என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை மாற்ற கோரி பொது மக்கள் சாலை மறியல்
    X

    ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை மாற்ற கோரி பொது மக்கள் சாலை மறியல்

    • ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தை மாற்ற கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட 73 கிராமங்களின் குடிநீர் சேவையை பூர்த்தி செய்வதற்காக லப்பைகுடிகாடு அருகே வெள்ளாற்றில் கிணறு அமைத்து வேப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வழங்குவதற்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 73 கிராமங்களுக்கு தண்ணீர் கொடுத்தால் தங்களின் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், விளை நிலங்களில் பாசன வசதி குறையும் என்று தெரிவித்து லப்பை குடிக்காடு, கீழக்குடிக்காடு மற்றும் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

    இந்நிலையில் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி, லப்பைக்குடிகாடு பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, அதே பகுதியில் செயல்பட்டு வரும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், பெரம்பலூர்- அகரம்சிகூர் சாலையில் லப்பைகுடிகாடு பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நிற்கத் தொடங்கியது.

    இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலீசாரும், குன்னம் வருவாய் துறை அலுவலர்களும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்- அகரம்சீகூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×