என் மலர்
புதுக்கோட்டை
- கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
- மகளிர் போலீசார் புத்தாடை உடுத்தி கலந்து கொண்டனர்
ஆலங்குடி,
ஆலங்குடி காவல் நிலையத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொள்ள ஆலங்குடி மற்றும் செம்பட்டிவிடுதி காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசார் அனைவரும் வந்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பெண் போலீசார் அனைவரும் புத்தாடை அணிந்து வந்திருந்தனர். மகளிர் போலீசார் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டினர். சப் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன், லதா, நதியா, மற்றும் மாவட்ட எஸ்பி. தனிப்பிரிவு வெங்கடேஷ், மற்றும் மணிரெத்தினம் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது.
- கறம்பக்குடி அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதால் பறிமுதல் செய்யப்பட்டது
- 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அக்னி ஆற்றுப்பகுதியில் மணல் அனுமதியின்றி கடத்தப்படுவதாக போலீஸருக்கு தகவல் வந்த நிலையில் கறம்பக்குடி காவல் நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது பட்டத்திக்காடு விளக்கு சாலையில் சென்று கொண்டிருந்த மாட்டு வண்டிகளை வழி மறித்து சோதனையிட்டனர். அதில் உரிய அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மாரியப்பன் கணேசன் சின்னத்தம்பி நடேசன் வீரய்யா ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஆலங்குடி அருகே குளமங்கலம் அய்யனார் கோவில் நடைபெற்றது
- ஜொலி, ஜொலிக்கும் வர்ண விளக்குகளில் வலம் வந்த தெப்பத்தை கண்டு பக்தர்கள் பரவசம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மகத் திருவிழா தொடங்கியது.குளமங்கலம் பெருங்காயைடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில்கோவில் முன்பு உள்ள 33 அடி உயரமுள்ள குதிரை சிலைக்கு அதன் உயரத்திலேயே பொதுமக்கள் பூ மற்றும் காகித மாலைகளை அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு விழாவைெயாட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மாலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச்சாலையிலும் பல கி.மீ. தொலைவுக்கு காத்திருந்து குதிரை சிலைக்கு 2,500க்கும் மேற்பட்ட மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இந்நிலையில் அருகே உள்ள பெரிய குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகள் அலங்காரத்துடன் அமர வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் தெப்பம் இழுக்கப்பட்டது. பின்னர் உற்சவ ரத்தத்திலிருந்து ஆலயத்திற்கு கொண்டு வந்து வைத்தனர்.இதனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
- பொன்னமராவதியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
- தமிழ்மொழியில் பெயர் பலகை வைக்க கூட்டத்தில் வலியுறுத்தல்
பொன்னமராவதி,
பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை, பொன்னமராவதி வர்த்தகர் கழகம் மற்றும் முத்தமிழ்ப்பாசறை இணைந்து ஆட்சிமொழிச்சட்ட விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வர்த்தகர் கழக இணைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கிராமிய பாடகர் வைகை பிரபா தமிழ் வாழ்த்துப்பாடலை பாடினார்.கூட்டத்தில் தமிழ்வளர்ச்சிதுறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சபீர்பானு பங்கேற்று வணிக நிறுவனங்களின் பெயர்பலகைகளை தமிழில் அமைக்க வலியுறுத்தி, ஆட்சி மொழிச்சட்ட விளக்க உரையாற்றினார். முத்தமிழ்ப்பாசறை அறங்காவலர்கள் சந்திரன், மாணிக்கவேலு ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற வணிகர்களுக்கு வணிகர் பயன்பாட்டு சொல்லகராதி வழங்கப்பட்டது. பொன்னமராவதி அரிமா சங்கத்தலைவர்கள் நாகராஜன், சுந்தர்ராஜன், முருகானந்தம், ரவிச்சந்திரன், ரோட்டரி சங்கத்தலைவர் மலைச்சாமி, அரிமா சங்க மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சித்துறை உதவியாளர் சுப்புராம் மற்றும் வர்த்தகர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
- தெருவிளக்குகள், கைப்பம்பு அமைத்து தர வேண்டுகோள்
விராலிமலை,
விராலிமலை ஒன்றிய குழு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் காமு மணி தலைமை வகித்தார். துணத்தலைவர் லதா இளங்குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன், கலைச்செல்வி (கிஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் கண்ணன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் திட்ட பணிகள் மற்றும் தங்கள் கவுன்சிலில் நடைபெற வேண்டிய அத்தியாவசிய பணிகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.சத்தியசீலன் பேசும் போது: பள்ளிகளில் காலை உணவு திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிர் பேருந்து இலவசம் உள்ளிட்ட மக்கள் சார்ந்த பல்வேறு நலத்திட்டப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.