என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் நால்ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில், ஸ்ரீ ரெங்கம்மாள் நகர் உள்ளது. இதற்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழ், பயன்படுத்தாத கரும்பு ஜூஸ் தயாரிக்கும் எந்திரம் உள்ளது.

    இதன் அருகில் கட்டைப்பை ஒன்று இருந்தது. இந்த பையை தெரு நாய்கள் சுற்றிச்சுற்றி வந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், நாயை விரட்டிவிட்டு, அப்பையை பார்த்த போது, அதில் பிறந்த ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை, கையடக்க பெட்ஷீட்டில் சுருட்டி இருந்தது தெரியவந்தது.

    உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.  ஆம்புலன்சு செவிலிய உதவியாளர்கள் வந்து குழந்தையை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆரோக்கியமாக உள்ள அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார்கள்.

    இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்டெடுக்கப்பட்ட அந்த பெண் குழந்தை முறை தவறி பிறந்ததா? வளர்க்க வசதியின்றி யாரேனும் விட்டுசென்றார்களா? என விசாரணை நடக்கிறது.

    மேலும் பெற்ற குழந்தையை வீசிவிட்டு சென்ற கல் நெஞ்சம் படைத்த அந்த தாய் யார் என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் பழனி மகன் சத்தியநாதன் (வயது 34). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், சம்பவத்தன்று பெரம்பலூரில் இருந்து திருச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    சிறுவாச்சூர் சர்வீஸ் சாலை அருகே வந்தபோது, அங்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை பார்த்த சத்தியநாதன், வாகனத்தின் வேகத்தை குறைப்பதற்கு முயற்சி செய்தார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த வேகத்தடைக்காக வைக்கப்பட்டிருந்த பேரிக்கார்டில் மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சத்தியநாதன், தலையில் பலத்த காயம் அடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், விரைந்து சென்று சத்தியநாதனின் உடலை கைப்பறி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் தரிசில் பயறு சாகுபடி செய்வதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 8,500 ஹெக்டேரில் சம்பா மற்றும் நவரை பருவத்தில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. நெல் அறுவடைக்கு பிறகு நெல் தரிசில் உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படும்.  

    தற்போது, நெல் அறுவடைக்கு எந்திரங்கள் பயன்படுத்துவதாலும், கால்நடை தொந்தரவாலும் நெல் தரிசில் பயறு வகை பயிர்கள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது.

    இந்நிலையில்  பயறு வகை சாகுபடியை  ஊக்குவிக்க, பெரம்பலூர் மாவட்டத்தில்  700 ஹெக்டேரில் பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  இவ்வாறு பயறு வகைப் பயிர்களை பயிர் செய்யும் போது, வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. 

    பயறு வகைப்பயிர்களை பயிர் செய்ய குறைவான தண்ணீரே போதுமானது.  மேலும்  அடுத்த குறுவை நெல்லுக்குத் தேவையான தழைச்சத்து இயற்கையாகவே கிடைக்க வழிவகை செய்கிறது. குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்க ஏதுவாகிறது.

    நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் பயறு வகைப் பயிர்களின் விதைகளை விற்பனை செய்ய அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு உளுந்து விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் 50 சதவீத மானியத்தில் திரவ ரைசோபியம்,  திரவ பாஸ்போ பாக்டீரியா உயிரி உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் விற்பனைக்காக அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 

    சம்பா மற்றும் நவரை அறுவடைக்குப் பிறகு  நீர்ப் பாசன வசதியுள்ள விவசாயிகள் பெரும்பாலும் கோடைக்கால நெல் பயிர் சாகுபடியை மேற்கொள்கின்றனர்.  இதேபோல, குறுவை, தாளடி, கோடை என தொடர்ச்சியாக நெல் சாகுபடி செய்வதால் மண்வளம் பெரிதும் பாதிப்படைகிறது.  

    மண்ணின் பிரதான பேரூட்டச் சத்தான தழைச்சத்தை நிலைநிறுத்த  வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதை தவிர்த்து,  மண்வளத்தைப் பாதுகாக்க கூடிய உளுந்து போன்ற பயறு வகைப் பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தூய்மை இயக்கம் அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில்  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.

