என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூர் லப்பைகுடிக்காட்டில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது
- கபடியில் போலீசும், கைப்பந்தில் பொதுமக்களும் வெற்றிவாகை சூடினர்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காட்டில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக கபடி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பாக ஒரு அணியும் பொதுமக்கள் சார்பாக ஒரு அணியும் என இரு அணிகள் கலந்து கொண்டனர். இரண்டு அணியும் சிறப்பாக விளையாடிய நிலையில் இறுதியாக கைப்பந்து போட்டியில் பொதுமக்கள் அணியும் கபடி போட்டியில் காவல்துறை அணியினரும் வெற்றி வாகை சூடியது.
விளையாட்டு போட்டியின் இறுதியாக வெற்றி பெற்ற அணியினருக்கும் சிறப்பாக விளையாடியவர்களை பாராட்டியும் பரிசு பொருட்களை மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளா தேவி வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மங்களமேடு டி.எஸ்.பி. சீராளன், மங்களமேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நடராஜன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேசுவரன் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- மதுபானம் விற்ற முதியவர் கைது செய்யபட்டார்
- அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள பென்னக்கோணம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மது விலக்கு சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையில் போலிசார் பென்னக்கோணம் பகுதியில் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது பென்னக்கோணத்தில் வேலு மகன் பெரியசாமி (வயது 82) வீட்டில் சட்டவிரோதமாக அரசு மதுபானபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.
அங்கு மதுபாட்டில்களை வைத்து விற்றுக்கொண்டு இருந்த பெரியசாமியை மது விலக்கு போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்த பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமம் 3-வது வார்டு, காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் நந்தினி(வயது 16). தமிழ்ச்செல்வி எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நந்தினி, எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயின்று அரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு, தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மணிகண்டன், தமிழ்ச்செல்வி வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மதியம் 1.45 மணியளவில் வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் நந்தினி பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வாலிகண்டபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் உள்படமொத்தம் 263 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பை டி.வி. உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள், பா.ஜ.க.வினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
- புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி(வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி சம்பவத்தன்று விஷம் குடித்து மயக்கமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
- 2 போ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
- குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் இந்திரா நகரை சேர்ந்த கணேசனின் மகன் ரோஹித் ராஜ்(வயது 14). இவன் கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதி கொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில், அவனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சீனி என்ற சீனிவாசன் (22), திருநகரை சேர்ந்த அய்யனார் (23) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் ஆகிய 5 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர். இதில் சீனிவாசன், அய்யனாரை திருச்சி மத்திய சிறையிலும், 3 சிறுவர்களை இளம்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் போலீசார் அடைத்தனர்.
இந்நிலையில் சீனிவாசன், அய்யனார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று சீனிவாசன், அய்யனார் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை போலீசார் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
- சேலைகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
- ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 8 சேலைகள் பறிமுதல் செய்தனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் பெரம்பலூர்-துறையூர் சாலையில் கடைவீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடைக்கு சம்பவத்தன்று மதியம் துணிகள் வாங்குவதுபோல் வந்த பெண்களில் 2 பேர் சேலைகளை திருடிக்கொண்டு கடையை விட்டு அவசர அவசரமாக வெளியே செல்ல முயன்றனர். இதனை கண்ட ஜவுளிக்கடையின் மேலாளர் வித்யா சாகர் அந்த பெண்களை பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஒருவர் பெரம்பலூர் மாவட்டம், பொம்மனபாடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த முருகேசனின் மனைவி ஜெயலெட்சுமி (வயது 37), மற்றொருவர் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிலம்பரசனின் மனைவி பிரியதர்ஷினி (20) என்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு ஜெயலெட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான 8 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- குன்னம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-1 மாணவர் பலியானார்
- இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவருடைய மகன் திருவேங்கடம் (வயது 16). இவர் வரிசைபட்டி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற திருவேங்கடம் மாலை தனது விளையாட்டு ஆசிரியர் செந்துறை குமிழியனியத்தை சேர்ந்த புஷ்பராஜ் என்பவரது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து ெசன்று கொண்டிருந்தார்.
