search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு அழைப்பு
    X

    வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு அழைப்பு

    • வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்:

    விவசாயிகளின் வாழ்வை வளமாக்கும் "தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்" என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 25 வகையான மரக்கன்றுகளை இலவசமாக வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. மகோகனி, செஞ்சந்தனம், பூவரசு, செம்மரம், மலைவேம்பு, வேங்கை, கடம்பு, ரோஸ்வுட், மருத மரம், இலுப்பை, புளி, நாவல், வாகை, எட்டிமரம், கடுக்காய், இலவங்கம் மற்றும் சந்தனம் உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தோட்டக்கலைத்துறை பண்ணை, தனியார் நாற்றங்கால் மற்றும் டி.ஆர்.டி.ஏ.- மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்யும் மரக்கன்றுகளை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் முழு மானியத்தில் வழங்கப்படும்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் 80 சதவீத மரக்கன்றுகளும், இதர கிராமத்தினை சேர்ந்த விவசாயிகளுக்கு 20 சதவீத மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. மேற்கண்ட மரக்கன்றுகளை பெற்றுக்கொள்வதற்கு உழவன் செயலி மூலமாக அல்லது அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலோ பதிவு செய்து உதவி வேளாண்மை அலுவலர் பரிந்துரையின்படி மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். மரக்கன்றுகள் வினியோகம் "வரப்பு நடவு முறை" எனில் ஏக்கருக்கு 64 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், அதிகபட்சம் 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும்.

    விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 400 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு 1,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். விவசாயிகள் மரக்கன்றுகளை 40:20:20:20 என்ற விகிதாசாரத்தில் கலந்து பெற்று கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்திற்கு 1,65,000 மரக்கன்றுகள் இலக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்க தொகையாக உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் அடுத்த ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.

    மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரை பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்திடவும், களப்பணியாளர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். 50 சதவீத சிறு, குறு விவசாயிகள், 30 சதவீத பெண் விவசாயிகள், 19 சதவீத ஆதிதிராவிடர் மற்றும் 1 சதவீத பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதால் எதிர்காலத்தில் ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் மேம்படுவதோடு மாநிலத்தின் பசுமைப்பரப்பும், சுற்றுப்புற சூழலும் மேம்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்து மரக்கன்றுகள் பெறப்படாத விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை வழங்கப்படும். ஆகவே ஆர்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×