என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பெரம்பலூரில் நடைபெற்றது.
    • அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி இன்று நடந்தது. 11, 14, 17, 19 ஆகிய வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், 19 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவர்கள் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2, 3, 4-ந்தேதிகளில் மாநில அளவில் நடைபெறவுள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
    • தி.மு.க.வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்த கட்சியின் தேசிய மகளிர் அணியின் தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    தி.மு.க. தலைவர் மற்றும் அக்கட்சியின் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தாலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் கூட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தி.மு.க. அரசு ஒரு தரப்பு மக்களுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். திருமாவளவனின் இலக்கு எப்போதும், இந்து கோவில்கள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டும் தான்.

    அவர் இதர மத நம்பிக்கைகளை, செயல்பாடுகளை கண்டுகொள்ளமாட்டார். தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தீண்டாமை ஒழிப்பில் அவர் ஆர்ப்பாட்டமில்லாமல், அரசியல் செய்யாமல் களப்பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதல்வர் மிகவும் தீவிரமாக பேசி வருகிறார். ஆனால், மறுபுறம் அரசே டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்கிறது. இது தி.மு.க.வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. தி.மு.க. என்றாலே இரட்டை வேடம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது
    • பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்தை உருவாக்க வலியுறுத்தல்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தார். மாநில துணை செயலாளர் சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் போக்குவரத்தை உருவாக்கிட வேண்டும். பெரம்பலூரில் அரசு வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை தொடங்க வேண்டும்.

    கொட்டரை மருதையாறு நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். கை.களத்தூர் பஸ் நிறுத்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கை.களத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.1 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட அந்த திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 11, 12, 13-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    • சாலை விபத்தில் முதியவர் பலியானார்.
    • கூலி வேலைக்கு பழங்கள் விற்க வந்தார்.

    பெரம்பலூர்:

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சேரானூரை சேர்ந்தவர் சேகர் (வயது 65). இவர் விழுப்புரம் மாவட்டம், பள்ளியம்பட்டு ஜானி பாஷா தெருவை சேர்ந்த அலிபாஷா(35) என்பவருடன் சரக்கு வாகனத்தில் கூலி வேலைக்கு பழங்கள் விற்க வந்தார். நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சின்னாறு ஏரி பக்கம் இயற்கை உபாதை செல்வதற்காக சேகர் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்த வந்த கார் சேகர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்களமேடு போலீசார் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்டிக்கடையில் கொள்ளை நடந்தது
    • பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள முகமதுபட்டிணத்தை சேர்ந்தவர் அப்துல்கரீம். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பெட்டிக்கடையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல்கரீம் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்."

    • பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த கோரி தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தப்பட்ச குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்திட முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநில தழுவிய மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தொடக்க உரையாற்றினார்.

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் செல்லபிள்ளை வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் கோரிக்கைகளை மாவட்ட செயலாளர் சவிதா ராஜலிங்கம் விளக்கி பேசினார். அப்போது சத்துணவு ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.

    சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தப்பட்ச குடும்ப ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சுப்புகாளை நிறைவுரையாற்றினார். முன்னதாக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிசெல்வி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் அழகேஸ்வரி நன்றி கூறினார்.

    • போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • மேலும் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும்.

    பெரம்பலூர்:

    போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் சிறு குறு தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடைகளில் விற்கப்படுவதாக கண்டறியப்பட்டால், அந்த கடைகள் நிரந்தரமாக மூடி உடனடியாக 'சீல்' வைக்கப்பட்டு போலீசார் மூலம் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.. மேலும் தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி உரிமையாளர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும். மேலும் உரிமையாளரின் உறவினர்கள் வங்கி கணக்குகளும் தேவை இருப்பின் அரசு விதித்துள்ள வழிமுறைகளின்படி வங்கி கணக்குகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்."

    • பச்சையம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் தலையில் கரகங்களுடன் கோவிலை சுற்றி வந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்த குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத திருத்தேர் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.கடந்த 11-ந் தேதிஅன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 7-தினங்களாக பச்சையம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் இரவு திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலை சுவாமி மற்றும் பச்சையம்மனுக்கு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மாலை 3 மணி அளவில் சுவாமி மற்றும் அம்மன் தேரு கொண்டு வரப்பட்டு சிறப்பு தீவாரகனைகள் நடைபெற்றன. பின்னர் கிராம பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வடம் பிடித்து தேரை கோவிலை சுற்றி ஊர்வலமாக இழுத்து வந்தனர். பின்னர் மாலை ஐந்து மணி அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் கரகங்களுடன் கோவிலை சுற்றி வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். கீழப்புலியூர், புதூர், சிறுகுடல், வாலிகண்டபுரம் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மங்களமேடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.

    • மதனகோபால சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி விழா நடந்தது
    • சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நவநீதகிருஷ்ணனுக்கு கோகுலாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் நவநீதகிருஷ்ணனுக்கு கோகுலாஷ்டமி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை பட்டாபி பட்டாட்சியர் நடத்தி வைத்தார். விழாவின் தொடர்ச்சியாக பெரம்பலூர் எடத்தெரு கிருஷ்ணன் கோவிலில் ஸ்ரீ சந்தான கிருஷ்ணன் தொட்டில் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இன்று (20ம்தேதி) காலை 10 மணி அளவில் மதனகோபால சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி சமேத பூமா தேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து , எடத்தெரு கிருஷ்ணன்கோவில் வந்தடைந்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உரியடி உற்சவம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
    • 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் நாளை (21ம்தேதி) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், பெரம்பலூர் லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நாளை (21ம்தேதி) காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

    இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து இலவசமாக மருந்து மாத்திரைகளும். கண்கண்ணாடிகளும் வழங்கவுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்படுவோருக்கு மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

    எனவே கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகள் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் போன்ற கண்தொடர்பான பிரச்சனை உடையவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • உலக புகைப்பட தின விழா நடந்தது
    • போட்டோகிராபர் சங்கத்தின் சார்பில் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.

    புகைப்படக்கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையிலும், புகைப்பட கலையை ஊக்குவிக்கும் பொருட்டாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ந் தேதி உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று பெரம்பலூரில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் மணி தேவன் வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகிளும், புகைப்பட ஒளிப்பட கலைஞர்களுமான ஸ்டீபன், தினேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோரது முயற்சியால் பெரம்பலூர் மாவட்டத்தில் மாநில அளவில் ஆர்ட் ஆப் நேச்சர் எனும் தலைப்பில் புகைப்பட போட்டி ஆகஸ்ட் மாதம் 1ம்தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடந்தது.

    இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் பலர் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். இவ்விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் தலைவர் அருண், அக்ரி மாதவன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சாரண ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 90 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர், வேப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட சாரணர் பயிற்சி மையத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு பெரம்பலூர் கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கினார். முகாமில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களை சார்ந்த 90 பள்ளிகளை சேர்ந்த சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கடலூர் மாவட்ட பயிற்சி ஆணையர் செந்தில்குமார், முசிறி கல்வி மாவட்ட சாரண பயிற்சி ஆணையர் வேணுகோபால் ஆகியோர் சாரண இயக்க வரலாறு, கொடி ஏற்றும் முறை, சாரண பாடல்கள், முதலுதவி, சாரண சட்டம், சாரண சைகை, இடது கை குலுக்கல் முறை, சாரண குறிக்கோள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனர். முன்னதாக பெரம்பலூர் கல்வி மாவட்ட செயலாளர் மணிமாறன் வரவேற்றார். முடிவில் வேப்பூர் கல்வி மாவட்ட செயலாளர் தனபால் நன்றி கூறினார்.

    ×