என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறும் சந்து கடைகளை மூடக்கோரி மறியல்
    X

    24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறும் சந்து கடைகளை மூடக்கோரி மறியல்

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு அங்குள்ள பாலக்கரை பகுதியில் 2 அரசு மதுபான கடை இருந்தது.
    • சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மாவட்ட கலெக்டர் வந்து உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என உறுதியாக கூறினர்.

    அரும்பாவூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அரும்பாவூரை சுற்றி மேட்டூர், கொட்டாரக்குன்று, மலையாளபட்டி, பூமிதானம், கோரையாறு, தொண்டமாந்துறை, தழுதாழை, தலைநகர், பெரியபாளையம், இந்திரா நகர், பூலாம்பாடி போன்ற ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் மையப்பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அங்குள்ள பாலக்கரை பகுதியில் 2 அரசு மதுபான கடை இருந்தது.

    அப்போது பொதுமக்கள் கோவில் மற்றும் பள்ளிக் கூடம் அருகில் இருப்பதை காரணம் காட்டி அங்குள்ள மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் அரும்பாவூரில் உள்ள 2 மதுபான கடைகளையும் மூடிவிட்டது.

    அதன் பிறகு ஊருக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் மதுபான கடைகளை திறக்காமல் இருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் அரும்பாவூரில் உள்ள ஒவ்வொரு வார்டு பகுதிகளுக்கும் தலா 2 சந்துக்கடை என 20-க்கும் மேற்பட்ட கடைகளை திறந்து எந்த நேரமும் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வந்தனர்.

    இதனால் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்வது கிடையாது. அப்படியே சென்றாலும் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் மதுவுக்கே செலவு செய்கின்றனர் என்று குற்றச்சாட்டு மேலோங்கி உள்ளது. குடும்ப பெண்கள் பலரும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    இந்த கடைகளை மூட வலியுறுத்தி பல முறை அப்பகுதி பெண்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை அரும்பாவூர் பாலக் கரையில் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒருசில பெண்கள் தங்களது உடலில் மண்எண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து காப்பாற்றினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து அரும்பாவூர் பகுதியில் சந்து கடை இல்லாமல் முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    இந்த கடைகளில் 24 மணி நேரமும் மதுபானம் கிடைப்பதால் மதுபான பிரியர்கள் எந்த நேரமும் மது குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபடுகின்றனர். எனவே மதுபான கடையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மாவட்ட கலெக்டர் வந்து உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என உறுதியாக கூறினர்.

    இதனை தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சந்து கடைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த மறியலால் அரும்பாவூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×