என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டு பூட்டைஉடைத்து 15 பவுன் நகை கொள்ளை
- பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது
- கைரேகை நிபுணர்கள் , மோப்பநாய் உதவியுடன் மங்களமேடு போலீசார் விசாரணை
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே லப்பை குடிகாடு உள்ளது. கட்டுப்பாடு நிறைந்த இந்த பகுதியில் உள்ள ஜாமாலியா நகரில் வசித்து வருபவர் முகமது சுல்தான் என்பவரின் மகன் ஜாகீர் உசேன்(வயது 51).இவர் மருத்துவ பரிசோதனைக்காக தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் திருச்சிக்கு சென்றுள்ளார். அங்கு தனியார் மருத்துவமனையில் உள்ள சிறப்பு மருத்துவரை சந்தித்து, உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்ற பின்பு மீண்டும் மாலையில் வீடு திரும்பி உள்ளார்.வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் உடனே மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். கைரேகை நிபுணர்கள், மோப்பநாயுடன் வந்த மங்களமேடு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ள கொள்ளையர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அவர் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சென்ற மோப்ப நாய் முக்கிய சாலை வரை சென்று நின்று விட்டது.ஊர் கட்டுப்பாடு மிகுந்த லப்பைகுடிகாடு பகுதியில் பட்டப்பகலில், ஒரு வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