மணிகண்டன் பேசும் போது, இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சட்டத்திற்கு புறம்பான குற்றங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க வழிவகை செய்ய வேண்டும். விராலிமலையில் மகளிர் காவல் நிலையம் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முத்துலட்சுமி காளமேகம் பேசும போது: ராஜளிப்பட்டி பகுதிகளில் எர்த் ஒர்க் செய்யப்பட்ட சாலைகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். புரசம்பட்டியில் சிறு பாலம் அமைத்து தர வேண்டும். விடுபட்டுள்ள தெருக்களில் தெரு விளக்கு அமைத்து தர வேண்டும்.கல்லுக்காட்டுப்பட்டி இடுகாட்டில் கைப்பம்பு அமைக்க வேண்டும். சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும்.சுப்பிரமணி யன்:மேப்பூதகுடி மயான சாலை, வானதிராயன்பட்டி ஊராட்சியில் பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளது சீரமைத்து தர வேண்டும். மேப்பூதகுடி ஒத்தக்கடையில் கட்டப்பட்டுள்ள நீர் தொட்டிக்கு போர் அமைத்து நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் காமுமணி உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என்றார். முடிவில் மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
- தட்டான்வயல் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு எல்கை பந்தையம் நடைபெற்றது
- ரூ.1.80 லட்சம் ரொக்கப்பணம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது
அறந்தாங்கி,
மணமேல்குடி தாலுகா தட்டான்வயல் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ முத்து முனீஸ்வரர் கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் நடுமாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 56 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன. பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை தட்டான்வயல் கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
- இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
- வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆலங்குடி.
புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த காட்டுப்பட்டி கணேசன் மகன் விகாஷ் (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்த ஜெய ராமன் மகன் கிருபாநிதி (வயது 20) ஆகிய இருவரும் ஆலங்குடி வழியாக அறந்தாங்கியை நோக்கி ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இதே போல் ஆலங்குடி அருகில் உள்ள தெற்கு பார்த்தம்பட்டியை சேர்ந்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (19). அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (26) இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அண்ணாநகர் பாலம் அருகில் வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது . இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை அதிக படுத்த கோரிக்கை
- கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை அதிகப்படுத்த கோரியும், வேலை அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க கோரியும், பணித்தளத்திற்கு வருவதை காலை 9 மணியாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் அம்பலராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலியபெருமாள், சாமி கண்ணு, முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாசி மக திருவிழாவையொட்டி நடைபெற்றது
- மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி உலா நடைபெற்றது.
புதுக்கோட்டை,
மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் சாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் தெப்ப உற்சவம் பல்லவன் குளத்தில் நடைபெற்றது. இதில் சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமி உலா நடைபெற்றது. சாமி தரிசனத்திற்காக பல்லவன் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தெப்பம் வலம் வரும்போது பக்தர்கள் சிவ, சிவா... என பக்தி கோஷமிட்டனர். தெப்பம் கரையை வந்தடைந்ததும் சாமி புறப்பாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சாந்தநாத சாமி, வேதநாயகி அம்பாள் எழுந்தருளினர். கீழ ராஜ வீதி உள்பட நான்கு வீதிகளிலும் சாமி வீதி உலா நடைபெற்றது.இதேபோல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில்,தி ருவேங்கைவாசல் சிவன் கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தலைவலியால் அவதிப்பட்ட பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் சூடாக ஒரு டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார்.
- தூக்கத்தில் இருந்த கனகுவும் எழுந்து மாமியாருக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவி கனகு (42) மற்றும் ஒரு மகனுடன் அதே ஊரில் வசித்து வருகிறார்.
கணவர் இறந்து விட்டதால், பழனியம்மாள் தனது மகனுடன் தங்கியுள்ளார். விவசாய கூலி வேலைக்கு செல்லும் சுப்பிரமணி நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி, மகன், தாயுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.
