என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிதாக 21 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 2,744 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 14 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 7 பேரும் என மொத்தம் 21 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் குணமடைந்ததால் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் 649 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 483 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 1,444 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,300 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 11,933 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 11,610 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 237 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது 86 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 16,683 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 16,325 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 254 பேர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது 104 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இரும்பு தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில்(வயது 28). இவர் மோட்டார் சைக்கிளில் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு தடுப்பின் மீது மோதி, அந்த வழியாக சென்ற ஆட்டோ மீதும் மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 3-வது கட்டமாக நடந்த முகாமில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
    பெரம்பலூர்:

    கொரோனா வைரசின் 3-ம் அலை வராமல் தடுக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நேற்று 3-வது கட்டமாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அதன்படி 3-வது கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 198 இடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 251 இடங்களிலும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    முகாமில் கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு தவணை நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சில முகாம்களில் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு சென்றனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடந்தது. ஆனால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் சில முகாம்களில் காலையிலேயே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் அந்த முகாம்கள் மதியத்திற்குள் முடிந்து விட்டன. முகாம்களை பெரம்பலூர் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூர் மாவட்டத்தில் ரமணசரஸ்வதியும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார். அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக 19 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 9 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 69 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 78 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 123 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 621 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 623 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று அரியலூர் மாவட்டத்தில் 1,210 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    மங்களமேடு அருகே கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மங்களமேடு:

    மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகன் வெங்கடேசன்(வயது 18). கொத்தனாராக வேலை பார்த்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வெங்கடேசனின் தாய் சிவபாக்கியம் கண்டித்துள்ளார். இதனால் வருத்தம் அடைந்த வெங்கடேசன் மது போதையில் வீட்டில் இருந்த எலி பேஸ்டை(விஷம்) தின்று மயங்கி கிடந்தார். இதைக்கண்ட நடராஜன் உள்ளிட்டோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பண மோசடி வழக்கில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் உள்பட 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரை சேர்ந்த செங்கோல் ராஜமாணிக்கம் (வயது 84) என்பவருக்கு கடந்த 1999 ஆம் ஆண்டு மினி லாரி வாங்க வங்கி கடன் பெற்றுத்தருவதாக எறையூரை சேர்ந்த அசோகன் (62) என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு வங்கியில் முன் பணமாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கட்ட வேண்டும் என்று அசோகன் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து ராஜமாணிக்கம் தனது நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்தை அசோகனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அசோகன், பின்னர் ஓராண்டாகியும் கடன் பெற்றுத்தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை ராஜமாணிக்கம் திருப்பி கேட்டும், பணத்தை அசோகன் திருப்பி தராததால் ராஜமாணிக்கம் ஊர் முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து தெரிவித்தார்.

    இதையடுத்து சின்னாறு பயணியர் மாளிகையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பஞ்சாயத்து நடந்தது.

    அந்த பஞ்சாயத்தில் எறையூரை சேர்ந்த மதியழகன் (50) அசோகனுக்கு ஆதவாக ஆஜராகி ஒரு மாதத்தில் வாங்கிய பணத்தை அசோகன் திருப்பி கொடுத்து விடுவார் என்றும், அவ்வாறு அவர் கொடுக்கவில்லை எனில், தனது வீட்டை அடமானம் வைத்து கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் கூறி ரூ.50 பத்திரத்தில் எழுதி கொடுத்துள்ளார்.

    ஆனால் ஊர் பஞ்சாயத்தில் தெரிவித்தபடி அசோகன், மதியழகன் இருவரும் ராஜமாணிக்கத்துக்கு பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.

    இதனால் 2001 -ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ராஜமாணிக்கம் புகார் செய்தார். இது தொடர்பாக அசோகன், மதியழகன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு பெரம்பலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண் 1-ல் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் சுப்புலட்சுமி தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், அசோகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், மதியழகனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பு வழங்கும்போது கோர்ட்டில் ஆஜராகாத மதியழகனுக்கு பிணையில் வர முடியாத வாரண்டு பிறப்பித்தார். இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மதியழகன் தற்போது வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பெரம்பலூரில் படிக்கட்டில் நின்று எச்சில் துப்பியபோது ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கார்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 70). பெரம்பலூர் வந்த இவர் நேற்று மதியம் பெரம்பலூரில் இருந்து பொன்னகரம் சென்ற அரசு டவுன் பஸ்சில் முன்பக்க இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.

    துறைமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் அருகே பஸ் சென்றபோது இருக்கையில் இருந்து எழுந்த பேச்சியம்மாள், முன்புற படிக்கட்டில் நின்று சாலையில் எச்சில் துப்பினார். அப்போது ஓடும் பஸ்சில் இருந்து அவர் கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பஸ்சின் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் கண்டக்டர் சுப்ரமணியன் ஆகியோர் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர். டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை லப்பைக்குடிக்காடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    மங்களமேடு அருகே காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துச்சென்றார்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பழனியம்மாள்(வயது 45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினர். நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, பழனியம்மாளின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த பழனியம்மாள், மர்ம நபர் சங்கிலியுடன் ஓடுவதை கண்டு திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட பூக்கடை ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    தஞ்சை மாவட்டம், போத்திரிபாளையம் வடக்கு வாசலை சேர்ந்தவர் வையாபுரி. இவரது மகன் அய்யப்பன் (வயது 31). இவர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அந்த பூக்கடையின் குடோன் அருகே சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த மகாராஜன் மகன் மணிகண்டன் (22) தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அய்யப்பன் அவர்களிடம் இங்கு வைத்து மது அருந்தக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் பட்டா கத்தியால் அய்யப்பனை குத்தியதில், அவர் காயமடைந்தார். இதனை கண்ட அதே பூக்கடையில் வேலை பார்க்கும் ஆலம்பாடி சமத்துவபுரத்தை சேர்ந்த சீதாபதி மகன் ஆனந்த் (32), அதனை தடுக்க முயன்றபோது, அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தும், அய்யப்பனும் சேர்ந்து மணிகண்டனை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டனின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். காயமடைந்த 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் விவசாயிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). விவசாயியான இவர், கடந்த 10.11.2013 அன்று முன்விரோதம் காரணமாக திருமணமான பெண் ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி, தவறாக நடக்க முயன்றதாகவும், பின்னர் அந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக மருவத்தூர் போலீசார், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி மலர்விழி நேற்று தீர்ப்பு கூறினார். இதில் சிவக்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    ×