என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னம் பஸ் டெப்போ அறிவிப்புக்கு வரவேற்பு-கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி செயல்படுத்த கோரிக்கை
- குன்னம் பஸ் டெப்போ அறிவிப்புக்கு வரவேற்பு-கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி செயல்படுத்த கோரிக்கை வைத்தனர்
- அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் புதிய பஸ் டெப்போ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
பெரம்பலூர்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் சில தினங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் புதிய பஸ் டெப்போ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. குன்னம் தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடூர் சாத்தனூர், மூங்கில் பாடி, ஆதனூர், கொட்டாரை மற்றும் வேப்பூர் பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். ஆகவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திலும் கலெக்டர் மூலமாக கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து புதிய பஸ் டெப்போ அறிவிப்பு வந்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக குன்னம் பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவர் கூறும் போது,இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. அதேபோன்று விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். இந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏதுவாக இந்த புதிய பஸ் டெப்போ இருக்கும் என்று கருதுகிறோம்.
ஆகவே தமிழக அரசு அறிவித்துள்ள புதிய டெப்பாவுக்கு உடனடியாக நிதி ஒதுக்கி கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார்.துறைமங்கலம் பஸ் டெப்போ அதிகாரி ஒருவர் கூறும்போது, குன்னம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அளவுக்கு பஸ்களை இயக்க இது உதவும். பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வரும். அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் அமையவும் வாய்ப்பு உருவாகி உள்ளது என்றார்.
சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் கூறும் போது,தற்போது கொட்டாரை மருதையாறு அணைக்கட்டு மற்றும் காரைப் பகுதியில் அமைந்துள்ள தேசிய தொல்பொருள் பூங்காவுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதற்கு ஒரு விடிவு பிறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.