இந்த நிலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தலைவலியால் அவதிப்பட்ட பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் சூடாக ஒரு டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். தூக்கத்தில் இருந்த கனகுவும் எழுந்து மாமியாருக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.
அப்போது டீ மிகவும் ஆறிப்போய் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள் மருமகளை திட்டியுள்ளார். நள்ளிரவில் டீ போட்டு கொடுத்ததற்கு நன்றி கூறாமல் இப்படி திட்டுகிறீர்களே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் என்றும் பாராமல் சரமரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் வலியால் கூச்சல் போட்டார்.
இதைக்கேட்டு தூங்கி எழுந்த பழனியம்மாளின் மகன் சுப்பிரமணி மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாளை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த இலுப்பூர் போலீசார் பழனியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்தனர்.
சர்வதேச மகளிர் தினமான இன்று மாமியாரை மருமகள் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது.
- குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சிகிச்சையின்போது கடந்த 21 மாதங்களில் 247 பச்சிளம் குழந்தைகள் இறந்ததாக தகவல் வெளியானது.
இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் டீன் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்டிருந்ததற்கு பதில் அளிக்கப்பட்டதில் கடந்த 21 மாதங்களில் 247 குழந்தைகள் இறந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த குழந்தைகள் சிகிச்சை பலன் இல்லாமல், சிகிச்சை சரியில்லாமல் இறக்கவில்லை. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், எடைக்குறைவு, மூச்சுத்திணறல், பிறவி குறைபாடு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்கள் தான் இறந்துள்ளன.
ராணியார் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரசவ சிகிச்சை நல்ல முறையில் அளிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்'' என்றார்.
- ஒருபுறம் காதல் கணவன் கைவிட்டாலும், பிறந்த வீடு தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் வந்த வைதேகிக்கு என்ன ஏமாற்றமே மிஞ்சியது.
- காதலித்து 8 மாத காலம் இளம்பெண்ணோடு வாழ்ந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள மங்களநாடு பகுதியைச் சேர்ந்தவர் வைதேகி (வயது 22). இவர் தன்னை விட 2 வயது குறைந்தவரான தொண்டைமானேந்தல் பகுதியை சேர்ந்த வல்லரசு (20) என்பவரை தீவிரமாக காதலித்து வந்தார். அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மணமேல்குடி கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, பின்னர் பெற்றோருக்கு பயந்து, மதுரையில் 4 மாதமும், கோத்தகிரியில் 3 மாதமும் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் கோத்தகிரியில் இருந்தபோது காதல் திருமணம் கசந்து இருவருக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வல்லரசு, வைதேகியை அங்கேயே விட்டுவிட்டு தனது பெற்றோருடன் வந்து சேர்ந்துள்ளார்.
காதல் கணவர் கைவிட்ட நிலையில், கோத்தகிரியில் தனியாக தவித்த வைதேகி பாதுகாப்பு கருதி தனது சொந்த ஊருக்கு திரும்பி பெற்றோரிடம் தன்னை சேர்த்துக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால் தங்களை மறந்து எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட மகளை அவர்கள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
ஒருபுறம் காதல் கணவன் கைவிட்டாலும், பிறந்த வீடு தன்னை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் வந்த வைதேகிக்கு என்ன ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் கணவர் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்றார். ஆனால் அங்கு மாமனார், மாமியார், கணவர் உள்ளிட்டோர் வைதேகியை தாக்கி அங்கிருந்து துரத்தியுள்ளனர்.
இதனால் செய்வதறியாமல் திகைத்த வைதேகி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த வைதேகி இறந்து விடலாம் என கருதி விஷம் அருந்தினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு தனது கணவர் வல்லரசு வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே வல்லரசு மற்றும் மாமனார், மாமியார் உள்ளிட்டோர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் போலீசார் வைதேகியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி காப்பகம் ஒன்றில் அவரை அனுமதித்தனர்.
மேலும் விசாரணையை தொடங்கிய போலீசார் தலைமறைவர்களை தேடி வருகின்றனர். காதலித்து 8 மாத காலம் இளம்பெண்ணோடு வாழ்ந்துவிட்டு உதறித் தள்ளிய இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