    ஊராட்சிகளுக்கு சொந்தமான கட்டிடங்களை பராமரிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டு காலம் அதிகமாகிறது. எனவே, வரக்கூடிய பொங்கல் திருநாளையொட்டி அனைவரின் பங்களிப்புடன் ஊரக பகுதியில் ஒரு சிறப்பு இயக்கமாக பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, 5 ஆண்டுகளுக்கு முன்பு வர்ணம் பூசப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடங்கள், ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மீண்டும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் வைக்க வேண்டும். மாதந்தோறும்  5 மற்றும் 20&ந்தேதிகளில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு முன்பு அனைத்து கிராம      ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொசுக்களால் பரவும் நோய்களை முழுவதும் தடுக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சந்துகள், தெருக்கள்,  கிராம சாலைகள், கிராமங்களை ஒட்டிச் செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகியவற்றிலுள்ள குப்பையை ஊராட்சியிலுள்ள பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டு முற்றிலுமாக அகற்றி சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.
    வடிகால்கள் மற்றும் சாக்கடை செல்லும் வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கி, சுத்தப்படுத்தி கொசுமருந்து தெளித்து, டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஊராட்சி மன்றக் கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களில் தேவையின்றி   இருக்கும் பழைய பயன்படுத்த இயலாத பொருட்களை முற்றிலும் அகற்றி, அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 
    குன்னம் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட, கே.எறையூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). விவசாய தொழிலாளியான இவர், நேற்று மாலை தனது வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளிக்க சென்றார்.

    கிணற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது, ராமசாமி திடீர் என தண்ணீரில் மூழ்கினார். குளிக்க சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் ராமசாமியை தேடி கிணற்றுக்கு வந்தனர்.

    அப்போது, அவரது சட்டை மற்றும் துண்டு மட்டும் கிணற்றின் கரை ஓரத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, கிணற்றில் இறங்கி இறந்த நிலையில் மிதந்த ராமசாமியின் உடலை மேலே கொண்டு வந்தனர்.

    இச்சம்பவத்தை அறிந்த மருவத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி முதற்கட்டமாக வரை 2,218 சுகாதார பணியாளர்களுக்கும், 2,132 முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களில் 1,698 பேருக்கும் என மொத்தம் 6,048 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
    பெரம்பலூர்:

    கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 15 வயது, அதற்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்தும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானும் பரவுவதால் மத்திய அரசு 3-ம் தவணையாக முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி அறிமுகப்படுத்தி, அதனை முதற்கட்டமாக ஜனவரி 10-ந்தேதி முதல் சுகாதார பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் செலுத்த உத்தரவிட்டது.

    அதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதலின்பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி முதற்கட்டமாக வரை 2,218 சுகாதார பணியாளர்களுக்கும், 2,132 முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களில் 1,698 பேருக்கும் என மொத்தம் 6,048 பேருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

    இதில் நேற்றைய தேதியில் 2,925 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்ட தேதியில் இருந்து 273 நாட்கள் அல்லது 39 வாரங்கள் அல்லது 9 மாதங்கள் முடிவடைந்த சுகாதார பணியாளர்களும், முன்களப்பணியாளர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதே போல் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளுர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நிலுவைத் தொகையை உடனடியாக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் செலுத்தவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவிட்டுள்ளார்.
    பெரம்பலூர்:

    அரசு கேபிள் டிவி தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும்  நடவடிக்கைகளின் பலனாக தற்போது புதிதாக பல உள்ளுர் தொலைக்காட்சி சேனல்களும்இ சோனி உள்ளிட்ட கட்டண சேனல்களும் கூடுதலாக வழங்கப்பட்டு பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதனால் தற்போது அரசு கேபிள் இணைப்பு கோரும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் கைகளில் கணிசமான எண்ணிக்கையில் செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்கள் உள்ளதால் அரசு கேபிள் இணைப்பு கோரும் பொதுமக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்க இயலாத சூழ்நிலை உருவாவதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு இதனால் கணிசமான அளவில் பண இழப்பும் ஏற்படுகிறது. இது ஏற்புடையதல்ல.

    எனவே மூன்று மாதங்களுக்கு மேல் செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப ஒப்படைக்க வேண்டியது உள்ளுர் கேபிள் டி.வி.  ஆபரேட்டர்களின் பொறுப்பாகும்.

