என் மலர்
பெரம்பலூர்
- 4 டன் இரும்பு கம்பிகளை திருடிய 3 பேரை கைது செய்தனா்.
- குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா்:
பெரம்பலூா் அருகேயுள்ள வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் நல்லு மகன் வெங்கடாஜலம் (45). இவா், பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில் இரும்புக் கடை வைத்துள்ளாா். சம்பவத்தன்று இவர், இரவு கடையை பூட்டிவிட்டு காலை வந்து பாா்த்தபோது, கடைக்கு வெளியே வைத்திருந்த ரூ. 2.40 லட்சம் மதிப்பிலான சுமாா் 4 டன் இரும்புக் கம்பிகளை காணவில்லை.
இதுகுறித்து வெங்கடாஜலம் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா். சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா். இந்நிலையில், தனிப்படை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இரும்புக் கம்பிகளைத் திருடிய புதுக்கோட்டை மேலராஜ வீதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜா (39), அகரம்பட்டி, பூசந்துறையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முருகேசன் (53), திருக்கோகா்ணம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீரய்யா மகன் ராஜா (39) ஆகிய மூவரையும் கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
- 7 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது
- விருது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் வழங்கப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 7 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. அவர்களின் விவரம், செல்வசிகாமணி, தங்கவேல், ராஜேந்திரன், நடராசன், விநாயகமூர்த்தி, தவமணி, பிரவிணா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விருது நாளை(திங்கட்கிழமை) சென்னையில் வழங்கப்படுகிறது.
- ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
- குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
பெரம்பலூர்:
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண், பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்திடவும், தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காகவும் அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த ரூ.75 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கும், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 பேரை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மேற்காணும் திட்டத்தில் தகுதியான பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- சிறையில் அடைக்கப்பட்டார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் கீழப்பெரம்பலூர் அய்யனார் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது குன்னம் அருகே உள்ள வ.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மகன் ஆனந்த் (வயது 25) என்பவர் சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை திருடி, தள்ளிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும்.
- அனைத்துப் பள்ளிகளிலும் உடற் கல்வி மேம்படுத்தப்படும்.
பெரம்பலூரில் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்பதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்டத்தில் தனி அலுவலகம் அமைத்து "ஆசிரியர் மனசு" என்ற பெட்டி வைக்கப்பட்டு, புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
மேலும் ஆசிரியர் மனசு என்ற மின்னஞ்சல் உருவாக்கப்பட்டு அதன் மூலம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது சிறப்பான தேர்வு முடிவுகளை கொடுத்து தமிழ்நாட்டிற்கு முன்னோடி மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உங்களை பார்த்து மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தங்களது மாவட்டம் முன்னுக்கு வருவதற்கு பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளரகளிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, போக்சோ சட்டத்தில் கைதான கரூர் மாவட்டம், பொம்மாநாயக்கன்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் மீது முதன்மை கல்வி அதிகாரியின் அறிக்கை வந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். பள்ளி மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் பயனுள்ளதாக அமையும் என்றும், ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
- வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்:
விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் "தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்" என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 25 வகையான மரக்கன்றுகளை இலவசமாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. மகோகனி, செஞ்சந்தனம், பூவரசு, செம்மரம், மலைவேம்பு, வேங்கை, கடம்பு, ரோஸ்வுட், மருத மரம், இலுப்பை, புளி, நாவல், வாகை, எட்டிமரம், கடுக்காய், இலவங்கம் மற்றும் சந்தனம் உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தோட்டக்கலைத்துறை பண்ணை, தனியார் நாற்றங்கால் மற்றும் டி.ஆர்.டி.ஏ.- மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் மரக்கன்றுகளை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் முழு மானியத்தில் வழங்கப்படும்.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 80 சதவீத மரக்கன்றுகளும், இதர கிராமத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு 20 சதவீத மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட மரக்கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு உழவன் செயலி மூலமாக அல்லது அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ பதிவு செய்து உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையின்படி மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மரக்கன்றுகள் வினியோகம் "வரப்பு நடவு முறை" எனில் ஏக்கருக்கு 64 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், அதிகபட்சம் 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும்.
விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 400 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 1,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். விவசாயிகள் மரக்கன்றுகளை 40:20:20:20 என்ற விகிதாசாரத்தில் கலந்து பெற்று கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்திற்கு 1,65,000 மரக்கன்றுகள் இலக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்க தொகையாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் அடுத்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரை பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திடவும், களப்பணியாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். 50 சதவீத சிறு, குறு விவசாயிகள், 30 சதவீத பெண் விவசாயிகள், 19 சதவீத ஆதிதிராவிடர் மற்றும் 1 சதவீத பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதால் எதிர்காலத்தில் ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் மேம்படுவதோடு மாநிலத்தின் பசுமைப்பரப்பும், சுற்றுப்புற சூழலும் மேம்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்து மரக்கன்றுகள் பெறப்படாத விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்படும். ஆகவே ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, டி.கீரனூர் முகமது நகரை சேர்ந்தவர் கமருதீனின் மனைவி செல்வகனி என்கிற சையது அம்மாள்(வயது 57). இவர் கடந்த 30-ந் தேதி காலை தனது வீட்டை பூட்டி விட்டு அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, வெள்ளூர் கிராமத்தில் ஒரு துக்க காரியத்துக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சையது அம்மாள் வீட்டில் இருந்து சத்தம் கேட்டு கொண்டிருந்தது.
இந்த சத்தத்தை கேட்ட அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அஜீஸ் (24) என்பவர் வந்து சந்தேகத்துடன் சையது அம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து மர்மநபர் ஒருவர் வெளியே ஓடி வந்தார். இதனை கண்ட அஜீஸ் அக்கம், பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் உதவியுடன் அந்த மர்மநபரை கையும், களவுமாக பிடித்தார். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக மங்களமேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாரிடம் பொதுமக்கள் மர்மநபரை ஒப்படைத்தனர். இதையடுத்து மர்மநபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன
- 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31-ந் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் பெரம்பலூர் புறநகர் பகுதி மற்றும் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம் ஆகிய 4 தாலுகாக்களில் பல்வேறு பகுதிகளில் போலீசார் அனுமதியுடன் மொத்தம் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.
ஊர்வலம் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேள, தாளம் முழங்க, வாண வேடிக்கையுடன் புறப்பட்டு காமராஜர் வளைவு, வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது. பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அதன் பிறகு சரக்கு வாகனங்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.
- ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
- அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவை முன்னிட்டு "ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளை மையமாக கொண்ட கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் அவர் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய கண்காட்சியினை பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறுகையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், களப்பணியாளர்கள் நேரில் சென்று கணக்கெடுத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி ஊட்டச்சத்து மிக்க பொருட்களை வழங்குவார்கள். ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு சத்து குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி, ஒருங்கிணைப்பாளர் சவுந்தரவள்ளி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
- இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கீழ்கோடி தெருவை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன்கள் திருவேங்கடம் (வயது 46), வினோத். விவசாயியான இவர்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
திருவேங்கடம் மற்றும் வினாத் இருவரும் நேற்று வயலில் வேலை பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கிவிட்டனர். விஜயா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவில் உள்ள 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபவர்களின் தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன.
- பாளையம் புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- மாதா உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி 119-வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை ஆலய வளாகத்தில் கொடி கம்பத்தில் பாளையம் புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தை ஜெயராஜ் ஆரோக்கிய மாதா உருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அன்னை வழிகாட்டும் விண்மீன் என்ற தலைப்பில் மறையுரை சிந்தனை நடந்தது. பெருவிழா கொடியேற்றத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் இரவு சிறப்பு திருப்பலி நடைபெறவுள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான அன்னையின் ஆடம்பர சப்பர பவனி வருகிற 7-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. ஆண்டு பெருவிழா திருப்பலி 8-ந்தேதி காலை 8 மணிக்கு நடைபெற்று பெருவிழா நிறைவு பெறுகிறது."






