என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர்.DRINKING WATER"
- செயல்படாத குடிநீர் எந்திரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
- அறந்தாங்கி அம்மா உணவகத்தில்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றிற்கு 400க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் காலை சிற்றூண்டி, மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். உணவு சாப்பிட்டவர்கள் குடிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பான் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் குடிநீர் சுத்திகரிப்பான் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக பழுதடைந்து செயல்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சாப்பிட வரக்கூடியவர்கள் வெளியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இது குறித்து புகார் கொடுத்தும், கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஊர்வலமாக தாரை தப்பட்டை அடித்து செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பானுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தினை தொடர்ந்து சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 10 நாட்களுக்குள் உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. போராட்டத்தில் ஒன்றியத் தலைவர் கோபால், மாவட்டத் தலைவர் மகாதீர், மாவட்டக்குழு உறுப்பினர் கஸ்தூரி, முன்னாள் மாவட்டத் தலைவர் கர்ணா, ஒன்றியப் பொருளாளர் சங்கர், ஒன்றியக்கமிட்டி உறுப்பினர்கள் அய்யனார், கிருஷ்ணன்,தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, மாதர் சங்கம் இந்திராணி, லதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கவிபாலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