    இதில்  பொதுமக்கள் அரசு செட்டாப் பாக்ஸ்களை திரும்ப  ஒப்படைக்க மறுப்பதாக உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது ஏற்புடையதல்ல.

    அரசு இலவசமாக வழங்கும் செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் அல்லது அதனை கேபிள் ஆபரேட்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் செட்டாப் பாக்ஸ்களை தேவைக்கேற்ப உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக செயலாக்கம் செய்ய வேண்டும்.

    செயலாக்கம் செய்யப்படாத செட்டாப் பாக்ஸ்களை பெரம்பலூர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணைமேலாளர் அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைக்க வேணடும். தவறும்பட்சத்தில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் செயலுக்காக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகும்.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளுர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் இந்த பொருள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு செயலாக்கத்தில் இல்லாத அரசு செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஒப்படைக்க உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் உள்ளுர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாக உரிமம் பெற்று தொழில் செய்து வருகின்ற உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதுநாள் வரை செலுத்தாமல் உள்ள ரூ.141.49 லட்சம் அனலாக் நிலுவை தொகையை அனைத்து உள்ளுர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் உடனடியாக செலுத்த வேண்டும்.

    மீறினால் சம்மந்தப்பட்ட உள்ளுர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது சட்டரீதியான  நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
    குழந்தைக்கு தண்டனை கொடுத்து திருத்த வேண்டும் என நினைத்து எடுத்த முடிவு விபரீதத்தில் முடிந்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி

    மணிமேகலை. இவர்களுக்கு மகாலட்சுமி (வயது 10), விக்னேஷ் (7), சுப்புலெட்சுமி (3) என்ற 3 குழந்தைகள் இருந்தனர்.

    இதில் மகாலெட்சுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி மகாலட்சுமி கடந்த 6-ந்தேதி தனது வீட்டிற்கு

    அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 70 ரூபாய் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி மகாலட்சுமியின் தாய் மணிமேகலையிடம் உறவினர் புகார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை மகளை கண்டித்தார். மேலும்

    தன்னுடைய உறவினர் ஒருவருடன் சேர்ந்து சிறுமியிடம் பணம் திருடலாமா? எனக்கூறி நெருப்பில் மிளகாய் வற்றலை போட்டு அந்தப் புகையை

    சுவாசிக்குமாறு அமுக்கி பிடித்துள்ளனர்.

    இதில் சிறுமிக்கு கண் எரிச்சலுடன், அதிக மூச்சுத்திணறலும் ஏற்பட்டு துடித்துள்ளார். மேலும் இனிமேல் பணத்தை எடுக்க மாட்டேன் என்று கெஞ்சியுள்ளார்.

    ஆனால் கல் நெஞ்சம் படைத்த தாய், அதோடு விடாமல் சிறுமியின் கால் மற்றும் வாய்ப்பகுதியில் சூடு வைத்துள்ளார்.

    இதில் வேதனையின் உச்சிக்கே சென்ற சிறுமி ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தார். இதனால் பதற்றமான பெற்றோர் உடனடியாக மகளை பெரம்பலூர் அரசு

    மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் மர்ம மரணம் என்று

    வழக்குப்பதிவு செய்து சிறுமியின் சாவிற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிறுமி மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

    பிரேத பரிசோதனை முடிந்து மருத்துவ குழுவினர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சிறுமியின் தாய் மற்றும் உறவினர் கைது செய்யப்படுவார்கள்

    என்று போலீசார் தெரிவித்தனர். குழந்தைக்கு தண்டனை கொடுத்து திருத்த வேண்டும் என நினைத்து எடுத்த முடிவு விபரீதத்தில் முடிந்த சம்பவம் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே இன்று பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் வக்கீல் அய்யம்பெருமாள் தலைமையில், உறுப்பினர்கள் டாக்டர் பழனிவேல்,

    சுரேஷ், அமுதா, ஜெயந்தி உள்ளிட்ட குழுவினர் சம்பவம் நடந்த வீட்டில் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    பெரம்பலூர்:
    பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடர்ந்து ஆய்வு செய்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

