என் மலர்
பெரம்பலூர்
- இளம்பெண்கள் மாநாட்டில் வலியுறுத்தல்
- பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்
பெரம்பலூர்
பெரம்பலூரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாவட்ட இளம்பெண்கள் மாநாடு, சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரியா தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் வரவேற்றார். இதில் சங்கத்தின் மாநில பொருளாளர் பாரதி கலந்து கொண்டு சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். பாலின சமத்துவத்தை வலியுறுத்த வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடி விசாரணையும், அதற்குரிய தண்டனைகளையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடங்களில் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
- 14 மனுக்கள் மீது உடனடி தீர்வு
- பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 31 மனுக்களில், 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.
- தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது
- வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் அருகில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- தமிழ்வளர்ச்சித்துறை அலுவலகத்தில் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
- முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை
பெரம்பலூர்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை (வயது) முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணியாற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.in இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள்ளும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்க பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, என்று அந்தந்த மாவட்ட
- பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது
- கைரேகை நிபுணர்கள் , மோப்பநாய் உதவியுடன் மங்களமேடு போலீசார் விசாரணை
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே லப்பை குடிகாடு உள்ளது. கட்டுப்பாடு நிறைந்த இந்த பகுதியில் உள்ள ஜாமாலியா நகரில் வசித்து வருபவர் முகமது சுல்தான் என்பவரின் மகன் ஜாகீர் உசேன்(வயது 51).இவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் திருச்சிக்கு சென்றுள்ளார். அங்கு தனியார் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவரை சந்தித்து, உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்ற பின்பு மீண்டும் மாலையில் வீடு திரும்பி உள்ளார்.வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் உடனே மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். கைரேகை நிபுணர்கள், மோப்பநாயுடன் வந்த மங்களமேடு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ள கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அவர் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்ற மோப்ப நாய் முக்கிய சாலை வரை சென்று நின்று விட்டது.ஊர் கட்டுப்பாடு மிகுந்த லப்பைகுடிகாடு பகுதியில் பட்டப்பகலில், ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அனைத்து தெருக்களின் பெயர்களை தமிழில் வைக்க கோரிக்கை
- வர்த்தக நல சங்க கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர்
வேப்பந்தட்டை: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் வர்த்தக நல சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் உமர் கத்தாப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், அரும்பாவூர் கடை வீதியில் உள்ள தெரு விளக்குகளை சரி செய்து, கூடுதலாக தெரு விளக்குகளை அமைத்து தர பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது. அனைத்து தெருக்களுக்கும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்வது. கடைவீதிகளில் பொதுக்கழிவறை ஒன்றுகூட இல்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பயன்படுத்தும் வகையில் பொது கழிவறை அமைத்து தர வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நகர வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்
- அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ரூ.12,500 வழங்க உத்தரவு
- நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அதிரடி உத்தரவு
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தை சேர்ந்தவர் சையத் ஹூசைன். வழக்கறிஞர். இவர் கடந்த 13.3.2022 அன்று வாழப்பாடிக்கு சென்றுவிட்டு, ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வந்த அரசு போக்குவரத்துக்கழக பஸ்சில், தனது 2 உறவினர்களுடன் பயணம் செய்தார். இதில் வழக்கமான பஸ்களில் சாதாரண கட்டணம் ரூ.36 ஆகும். ஆனால் அரசு போக்குவரத்து கழக விரைவு பஸ் என்று கூறி ரூ.45 கட்டணம் கேட்டதால், 3 பேருக்கும் சேர்த்து கண்டக்டரிடம் ரூ.135 செலுத்தி, சையத் ஹூசைன் பயண சீட்டுகளை பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த பஸ் அனைத்து பஸ் நிறுத்தங்களில் நின்று பெரம்பலூருக்கு 2 மணி நேரம் 15 நிமிடத்தில் வந்தடைந்தது. வழக்கமாக ஆத்தூர்-பெரம்பலூர் இடையேயான பயண நேரம் சுமார் 1 மணி 45 நிமிடம் ஆகும். ஆனால் விரைவு பஸ்சுக்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு, அந்த பஸ் தாமதப்படுத்தி, பெரம்பலூர் வந்ததால், சையத் ஹூசைன் மனநெருக்கடிக்கு ஆளானார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் சையத் ஹூசைன் அரசு போக்குவரத்து கழக திருச்சி கோட்ட மேலாளர் மற்றும் பெரம்பலூர் டெப்போ கிளை மேலாளர் ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஜவகர், நீதிமன்ற உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர், மனுதாரருக்கு சேவை குறைபாடு செய்து அவருக்கு மனஉளைச்சல் ஏற்படுத்தியமைக்கு நிவாரணமாக ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை எதிர்மனுதாரர்கள் இருவரும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- வீட்டின் கதவை உடைத்து துணிகரம்...
- ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் ராஜா(வயது 40). பொம்மை வியாபாரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ராஜா அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- பொதுத்தேர்வில் ஆப்செண்ட் ஆனவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்தப்படும்
- அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்
பெரம்பலூர்,
தமிழகத்தில் பிளஸ் 2 தமிழ் பாடத்தேர்வினை எழுதாத மாணவ, மாணவிகளுக்காக மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குன்னம் பஸ்ஸ்டாப் புதிய கட்டடம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.தொடர்ந்து குன்னம் எம்எல்ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான நூலகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து, அங்கிருந்த குறிப்பேட்டில் தான் கலைஞர் படிப்பகத்தை திறந்து வைத்தது பெருமை, மகிழ்ச்சி என்றும், அமைச்சர் சிவசங்கரின் பணி தொடர வாழ்த்துக்கள் எனவும் எழுதி கையெழுத்திட்டார்.பின்னர் அமைச்சர் உதயநிதி நிருபர்களிடம் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது வருகிறது. இதில் தமிழ் பாடத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளவில்லை. தமிழக அரசு தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகல்வித்துறை அமைச்சரிடம் பேசி மீண்டும் மறுத்தேர்வு நடத்தி தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும். அதற்கான நடவடிக்கையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மேற்கொள்வார்திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் பத்தாண்டுகளாக அதிமுக அரசு பெரம்பலூரில் அரசு மருத்துவ கல்லூரியை அமைக்காமல் அதை கிடப்பில் போட்டுவிட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகி மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கும். பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் சிந்தடிக் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பேட்டியின்போது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
- பொதுக்கூட்டத்திற்கு பங்கேற்க காரில் சென்றபோது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
- பா.ஜ,க.வினர் சாலை மறியல் போராாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திண்டிவனம் நகரில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா காரைக்குடியிலிருந்து திருச்சி, பெரம்பலூர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே வரும் பொழுது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் தலைமையிலான கடலூர் மாவட்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.திண்டிவனத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், விடுதலை சிறுத்தை கட்சியினர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை கைது செய்வதாகவும் தெரிவித்தனர்.காவல்துறையினரின் விளக்கத்தை ஏற்று கைதுக்கு எச். ராஜா சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அவரது காரிலேயே கடலூர் மாவட்டத்திற்கு போலீசார் கைது செய்து அழைத்து ெசன்றனர்.எச். ராஜா கைது செய்யப்படுவதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் , பா.ஜ.க.வினர் காவல்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது
- பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தடையை மீறி சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பிடிபட்டவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை
- மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் இந்திரா நகரை சோ்ந்த கணேசனின் மகன் ரோஹித் ராஜை (வயது 14) நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் மது பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






