என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 69 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 20 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 295 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 284 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. தற்போது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடித்து கொரோனா தொற்று பரவலில் இருந்து தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் 3 ஆம் அலையின் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அமல்படுத்தி வருகிறது.
இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியும், அனுமதியின்றியும் நேற்று முன்தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பெரம்பலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடத்தியது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 30 பேர் மீதும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 30 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த 80 பேர் மீதும், பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய கேங்மேன் பயிற்சி பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது தொடர்பாகவும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பை சேர்ந்த 75 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை (5-ந்தேதி) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார்.
இதையடுத்து நேற்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அவரது கார் டிரைவர் ஜான் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மூவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து 3 பேரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கடந்த சில தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டும், பெரம்பலூர் நகரத்தில் உள்ள வார்டுகளில் வீடு, வீடாக சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தும்வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் எம்.எல்.ஏ. பிரபாகரன் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வட கிழக்கு பருவமழை வழக்கத்தைவிட கடந்த ஆண்டு (2021) அதிகமாக கொட்டித் தீர்த்ததால் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகள், 33 அணைகள், 10 தடுப்பணைகள் 2 நீர்த்தேக்கங்கள் ஆகிய நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பின.
தற்போது மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில வாரங்களாக மாவட்டத்தில் மழை பெய்யாமல் இருந்தது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வெகுவாக குறைய தொடங்கியது.
இந்தநிலையில் மீண்டும் கடந்த 4 நாட்களாக அவ்வப் போது மழை பெய்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலை விட்டு, விட்டு மழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று புத்தாண்டு அன்று காலை முதல் மாலை வரை பலத்த மழை விட்டு, விட்டு பெய்தது. இரவிலும் மழை நீடித்தது.
இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகள் மீண்டும் நிரம்பி கடைகால் பகுதியில் தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. பகல் நேரத்தில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. புத்தாண்டு அன்று பகல் நேரத்திலும் தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களில் பலர் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.
பயிர் சாகுபடி பரப்பை பொறுத்த வரை தற்போது 88,802 எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மில்லி மீட்டர் ஆகும். கடந்த 2021-ம் ஆண்டு சராசரி மழையளவை விட 490.18 மி.மீ. அதிகமாக மொத்தம் 1,351.18 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செட்டிகுளம்-57, பாடாலூர்-35, அகரம் சீகூர்-60, லெப்பைக்குடிகாடு-36, புது வேட்டக்குடி-28, பெரம்பலூர்-73, எறையூர்-26, கிருஷ் ணாபுரம்-12, தழுதாழை-28, வி.களத்தூர்-27, வேப்பந்தட்டை-28.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த வட கிழக்கு பருவமழையால் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் விவசாயிகள் பயிரிட்டிருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டன. தற்போது பெய்த மழையால் மேலும் பாதிப்படைய தொடங்கியுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் 17- வது கட்டமாக மாவட்டம் முழுவதும், 161 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நாளை (2-ந் தேதி) நடைபெற உள்ளது.
இம்முகாம்களில் 20,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 அரசு மருத்துவ மனைகள், 128 மற்ற இடங்கள் என மொத்தம் 161 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் வட்டாரத்தில் 40 தடுப்பூசி மையங்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 41 , ஆலத்தூர் வட்டாரத்தில் 37 , குன்னம் வட்டாரத்தில் 43 என மொத்தம் 161 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட நபர்கள், மக்களை ஒருங்கிணைத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு இரண்டாம் தவணைக்கு உள்ளவர்களும், சிறப்பு முகாமினை பயன்படுத்தி தாமே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு, நமது மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய இணையதளம் மூலம்பதிவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022-ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc.edpc.in இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட இணையதளத்தில்எதிர்வரும் சம்பா பருவம் 2022-க்கு கடந்த 16ம்தேதி முதல் இணைய வழி பதிவு முறையின் (ஆன்லைன்) மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல்கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா மற்றும் அடங்கல்) இணையத்தில் பதிவேற்றம் செய்தும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.
விவசாயிகள் தங்களது செல்போனில் எண்ணில் பெறப்பட்ட எஸ்.எம்.எஸ் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பெரம்பலூர் துணை மண்டல மேலாளர் அலுவலகத்தை 9443139926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.






