என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    குரும்பபாளையம் புது ஏரியில் உடைந்த மடையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து சாத்தனூர் குடிக்காடு செல்லும் சாலையின் வலதுபுறம் கருப்புடையார் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மேற்கு பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் புது ஏரி உள்ளது.

    கருப்புடையார் ஏரி பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கும், புது ஏரி பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த ஏரியில் நீர் தேங்குவதால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்கும் பயன்படுகிறது.

    இந்த ஏரிக்கு குரும்பாபாளையம் கிராமத்தையொட்டி உள்ள காடுகளில் இருந்து வரும் தண்ணீரால், ஏரி நிரம்பும். அதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் புது ஏரி நிரம்பியது. இந்நிலையில் நீர் வழிந்தோடும் பகுதி சேதம் அடைந்து இருந்ததால், ஏரி நிரம்பி 2 நாட்களுக்குள் நீர் கொள்ளளவு தாங்காமல் கற்களால் கட்டப்பட்டு இருந்த நீர்வழிந்தோடும் பகுதியான மடை உடைந்தது. இதனால் 5 ஏக்கர் பரப்பில் தேங்கி இருந்த நீர் வெளியேறி மருதையாற்றில் கலந்தது. இதனால் தற்போது அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்காமலும் சிரமப்படுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனுவும் கொடுத்துள்ளனர். அதில், வருகிற மழைக்காலங்களுக்கு முன்பாக நீர் வழிந்தோடும் மடையை மீண்டும் அரசு உடனடியாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். புது ஏரிக்கு குறைந்த மழை பெய்தாலே நீர்வரத்து அதிகமாக இருக்கும். எனவே உடைந்த மடை பகுதியை உடனடியாக சரி செய்யாவிட்டால் அதிக நீர்வரத்தால் மண் அரிக்கப்பட்டு ஏரி இருந்த அடையாளமே தெரியாமல் போகும். மேலும் ஏரியை சீரமைக்க கூடுதல் செலவும் ஆகும், என்று கூறியிருந்தனர்.
    மங்களமேடு அருகே மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள ரஞ்சன்குடியில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் ரஞ்சன்குடி பாலம் அருகே டிராக்டரில் மணல் ஏற்றி வந்த ரஞ்சன்குடியை சேர்ந்த மணி (வயது 28) என்பவரை மங்களமேடு போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, மணியை கைது செய்தனர்.
    குன்னம் அருகே ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வன்(வயது 37). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், கணவன்- மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மாலதி பலமுறை சொல்லியும் அவர் குடிப்பழக்கத்தை விடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் குடும்ப தகராறை தொடர்ந்து மாலதி தனது தாய் வீட்டிற்கு செல்வதும், அவரை முத்தமிழ்ச்செல்வன் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதும் வழக்கமாக இருந்துள்ளது. மேலும் முத்தமிழ்ச்செல்வன் தற்கொலை முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கோபித்து சென்ற தனது மனைவியை, முத்தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததால் மனம் உடைந்த முத்தமிழ்ச்செல்வன் மதுவில் களைக்கொல்லி பூச்சி மருந்தை(விஷம்) கலந்து குடித்துள்ளார். இதையடுத்து அவரை, உறவினர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்தமிழ்ச்செல்வன் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் பெட்ரோல்- டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தொ.மு.ச., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்க அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூரில் நேற்று 3 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அந்த பேரவையின் மாவட்ட கவுன்சில் தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும், அதன் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாளர் வேணுகோபால் வரவேற்றார். முடிவில் துணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெங்கடேசபுரத்தில் உள்ள பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், கட்சியின் மீனவரணி தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரி கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். இதே போல் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளைஞரணி மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார்.
    பெரம்பலூரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், அத்யாவசியமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், அத்யாவசியமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும், பழைய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஏ.மீரா மொய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா, பொருளாளர் முகமது இலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மத்திய அரசை கண்டித்து கருப்பு முக கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், லட்சத்தீவு மக்களின் உரிமைகளை பறிப்பதை கண்டித்தும், காஷ்மீர் மாநிலத்தில் பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்கக்கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை மற்றும் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற்சங்கத்தினர், மோட்டார் தொழிலாளர்கள், மின்வாரிய மத்திய அமைப்பின் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கருப்பு முக கசவம் அணிந்து மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாடபுரம் நடுவீதியை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 579 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது.

    இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கே.புதூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 48). தையல் தொழிலாளியான இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே தையல் கடை நடத்தி வந்தார். தங்கராஜ் வழக்கம்போல் நேற்று தையல் கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியதில் கீழே விழுந்து, லாரி சக்கரத்தில் சிக்கினார். இதில் தங்கராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான லாடபுரம் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்த துரைசாமி மகன் நல்லேந்திரனை (34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (45) சம்பவத்தன்று ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த ரவீந்திரன் மகன் செல்வமுருகன் (23) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முருகேசன் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி சினை மாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரை சேர்ந்தவர் சேகர் (வயது 53). விவசாயியான இவர் அதே பகுதியில் தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் வயலில் உள்ள தொழுவத்தில் நேற்று 2 சினை மாடுகளை கட்டியிருந்தார்.

    இந்த நிலையில் எளம்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. அப்போது தொழுவத்தில் கட்டியிருந்த சினை மாடுகளின் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 மாடுகளும் பரிதாபமாக செத்தன. இதுகுறித்து தகவலறிந்த எளம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது மாட்டின் உரிமையாளர், அரசின் நிவாரண தொகை பெற்றுத்தர கோரிக்கை விடுத்தார்.

    மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி சினை மாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    பெரம்பலூர் அருகே வீட்டில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற மகன் படுகாயமடைந்தார்.
    குன்னம்:

    பெரம்பலூர் அருகே உள்ள அயலூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமாக ஆஸ்பெட்டாஸ் கூரையுடன் கூடிய வீடு உள்ளது. அதில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய்களின் மேல் மின்வயரில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வயரில் தண்ணீர் பட்டு மின் கசிவு ஏற்பட்டது. அதனால் இரும்பு குழாய்களில் மின்சாரம் பாய்ந்தது. இரும்பு குழாய்களில் ஏற்கனவே துணி போடுவதற்காக கம்பி கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பியின் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

    இதையறியாத தங்கராசு, மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை பிடித்து துணியை எடுத்துள்ளார். அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்ததால் அலறினார். இதை அறியாத தங்கராசுவின் மனைவி சித்ரா, மகன் பிரதீப்(18) ஆகியோரும், அவரை காப்பாற்ற கம்பியை பிடித்து உள்ளனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தங்கராசு சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரதீப்புக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்ராவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமையில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாரதிவளவன் தலைமையில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். அதில், உங்கள் தொகுதியில் முதல்வர் சிறப்பு திட்டத்தில் களநிலையில் உள்ள பிரச்சினைகளை களைந்திட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆணைகளை விரைவில் வழங்கிட வேண்டும். தேர்தல் பணியில் உயிரிழந்தோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இந்த கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புமாறு கலெக்டரை வருவாய்த்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர்.
    பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்மாணிக்கம், மக்கள் அதிகாரம் அமைப்பின் பேச்சாளர் காவேரி நாடான் என்கிற முத்துகுமார் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பெட்ரோல்-டீசல் விலை உயர்வையும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் அல்லாத குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக 6 மாதம் தலா ரூ.7,500 வழங்கிட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கிட வேண்டும். நபருக்கு 10 கிலோ வீதம் உணவு தாணியங்களை வழங்கிட வேண்டும். செங்கல்பட்டு நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதேபோல, அரியலூர் அண்ணா சிலை அருகே பெட்ேரால், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு கூடுதலான விலை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் தனகோடி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராமநாதன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், மாவட்ட குழு உறுப்பினர் பத்மாவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் குன்னம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மாநில செயலாளர் வீரசெங்கோலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் தேவேந்திரன், ராஜாபிள்ளை ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×