கொளப்பாடி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்றது. அதனை பார்த்த திருவேங்கடம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் கலியமூர்த்தியின் மோட்டார் சைக்கிளை சரி செய்து தருவதாக கூறி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பியபோது எதிரே வந்த லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் திருவேங்கடத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
- பெரம்பலூர் கலெக்டரிடம் விவசாயிகள் மனு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புஜங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் விவசாயிகள் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை பாசன வாய்க்கால்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளைவாய்க்கால் எண்கள் 25,26,27 ஆகியவற்றிற்காக நில கையகயெடுப்பு அறிவிப்பானை செய்திதாள் மூலம் அறிந்தோம்.
மூன்று கிளைவாய்க்கால்களும் சுமார் 4 கி.மீ நீலத்திற்கு அமைத்து அதற்காக சுமார் 600 ஏர்ஸ் பாசன நிலம் கையகப்படுத்த உள்ளனர், ஆனால் இந்த வாய்க்கால்கள் அமைய உள்ள வழித்தடங்களில் 100 ஏர்ஸ் நிலங்கள் கூட தரிசு மற்றும் மானவாரி நிலங்கலாக இல்லை. இந்தநிலையில் 3 வாய்க்கால்கள் அமைக்க பட்டால் கிராம பொது மக்களாகிய நாங்கள் மிகபெரிய துன்பங்களையும் துயரங்களையும் வாழ்வாதாரங்களையும் அனுபவிக்க நேரிடும்.எனவே மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்தின் வழியாக அமைய உத்தேசித்துள்ள கள ஆய்வு செய்து கிளை வாய்க்கால்கள் அமைக்கும் முயற்சியை கைவிட கோகிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்
- விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கவுல்பாளையம் தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் நடந்தது.தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க தேர்தல் நடந்தது.இத்தேர்தலில் சங்க தலைவராக உத்திரக்குமார், செயலாளராக முருகேசன், பொருளாளராக ராஜன், துணைத் தலைவராக, செங்கமலை, துணை செயலாளராக முருகையா செயற்குழு உறுப்பினர்களாக அன்பு, கோபி என்கிற கோபாலகிருஷ்ணன், கண்ணன், ரவிச்சந்திரன், கலாவதி, ராதாகிருஷ்ணன், அசோகன், பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெரம்ம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். புதிய பொறுப்பாளகளை பணியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்திட 700 எக்டருக்கு ரூ.5 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை) கணக்கிடப்பட்ட அடிப்படையில் 100 சதவீதம் மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு பெரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ -2, ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.
சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு சொட்டுநீர் அல்லது தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- செட்டிகுளத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது
- தலைவர் ஜான்பாண்டியன் கலந்துகொண்டார்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டி குளத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. செட்டிகுளம் செல்லியம்மன் திடலில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனருமான ஜான்பாண்டியன் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் இந்த உலகிற்கே உணவளித்து வேளாண் தொழிலைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், தங்களுடைய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும் பேசினார்.
இந்தபொதுக் கூட்டத்தில் த .ம.மு .க. கட்சியின் பொதுச் செயலாளரும் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த பிரிசில்லா பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் வியங்கோ பாண்டியன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமர் துணை பொது செயலாளர்கள் நெல்லையப்பன், தமிழரசன், அமுத முரளி, சண்முகசுதாகர், அருண், பிரின்ஸ், மகளிர் அணி நளினி, சாந்தகுமாரி, தலைமை நிலைய பேச்சாளர் சேகர், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சசிகுமார், மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ஐயப்பன், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் திரளான தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கலந்து கொண்டு ஜான்பாண்டியன் தலைமையில் மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்தை விட்டு வெளியேற்று என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்குள்ள அம்பேத்கர் தெருவில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினர் கொடியை ஜான்பாண்டியன் ஏற்றி வைத்தார். முன்னதாக மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞர் அணி மகேந்திரன், ஸ்ரீராம், முகிலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கிராமமூப்பாடி சக்திவேல் நன்றி கூறினார்.






