என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். செயலாளர் பால்சாமி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள், ஊழியர்கள் வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750-ம், அகவிலைப்படியையும் வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை ஈர்த்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • டாஸ்மாக் கடைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒத்திகை
    • கூடுதலாக 10 வசூலிக்கப்பட்டு திரும்ப தரப்பட்டது

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 37 டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் ஒத்திகை திட்டம் நேற்று முதல் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு முன்னதாகவே டாஸ்மாக் கடைக்கு முன்பு மது பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க குவிந்தனர். டாஸ்மாக் கடையின் முன் காலி மது பாட்டிகளை திரும்ப பெறும் ஒத்திகை திட்டம் குறித்து மது பிரியர்களின் பார்வையில் படும்படியாக சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. சரியாக மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்தவுடன் மது பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்க கையில் பணத்துடன் நின்றனர். அப்போது மது பிரியர்களிடம், டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்கள் மது பாட்டில்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும், மது குடித்து விட்டு காலி பாட்டிலை மீண்டும் அதே கடையில் கொடுத்தால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.10 திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டில்களில் ஓட்டப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் விற்பனையாளர்கள் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலித்தனர். வாக்குவாதம் மது பிரியர்களில் சிலர் கூடுதலாக எவ்வளவு வசூலித்தாலும் பரவாயில்லை. மது பாட்டில்களை சீக்கிரம் கொடுங்கள் என்று வாங்கி சென்றனர். இந்த திட்டம் குறித்து தெரியாத பெரும்பாலான மது பிரியர்கள் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது குறித்து விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு விற்பனையாளர்கள் திட்டம் குறித்து விளக்கம் அளித்ததால் வாக்குவாதத்தை கைவிட்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான மது பிரியர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டிலை, டாஸ்மாக் கடையில் கொடுத்து ரூ.10-ஐ திரும்ப பெற்று சென்றனர். சிலர் காலி தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்து வந்து, அதில் மதுவை ஊற்றி விட்டு காலி மது பாட்டிலை திரும்ப ஒப்படைத்து ரூ.10-ஐ பெற்று சென்றதை காணமுடிந்தது. டாஸ்மாக் பணியாளர்கள் காலி மது பாட்டில்களில் ஸ்டிக்கர் உள்ளதா? என்று பார்த்து வாங்கி மது பிரியர்களுக்கு ரூ.10-ஐ திரும்ப கொடுத்தனர்.

    • 70 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
    • லாரி டியூபுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, பிள்ளாங்குளத்தில் காட்டு கொட்டகையில் வசித்து வரும் பெருமாள் என்ற கொளஞ்சி (வயது 56) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை லாரி டியூப்கள் மற்றும் பாக்கெட்டுகளில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை கண்ட போலீசார் கொளஞ்சியை கைது செய்து, சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்த சுமார் 70 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும், என்று போலீசார் தெரிவித்தனர்.

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 42). விவசாயியான இவர் அவ்வப்போது மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக, அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • லாட்டரி சீட்டுகள் விற்ற 2 முதியவர்கள் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்த 19 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.650 பறிமுதல் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது பழைய பஸ் நிலையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்ற பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையை சேர்ந்த ராஜாராம் (வயது 69), அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த குணசேகரன் (69) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 19 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.650 பறிமுதல் செய்யப்பட்டது.


    • வாகனம் மோதி பெண் பலியானார்
    • போலீசார் இதுகுறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கழனிவாசல் கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகள் கொளஞ்சி(வயது 45). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த நிலையில் இவரை, அவரது உறவினர்கள் பராமரித்து வந்தனர். நேற்று காலை அவர் தனது உறவினர் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடினர்.

    அப்போது அவர் திருமாந்துறை-அகரம்சீகூர் சாலையில் வாகனம் மோதி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார், கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொளஞ்சி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • குன்னம் பஸ் டெப்போ அறிவிப்புக்கு வரவேற்பு-கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி செயல்படுத்த கோரிக்கை வைத்தனர்
    • அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் புதிய பஸ் டெப்போ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    பெரம்பலூர்

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சில தினங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் புதிய பஸ் டெப்போ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. குன்னம் தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடூர் சாத்தனூர், மூங்கில் பாடி, ஆதனூர், கொட்டாரை மற்றும் வேப்பூர் பகுதிகள் அமைந்துள்ளன.

    இந்த பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். ஆகவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திலும் கலெக்டர் மூலமாக கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து புதிய பஸ் டெப்போ அறிவிப்பு வந்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக குன்னம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவர் கூறும் போது,இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அதேபோன்று விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏதுவாக இந்த புதிய பஸ் டெப்போ இருக்கும் என்று கருதுகிறோம்.

