என்ற சிறுவன் டிராக்டரில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது, டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில், டிராக்டரின் கலப்பையில் சிக்கி தயாநிதியின் வலது கால் முறிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தயாநிதியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குட்கா விற்றவர் கைது ெசய்யப்பட்டார்
    • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கேப்பரை முக்கம் பகுதியில் சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்பியின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, வல்லத்திராக்கோட்டை முஸ்லிம் தெருவை சேர்ந்த முகமது ஹனிபா (வயது 55), உடையார் காலணியை சேர்ந்த பாலு ஆகியோர் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து முகமது ஹனிபாவை கைது செய்த போலீசார் ரூ.440 மதிப்பிலான குட்கா பொருட்களையும், ஒரு டூவீலரையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பாலு தேடி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடையாள அட்டை, யுபிஐ கார்டு பெறுவதற்கான மனுக்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் சிவக்குமார், கோமதி, மலையாண்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது
    • புதுக்கோட்டையில் குறைதீர் கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 400 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் கலெக்டர் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

    திருமயம் வட்டம், தேக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் அறந்தாங்கி வட்டம், மூக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய 2 நபர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக தலா ரூ.1,00,000 வீதம் ரூ.2,00,000 -க்கான காசேலைகளை கலெக்டர் வாரிசுதாரர்களிடம் வழங்கினார்.

    மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6600 வீதம் ரூ.33,000 மதிப்புடைய விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் யந்திரங்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர்பாஷா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பன்னீர் தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை, திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மற்றும் கறம்பக்குடி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு ஆகியவை இணைந்து மழைக்கால இலவச பொது மருத்துவ முகாம் சுக்கிரன் விடுதியில் உள்ள பன்னீர் தேவர் திருமண மஹாலில் நடைபெற்றது.

    முகாமை தொழில் அதிபர் கரிகாலன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, இந்த அறக்கட்டளையின் மூலம் இந்தப் பகுதியில் இது நான்காவது இலவச பொது மருத்துவ முகாம். இனிவரும் காலங்களில் இப்பகுதியில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அறக்கட்டளை மூலம் சேவைகள் தொடரும் என்றார்.

    முன்னதாக வருகை தந்த அனைவரையும் பழனி அருள்மிகு ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான தங்க ரவிசங்கர் வரவேற்று பேசினார். முகாமில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரவீந்திரன், புதுக்கோட்டை மாவட்ட சித்தா பிரிவு மாவட்ட அலுவலர் வனஜா, கறம்பக்குடி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுயமரியாதை ஆகியோர் மருத்துவ சம்பந்தமான அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று பயன்பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் சித்த மருத்துவ துறையின் மூலம் கபசர குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆடாதொடை கசாயம், முடக்கத்தான் கசாயம் ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் அறக்கட்டளையின் செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.

    • குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல் நடைபெற்றது
    • புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கூலாச்சிக்கொல்லை தெற்கு கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதிக்கு கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இது தொடர்பாக இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் கலங்களாக வந்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் உடனடியாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் கொத்தமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் வாகனங்கள் போக்குவரத்து இன்றி இருபுறமும் அணிவகுத்து நின்றன. இத்தகவல் அறிந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திருவரங்குளம் ஆணையர் வரும் வரை போராட்டம் தொடரும் என்று மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    • தனிநபர் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விராலிமலை தூய்மை பாரத இயக்கம் சார்பில்

    புதுக்கோட்டை:

    விராலிமலையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தனிநபர் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை ஒன்றிய குழு தலைவர் காமு மணி தொடங்கி வைத்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், கலைச்செல்வி, மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, பேருந்து நிலையம், சோதனை சாவடி வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    பேரணியில் திறந்த வெளியில் மலம் கழிக்காதீர், கழிப்பறையை பயன்படுத்துவோம், சிந்தித்து செயல்படுவோம், நாளைய பாரதம் நம் கையில் தூய்மையான பாரதம் உருவாக தூய்மைக்கு துணை நிற்போம், வாய்மைக்கு குரல் கொடுப்போம், கண்ட இடங்களில் எச்சில் துப்புவது நம்மீது நாமே எச்சில் துப்புவதற்கு சமம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக முழக்கமிட்டு சென்றனர்.

    இதில் விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத் தலைவர் தீபன் சக்கரவ ர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இதே போல் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 88 பஞ்சாயத்துக்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார்.
    • டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள முதுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா மகள் மீனாசுந்தரி (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பில். படித்து வந்தார்.

    தினமும் தனது கிராமத்தில் இருந்து அவர் காடவராயன்பட்டியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து பின்னர் பேருந்தில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை பஸ் நிறுத்தத்திற்கு தனது அண்ணன் கனகராஜூடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சோளம் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகவும் குறுகிய சாலையாக இருந்தததால் குறிப்பிட்ட தூரம் வரை டிராக்டரை எந்த வாகனமும் முந்திச் செல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால் அதனையும மீறி கனகராஜ் அந்த டிராக்டரை முந்த முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி டிராக்டருக்கு அடியில் மோட்டார்சைக்கிள் சிக்கிக் கொண்டது. இதில் சாலையில் உருண்டு கனகராஜ் உயிர் தப்பினார். ஆனால் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட மீனா சுந்தரி மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை மற்றும் உடல் நசுங்கி துடிதுடித்து பலியானார். இதைப்பார்த்த அவரது அண்ணன் கனகராஜ் கதறி அழுதார்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான மாணவி மீனாசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மகள் பிணமாக வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதை பார்த்து அவரது பெற்றோர், உறவினர்கள் கதறித் துடித்தனர். மாணவி பலியானதையடுத்து முதுகுளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • அனைத்து கட்சிகள்-அமைப்புகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
    • அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கார் சிலை அமைப்பது குறித்து அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தகூட்டத்தில் விசிக , தி.மு.க., சிபிஐ, சிபிஎம், மஜக, மமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வணிகர் பேரவை,வழக்கறிஞர் சங்கம், அம்பேத்கார் மக்கள் இயக்கம் போன்ற 22 ற்கும் மேற்பட்ட அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர்.

    ஆலோசனையை தொடர்ந்து அறந்தாங்கியில் அம்பேத்கர் திருவுருவ சிலை வேண்டும் என அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி, அரசு விதித்த நிபந்தனைகளை, சிலை அமைப்புக்குழுவினரால் ஏற்கப்பட்டு அனைத்து ஆவணங்கள் விதிமுறைகள் சரி செய்து கொடுக்கப்பட்டும் இதுவரை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்யவில்லை,

    எனவே கலெக்டர் பரிந்துரை வழங்க வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் மாதம் 2-ம் தேதி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றிணைந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பதெனவும், அதிலும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்யவில்லையெனில் 2023ம் ஆண்டில் அனைத்துக் கட்சி மாநில தலைவர்களை அழைத்து சுமார் 10 ஆயிரம் பொதுமக்களை திரட்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கட்சி மற்றும் அமைப்பு நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×