என் மலர்
பெரம்பலூர்
- சென்னை - முதல் குமரி வரை பெண் போலீசார் சைக்கிள் பேரணி
- திருமாந்துறை சுங்கச்சாவடியில் வரவேற்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் 50-வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி 100-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர்களை திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- மாவட்ட காவல்துறை எஸ்பி தொடங்கி வைத்தார்
- ரோந்து போலீசாரின் செல்போன்களை பெற்று பொதுமக்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தல்
பெரம்பலூர்
பெரம்பலூர் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறா வகையில் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசார் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்களுடன் இரு சக்கர வாகனங்களில் செல்லும் ரோந்து பணியை மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், சிறப்பு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் எந்தவித குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் ரோந்து பணிபுரிந்தும், சந்தேகப்படும் வகையில் உள்ளவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தும், நகரில் பூட்டியுள்ள வீடுகள் மற்றும் அதில் வசித்து வருபவர்களின் தகவல்களை சேகரித்தும், வாகன தணிக்கை செய்தும் குற்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் திறம்பட செயல்படுவார்கள்.எனவே பெரம்பலூர் நகரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள், உங்கள் பகுதியில் ரோந்து அலுவல் மேற்கொள்ளும் போலீசாரின் செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு, தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தை 24 மணி நேரமும் 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார். முன்னதாக கடந்த 10-ந்தேதி பெரம்பலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒருவர் விட்டு சென்ற ரூ.10 ஆயிரத்தை ஓட்டல் உரிமையாளர் நல்ல பூவான் என்பவர் எடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு போலீஸ் நிலையத்தில் கொடுத்து சென்றார். அவரின் செயலை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நல்ல பூவானை நேரில் அழைத்து பாராட்டி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தீராத உடல் உபாதை காரணமாக தற்கொலை என தகவல்
- பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர், செட்டிக்குளத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு எதிர்புறம் மலைமேல் பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இக்கோவில்களில் எழுத்த ராக தண்டாயுதபாணி(வயது 50) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு பிரகதாம்பாள்(42), என்ற மனைவியும் ஹரிஹரன்(15) என்ற மகனும் உள்ளனர். இவருக்கு தீராத உடல் உபாதை இருந்ததாக கூறப்ப டுகிறது. பல இடங்களில் சிகிச்சை செய்தும் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரதிருவிழா தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோயில் எழுத்தர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு அலுவலர்கள் பேச்சு வார்த்தை
- சுத்தமான குடிநீர் வழங்குவதாக உறுதி
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர். நன்னை ஊராட்சியில் இருந்து கிளியூர் பகுதிக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கிளியூர் பகுதிக்கு வழங்கப்படும் குடிநீர், பொதுமக்கள் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும், அதிக அளவில் சுண்ணாம்பு சத்து கலந்து இருப்பதால் இதனைப் பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்களும், சிறுநீரக கோளாறும் ஏற்படுகிறது.சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் செயல்படுத்தாததால் ஆத்திரம் அடைந்த கிளியூர் பொதுமக்கள், தங்களுக்கு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் குடிநீர் வழங்க கோரி திடீரென நன்னை துணை மின் நிலையம் அருகில் பெருமத்தூர் சாலையில், காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், குன்னம் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து தூய குடிநீர் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதனை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் பெருமத்தூர் நன்னை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மேற்கூரை இரும்புகள் துரு பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளன
- அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி பெரியம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரைகள் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளதாலும், இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆதிதிராவிடர்-பழங்குடியினருக்கு வழங்கப்பட உள்ளது
- இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
பெரம்பலூர்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் உள்ள ஒரு அழகு கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தர சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் பணிபுரிய 100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெறலாம் மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் என தாட்கோ மேலாண்மை இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
- வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பெரம்பலூர்,
பங்குனி மாத முதல் பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில், பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், செட்டிகுளத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், குரும்பலூர் பஞ்சநந்தீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாச்சலேஸ்வரர் கோவில், திருவாளந்துறை தோளீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் உள்ள நந்தி பெருமானுக்கும், மூலவர் சிவனுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடந்தது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் நந்தி பெருமானை வழிப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- புதிய பஸ் நிலையம் அருகே நின்ற இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
- உரிமையாளர்கள் வரவழைத்த போலீசார் அபராதம் வசூலித்தனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக புகார்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தன. அதனை தொடர்ந்து பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில், நகர போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் நேற்று புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி நகர போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அதன் உரிமையாளர்களை வரவழைத்து போலீசார் அபராதம் வசூலித்து, இரு சக்கர வாகனங்களை கொடுத்து எச்சரித்து அனுப்பினர். பெரம்பலூர் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி எச்சரித்தார்.
- ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு கட்டுடலை காட்டி அசத்தினர்
- பெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது
பெரம்பலூர்,
மிஸ்டர் பெரம்பலூர் ஆணழகன் போட்டியில் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். வயது மற்றும் எடை அடைப்படையில் பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்கள் தங்கள் கட்டுடல்களை காட்டி பார்வையாளர்களை அசத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசும் பணமுடிப்பும் பரிசாக வழங்கப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினர்
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
பெரம்பலூர்
பருக்கல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி மகேஸ்வரி(வயது 50). இவரும், அதே ஊரை சேர்ந்த அறிவழகனின் மனைவி வேம்புவும்(42) அப்பகுதியில் மது பாட்டில்களை விற்றது போலீசாருக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மகேஸ்வரி, வேம்பு ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
- பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருப்பதாக குற்றச்சாட்டு
- மழைகாலங்களில் தண்ணீர் வருவதற்கு ஏதுவாக தூர் வார கோரிக்கை
பெரம்பலூர்
சின்னாறு நீர்த்தேக்கத்தில் வரத்து வாய்க்கால்கள் மற்றும் பாசன வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் வரத்து வாய்க்கால்கள் மூலம் சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வருவதில்லை. மேலும் மழைக்காலங்களில் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் செல்வதில்லை. நீர்த்தேக்கத்தை தூர்வாருகிறோம் என்று கூறி அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காவல்துறையில் பணியாற்ற அதிகளவில் பெண்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி. அழைப்பு
- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது
குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற பெண்கள் என்ற தலைப்பில் பெண் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கினார். கல்லூரி, மாணவிகளிடம் பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்தும் பேசினார். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது பெண்கள், பணிபுரியாத துறைகளே இல்லை என்றே கூறலாம். மேலும் அவர்கள் அத்துறைகளில் பல சாதனைகளும் செய்து வருகின்றனர். இன்றைய பெண்கள், மன தைரியத்துடனும் மன வலிமையுடனும், தங்களது துறைகளிளோ அல்லது வாழ்க்கையிலோ உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள முன்வர வேண்டும். கல்லூரி மாணவிகள் காவல்துறையில் சேர்ந்து அதிகம் அளவில் பணியாற்ற முன் வர வேண்டும். அவ்வாது பணியாற்ற முன்வரும் பெண்களுக்கு வழி காட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்படும். கல்லூரி மாணவிகள் அவர்களின் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இலவச உதவி எண்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.






