என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
துணிப்பையில் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை
பெரம்பலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தையை துணிப்பையில் வைத்து சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் நால்ரோடு மின்வாரிய அலுவலகம் அருகில், ஸ்ரீ ரெங்கம்மாள் நகர் உள்ளது. இதற்கு அருகில் உள்ள ஒரு மரத்தின் கீழ், பயன்படுத்தாத கரும்பு ஜூஸ் தயாரிக்கும் எந்திரம் உள்ளது.
இதன் அருகில் கட்டைப்பை ஒன்று இருந்தது. இந்த பையை தெரு நாய்கள் சுற்றிச்சுற்றி வந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், நாயை விரட்டிவிட்டு, அப்பையை பார்த்த போது, அதில் பிறந்த ஒரு மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தை, கையடக்க பெட்ஷீட்டில் சுருட்டி இருந்தது தெரியவந்தது.
உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு செவிலிய உதவியாளர்கள் வந்து குழந்தையை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆரோக்கியமாக உள்ள அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்டெடுக்கப்பட்ட அந்த பெண் குழந்தை முறை தவறி பிறந்ததா? வளர்க்க வசதியின்றி யாரேனும் விட்டுசென்றார்களா? என விசாரணை நடக்கிறது.
மேலும் பெற்ற குழந்தையை வீசிவிட்டு சென்ற கல் நெஞ்சம் படைத்த அந்த தாய் யார் என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story






