என் மலர்
பெரம்பலூர்
- பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார்
- வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட செட்டிகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் அங்கையர் செல்வி (வயது 35). இவர் வயலில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அங்கையர் செல்வி யை பாம்பு கடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அங்கையர் செல்வி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பாடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்
- நடந்து சென்ற போது நடந்த சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் தொளுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளியாக பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நாகராஜ் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதியது. இதில் நாகராஜ் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக நாகராஜ் உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் விரைந்து சென்ற மங்களமேடு போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ரூ.3½ லட்சம் இருந்த இரும்பு கல்லா பெட்டியை திருடி சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை நிறுவனம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து நிறுவனத்தை ஊழியர்கள் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை 9.20 மணிக்கு நிறுவனத்தை திறப்பதற்கு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது நிறுவனத்தின் கீழ்புறம் பக்கவாட்டில் உள்ள இரும்பு கதவின் பூட்டும், ஷட்டர் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது நிறுவனத்தில் வியாபாரம் செய்த பணம் வைக்கப்பட்டிருந்த கல்லா பெட்டி திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
கல்லா பெட்டியில் கடந்த 3 நாட்களாக நிறுவனத்தில் பொருட்கள் விற்பனை செய்தது மூலம் கிடைத்த தொகை ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 360 இருந்தது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து நிறுவனத்தின் மேலாளர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
- கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
- அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு மதுரகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் மதுரகாளியம்மன் ஒவ்வொரு அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார். வருகிற 4-ந்தேதி ஆயுதபூஜை விழாவும், சரஸ்வதி அலங்காரம் நடக்கிறது. 5-ந்தேதி விஜயதசமியன்று மகிசாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு மற்றும் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. மேலும் கோவிலில் நவராத்திரி கொழு வைக்கப்பட்டிருந்தது. இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் உற்சவ அம்மனுக்கு மரகதவல்லித்தாயார் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உற்சவ அம்மனுக்கு அகிலாண்டேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே 5-ந்தேதி அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் உற்சவ அம்மனுக்கு வாலாம்பிகை அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கோவில்களில் நடந்த நவராத்திரி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
- அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், அதற்கு முன்பு உள்ளூர் இடமாறுதல், மாவட்ட இடமாறுதல் உடனடியாக வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கும், 5 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கும் எந்தவித நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசே வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- விவசாய குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
- கலெக்டர் அலுவலகத்தில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். வேப்பந்தட்டை தாலுகா, மாவிலங்கை கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் சகோதரர்கள் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது வெங்கடாஜலத்தின் மூத்த மகள் சிவரஞ்சனி திடீரென்று பையில் வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெய்யை தீ குளித்து தற்கொலை செய்வதற்காக தனது உடல் மீதும், குடும்பத்தினர் மீது ஊற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர்.
இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் வயலுக்கு அருகில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தினை வயலுக்கு சென்று வர பாதையாக பயன்படுத்தி வந்ததாகவும், இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த பாதையை ஆக்கிரமித்து சுவர் எழுப்பியும், மண் வெட்டி கரை எழுப்பியும் அடைத்துள்ளனர். இதனால் அவர்களால் விவசாயம் செய்ய வயலுக்கு செல்ல முடியவில்லையாம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் அந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தங்களது வயலுக்கு பாதை அமைத்து கொடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்பதற்கு தீ குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றனர்.
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி தொடங்கியது
- வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 44 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 6 வார நிர்வாக பயிற்சி பெரம்பலூர் தனியார் பள்ளியில் தொடங்கியது. பயிற்சியினை கலெக்டர் தொடங்கி வைத்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் பயிற்சியை முறையாக கற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் பணியாற்ற வேண்டும், என்றார். இந்த பயிற்சி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கவிதா (ஆலத்தூர்), சின்னதுரை (குன்னம்), பெரம்பலூர் தலைமையிடத்து வருவாய் ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 72). இவர் கடந்த மாதம் 24-ந்தேதி பெரம்பலூருக்கு மொபட்டில் வந்தார். பின்னர் அவர் பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த வேலாயுதத்தை அக்கம், பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை வேலாயுதம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
- 38-வது சிறப்பு முகாம்
பெரம்பலூர்
தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 38-வது சிறப்பு முகாம்களை நேற்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- மகாளய அமாவாசையையொட்டி நடந்தது
பெரம்பலூர்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மகாளய அமாவாசை என்பதால் கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.
- சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
பெரம்பலூர்:
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை பின்புறம் உள்ள ஓட்டர் தெருவில் வசித்து வந்தவர் குமார் மகன் நீலகண்டன் (வயது 26). இவர் மீது கொலை உள்ளிட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பெரம்பலூர் காவல் நிலைய ரவுடி பட்டியலில் இவர் பெயர் உள்ளது.
இந்நிலையில் நீலகண்டன் சம்பவத்தன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பெரம்பலூர் - துறையூர் சாலையில் அம்மாபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அபபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விபதத்து நேரிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து நீலகண்டன் உயிரிழந்தார்.
தகவலறிந்து பெரம்பலூர் போலீசார் சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