    ஆகவே தமிழக அரசு அறிவித்துள்ள புதிய டெப்பாவுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார்.துறைமங்கலம் பஸ் டெப்போ அதிகாரி ஒருவர் கூறும்போது, குன்னம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அளவுக்கு பஸ்களை இயக்க இது உதவும். பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வரும். அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமையவும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்றார்.

    சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கூறும் போது,தற்போது கொட்டாரை மருதையாறு அணைக்கட்டு மற்றும் காரைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய தொல்பொருள் பூங்காவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதற்கு ஒரு விடிவு பிறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • சு.ஆடுதுறை ஊராட்சியில் கோவில் நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சு.ஆடுதுறை ஊராட்சியில் ஒரு சமுதாயத்திற்கு சொந்தமான பெரியாண்டவர் கோவில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தபோது அதே ஊரை சேர்ந்த ஒருவர் 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு வருவது தெரியவந்துள்ளது. இதனால் அந்த சமுதாய மக்கள் நிலத்தை சரியாக அளந்து கல்நடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு ஆக்கிரமிப்புக்காரர் நிலத்தில் பயிரிட்டுள்ளதாக கூறப்படும் நபர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்கக்கோரி அந்த சமுதாய மக்கள் திருமாந்துறை-அகரம்சீகூர் சாலையில் குருசாமி என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்திரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கீதா ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் பயிர் அறுவடை செய்த பின், ஒரு மாத கால அவகாசத்தில் நில அளவை செய்யபடும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பெரம்பலூர் பணிமனை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மத்திய சங்க பொருளாளர் சிங்கராயர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போக்குவரத்து ஊழியர்கள் தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறைக்கான மானிய கோரிக்கையில் தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றும், கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும். தற்போது பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்த நிலுவை, அகவிலைப்படி நிலுவை, கொரோனா காலத்தில் பணி செய்தவர்களுக்கான சிறப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்."

    • புத்தக திருவிழாவை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் நடைபெறும் புத்தகத் திருவிழாவை மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திகொள்ளுமாறு டத்தோ பிரகதீஸ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் பெரம்பலூர் நகராட்சி திடலில் 8வது புத்தகத் திருவிழா கடந்த 25 ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறும்.

    இந்த புத்தகத்திரு விழாவில் ஏழாம் நாளான இன்று (வெள்ளிக் கிழமை). ப்ளஸ் மேக்ஸ் குருப் ஆப் கம்பெனி சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பூலாம்பாடி டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டு இன்றைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேச உள்ளார்.

    மேலும் எழுத்தாளர் அகர முதல்வன் "அறம் எனும் பொறுப்பு" எனும் தலைப்பில் கருத்துரை வழங்க உள்ளார்.

    தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ் அமுதத்தமிழ் ஆடரங்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

    இது குறித்து டத்தோ பிரகதீஸ்குமார் தெரிவிக்கையில்.

    வாசிப்பு ஒருமனிதனை மேம்படுத்தும். நல்ல புத்தகங்களை படிக்கும் போது விசாலமான சிந்தனையும், பிறதுறை அறிவும் ஏற்படும்.எனவே புத்தக வாசிப்பு அவசியமாகிறது. ஒரே அரங்கின் கீழ் அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும் என்பதால் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவை நம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    • வாகனம் மோதி வாலிபர் பலியானார்
    • எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள மகாராஜா ஹோட்டல் எதிரே இன்று அதி காலை 3-மணி அளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    • ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் கோயில் இடத்தில் கடை நடத்தும் நபரிடம் வரி ரசீது போடுவதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோயில் எழுத்தர் ரவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    பெரம்பலூரில் இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த மதனகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சலூன் கடை நடத்தி வரும் பெரம்பலூர், காந்தி நகரைச் சேர்ந்த குப்புசாமி மகன் சிங்காரம் (வயது 45). என்பவர் தொடர்ந்து கடை நடத்துவதற்கு அந்த இடத்தின் வரி ரசீது போட்டு தருமாறு கோயில் எழுத்தர் ரவியுடம் கேட்டுள்ளார். அதற்கு ரவி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதன்படி சிங்காரத்திடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற கோயில் எழுத்ர் ரவியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் ரவியை சஸ்பெண்ட் செய்து கோயில் உதவி ஆணையரும், தக்கருமான லட்சுமணன் உத்தரவிட்டுள்ளார்.

    ×