    இதற்கிடையே பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் முருகன் கோவில் மலைக்கு கிழக்கு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது பெரம்பலூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் மூலம் எல்.இ.டி. வேன் மூலம் கொரோனோ பரவல் தடுப்பு நடிவடிக்கை குறித்தும், பாதுகாப்பாக இருக்க வேண்டியது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுதல் மற்றும் கொரோனோ விதிமுறையை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் போன்றவை குறித்த காணொலி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

    இதில் 100 நாள் வேலை திட்ட பணிதள பொறுப்பாளர் கலைச்செல்வி உட்பட கூலித்தொழிலாளர்கள் பலரும் பார்த்து தகவல்களை தெரிந்து கொண்டனர்.
    பெரம்பலூர் அருகே விவசாயிகளுக்கான மண் வள பரிசோதனை முகாம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
    பெரம்பலூர்:
    பெரம்பலூர் வட்டார வேளாண்மை துறை மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சார்பில் எளம்பலூரில் மண்வள பரிசோதனை முகாம் மற்றும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நெல் தரிசில் அதிதீவிர பயறுவகை பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சிகள் நடந்தது.

    ஊராட்சி தலைவர் சித்ராதேவி, முன்னாள் ஊராட்சி தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) கீதா தலைமை வகித்து பேசுகையில், மண்வள மேம்பாடு, மண்வளம் பாதுகாத்தல், மண் பரிசோதனை அவசியம் மற்றும் மண் மாதிரி எடுக்கும் முறை போன்றவற்றை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

    மேலும் விவசாயிகள் தங்கள் மண்வளம் குறித்து அறிந்து கொள்ள மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் தங்கள் மண் வளத்திற்க்கு ஏற்ப உரமிட்டு கூடுதல் செலவினத்தை தவிர்க்கவும் மண் வளம் பாதுகாக்கவும் இயலும். வேளாண் பெருமக்கள் தங்கள் வயல் மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்ய ரூ.20 செலுத்தி பெரம்பலூர் மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

    பின்னர் நடமாடும் மண்பரிசோதனை விழிப்புணர்வு முகாமினை தொடங்கிவைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் பேசுகையில், மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு உரங்களை மட்டுமே ஆதார் அட்டையுடன் அனுமதி பெற்ற உர விற்பனையாளர் நிலையத்தில் மூட்டையிலுள்ள விலைத் தொகை மிகாமல் ரசீது பெற்று வாங்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராணி பேசுகையில், விளை நிலங்களில் பசுமை போர்வைத் திட்டத்தின் வாயிலாக இலவச மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 160 கன்றுகள் (தனப்பயிராக), அல்லது 50 கன்றுகள் (வரப்பு பயிராக) வழங்கப்படுவது குறித்து எடுத்துரைத்து பயன்அடையலாம். மேலும் அதிதீவிர பயறுவகை பயிர் சாகுபடி செய்யலாம் என தெரிவித்தார்.

    பயிற்சிகளில் பெரம்பலூர் வட்டார வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் காப்பீட்டு காப்பீடு அலுவலர்கள் கலந்து கொண்டு உயிர் உரம், நுண்ணூட்ட உரம் பயன்பாடு, அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்களைப் பற்றி விளக்கிக் கூறினர். இந்த பயிற்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களான எசனை, வடக்குமாதேவி, எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    வீட்டின் பூட்டை உடைத்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் மல்லிகா (வயது55) இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், மல்லிகா தனது மகள்கள் ரம்யா, சரண்யா, நித்தியா ஆகியோருடன் வசித்து வருகின்றார். 

    இவர்கள் இரவு நேரத்தில் தூங்குவதற்கு மட்டும் அருகில் உள்ள தனது அண்ணன் ராமலிங்கம் வீட்டிற்கு சென்று, காலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தங்களது வீட்டை பூட்டிவிட்டு, ராமலிங்கம் வீட்டுக்கு தூங்க சென்றனர். இன்று காலை 6 மணி அளவில் மல்லிகா மற்றும் அவரது மூத்த மகள் ரம்யா ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் மற்றும் 2 பவுன் செயின்,  ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி, மற்றும் ரொக்கம் ரூ 10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு  சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:
    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 8 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் நேற்று மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 69 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 20 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பெரம்பலூர் மாவட்டத்தில் 295 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 284 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. தற்போது பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடித்து கொரோனா தொற்று பரவலில் இருந்து தங்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ×