என் மலர்
பெரம்பலூர்
- மின் கட்டண உயர்வை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பெரம்பலூர்:
மின் கட்டண உயர்வை கண்டித்தும், மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் புது ஆத்தூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சியின் கிளை துணைத் தலைவர் முகமது உசேன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் அகமது இக்பால், செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், தொகுதி பொருளாளர் சகாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
- ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை மாற்ற கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட 73 கிராமங்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்வதற்காக லப்பைகுடிகாடு அருகே வெள்ளாற்றில் கிணறு அமைத்து வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வழங்குவதற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 73 கிராமங்களுக்கு தண்ணீர் கொடுத்தால் தங்களின் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், விளை நிலங்களில் பாசன வசதி குறையும் என்று தெரிவித்து லப்பை குடிக்காடு, கீழக்குடிக்காடு மற்றும் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, லப்பைக்குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, அதே பகுதியில் செயல்பட்டு வரும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், பெரம்பலூர்- அகரம்சிகூர் சாலையில் லப்பைகுடிகாடு பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்கத் தொடங்கியது.
இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசாரும், குன்னம் வருவாய் துறை அலுவலர்களும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்- அகரம்சீகூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி இரும்பு ராடு மற்றும் கம்பிகளை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கொணலை கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாலன் என்பவர் ஓட்டி வந்தார்.
அதேவேளையில், சென்னையில் இருந்து திருச் சிக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு விரைவுப்பேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
அந்த பேருந்தில் டிரைவராக திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரை சேர்ந்த தேவேந்திரன் (48) டிரைவராகவும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள அய்யப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகன் (56) கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.
அரசு பேருந்து இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்னாறு தனியார் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. லாரியில் இரும்பு கம்பிகள் இருந்ததால், அவை பேருந்தின் உள்பகுதிக்குள்ளும் புகுந்தது. அதிகாலையில் விபத்து நடந்ததும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். இந்த கோர விபத்தில் முன்னாள் அமர்ந்திருந்த டிரைவர் தேவேந்திரன், கண்டக்டர் முருகன் ஆகிய இருவரும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பஸ் டிரைவர் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, அதற்கு முன்பாக மற்றொரு வாகனம் சென்றுள்ளது. எனவே மீண்டும் வேகத்தை குறைத்து லாரிக்கு பின்னால் செல்ல முயன்றபோது அதன் பின்புறத்தில் மோதியுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை எப்படி செய்வது என்பது குறித்து பேசினார். மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி முதியோர் உதவி எண் 14567 பற்றியும், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு சட்டம் 2007 பற்றியும் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் சமூக பாதுகாப்பு நல அலுவலர் ரவி பாலா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்."
- உடற்கல்வித்துறை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- போட்டிகள் நடத்துவதற்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
பெரம்பலூர்:
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வித்துறை பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகநாதன் (வேப்பூர்) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்கு வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியும், வேப்பூர் கல்வி மாவட்டத்துக்கு வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி நடத்த உள்ளன. கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
- வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்
பெரம்பலூா் :
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள 2 ஆம் நிலைக் காவலா் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 2 ஆம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணியிடத்துக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள தொகுதி 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
ஆக. 3 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களது விவரங்களை வரும் 2-ந் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும்.
இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் பணியிடத்துக்கு விண்ணப்பித்த நகல், ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும்.
- மின்சார பெரு விழா நடைபெற்றது
- கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார்.
பெரம்பலூர்:
ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி 2047 என்ற மின்சார பெருவிழா பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசுகையில், மின்சார பெருவிழாக்கள், நாடு முழுவதும் ஒளிமயமான இந்தியா- ஒளிமயமான எதிர்காலம்- பவர் 2047 என்ற திட்டத்தின் கீழ், அதிகமான பொதுமக்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்துடனும், மின்சார துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய செய்திகளை குடிமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலும் கொண்டாடப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மின்சார துறை அலுவலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், லெப்பைக்குடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் ரூ.1.95 கோடி செலவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது, என்றார்.
- கொள்ளிட பாலத்தில் மண்குவியல் அகற்றப்பட்டது
- மாலைமலர் செய்தி எதிரொலியால் நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. இதில் 1.3 கி.மீட்டர் நீளமுள்ள இந்த பாலத்தை தாங்கி நிற்க 24 தூண்கள் உள்ளன. இதில் இரண்டு தூண்களுக்கும் நடுவில் இணைக்கும் வகையில் ரப்பர் பொருத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் முக்கிய பாலமான இந்த பாலத்தில் பல வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் பாலத்தின் இருபுறங்களிலும் மணல் குவியல்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இதனை அகற்ற பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை மாலை மலர் நாளிதழில் வெளியானது.
இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைவதுடன், மாலைமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
- இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது.
- உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது கவுல்பாளையம் கிராமம். பெரம்பலூர் நகர் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த பகுதியில் ஏராளமான குவாரிகள், தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்சாலைகள் மற்றும் கல் குவாரிகளுக்கு அருகிலுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வேலைக்காக ஆண், பெண் தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். குறிப்பாக கல் குவாரியில் பாறைகளை உடைத்து ஜல்லி கற்களாக மாற்றும் பணியில் அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையே கவுல்பாளையத்தில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கமான பணிகள் தொடங்கின. இரவில் வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்றது. இதில் சில பொக்லைன் எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டன. மேலும் உடைக்கப்படும் கற்களை ஏற்றிச்செல்ல தயார் நிலையில் லாரிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன.
அப்போது வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. அதன் அருகிலேயே தொழிலாளர்களும் பணியில் இருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.
உடனடியாக அருகில் வேலை பார்த்துக்கொண்டிருந்த குவாரி ஊழியர்கள், தொழிலாளர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். மேலும் அவர்கள் சற்றும் தாமதிக்காமல் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் இந்த கோர விபத்தில் கவுல்பாளையம் காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரும், தொழிலாளியுமான சுப்பிரமணி (வயது 30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர்.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியதே விபத்துக்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் விபத்து நடந்த பகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். பலியான 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து குவாரிக்கு வந்தனர். அவர்கள் பலியான இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
- நடப்பு கல்வி ஆண்டில் 25 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
- தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 1வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் ஸ்ரீ விவேகானந்தா நகரில் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 25 ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ மாணவிகள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
இந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் என். நவமியா என்ற மாணவி 500க்கு 486 மதிப்பெண்களும், பவதாரணி 482 மதிப்பெண்களும், தரிசனா , ஜனனி , ஸ்ரீராம் ஆகியோர் 480 மதிப்பெண்களும், ஆதித்யா 477 மதிப்பெண்ணும், ஹரிப்ரியா 474 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
பிளஸ் 2பொதுத் தேர்வில் ஆர்.நிசாந்தினி 600 க்கு 592 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, இயற்பியலில் 97, வேதியலில் 100, உயிரியலில் 100, கணிதத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக பிரதீபா 587 மதிப்பெண்கள் வாங்கினார். அது மட்டுமல்லாமல் தர்ஷினி 564 ,நல்லுசாமி 563, தர்ஷினி ,ஈஸ்வர் ஆகியோர் 554, வைஷ்ணவி 552 மதிப்பெண்கள் பெற்று அபார சாதனை படைத்தனர்.
இந்த பள்ளிக்கூடத்தில் அறிவியல் பாடத்தில் 7பேரும், கணித பாடத்தில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.
பள்ளியின் தாளாளர் டாக்டர் பி.முருகேசன் கூறும் போது கடந்த 25 ஆண்டுகளாக சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புலமைப் பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக கல்வி போதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மாணவர்கள் கல்வியில் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 1வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் படித்த பல மாணவ மாணவிகள் டாக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் அரசு துறைகளில் உயர் பொறுப்புகளை வகுத்து வருகின்றனர் என பெருமையுடன் கூறினார்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்
- கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.
பெரம்பலூர் :
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு மாவட்ட தலைவர் குமரி அனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும். லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப் பட்டது.
- 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகாவை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் விக்னேஷ் (வயது 23). இவர் 16 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இது தொடர்பாக சிறுமியின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.






