search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Siruvachur MaduraKaliamman temple"

    • காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை.
    • முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    காளி என்றதும் பொதுவாகவே நம் மக்களுக்கு அவளிடம் பக்தியையும் தாண்டி பயம் தான் ஏற்படும். ஆனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு அடுத்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மனைப் பார்த்தால் அந்த எண்ணமே மாறி விடும். தேனை தேடி பறந்து வரும் தேனீக்களாக ஒரு முறை அம்மனை தரிசித்து வந்தால் மீண்டும் மீண்டும் அத்தலம் செல்லும் ஆவலை ஏற்படுத்துகிறாள் அன்னை.

    இங்கு தான், கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அளிக்கும் வரப்பிரசாதியாய் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அன்னை மதுரகாளி. காளி என்றாலே கோபக்கனலாய் இருப்பாளோ என்றால் இல்லை. பெயருக்கு ஏற்றார் போல் முகத்தில் சாந்தமும், கருணையும் ததும்ப வீற்றிருக்கிறாள் மாகாளி.

    சிலப்பதிகார நாயகி கண்ணகி தான் இங்கு மதுரகாளியம்மனாக வீற்றிருக்கிறாள் என்பது செவி வழி செய்தி. பிரம்மேந்திராள் ஸ்ரீ சக்கரத்தை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை.

    மதுர காளியம்மன் திருக்கோயிலில், காலை 11 மணிக்கு தொடங்கும் அபிஷேகம் பகல் 1.30 மணியளவில் தங்கக் கவச அலங்காரத்துடன் மஹா தீபாரதனை செய்யப்பட்டு நிறைவடைகிறது. மஹா தீபாரதனைக்கு முன் உடுக்கை அடிப்போர் இருவர், உடுக்கை ஒலிக்க அன்னையை உரத்த குரலிட்டு அழைக்கின்றனர். அதை நேரில் கேட்கும் போது நம்மையறியாமல் உடலும் உள்ளமும் சிலிர்ப்பதை உணர முடியும். அப்படி அழைக்கும்போது மலையை விட்டு அன்னை ஆலயத்தில் பிரவேசிப்பதாக ஐதீகம்.

    ஸ்தல வரலாறு

    ஆதியிலே சிறுவாச்சூரில் செல்லியம்மனே வழிபடும் தெய்வமாக விளங்கினாள். அனைவருக்கும் தாயான அவளிடம் ஒரு மந்திரவாதி தவம் செய்து பல அரிய சக்திகளைப் பெற்றான். அன்பிற்கும் தவத்திற்கும் தான் கட்டுப்படுபவள் என்பதை அன்னை இத்திருவிளையாடல் மூலம் விளக்கினாள். ஆனால் தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல அந்த அன்னை அளித்த மந்திர சக்தியால் அன்னையையே கட்டுப்படுத்தி தீய செயல்களுக்கு உட்படுத்தினான் அவன்.

    மந்திரவாதியின் கொடுமையால் அவதிப்படும் தன் மக்களை காக்க ஒரு வெள்ளிக்கிழமை இரவு மதுர காளியம்மன் இத்தலம் வந்து இரவு தங்க செல்லியம்மனிடம் அனுமதி கேட்கின்றாள். செல்லியம்மனும் மந்திரவாதிக்கு பயந்து இடம் கொடுக்க மறுக்க அனைத்தும் உணர்ந்த அன்னை சிரித்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் என்று அன்றிரவு அங்கேயே தங்கினாள். அடுத்த நாள் மந்திரவாதி தனது மந்திர வேலைகளை அன்னையிடம் காட்டினான்.

    தேவர்கள் மனிதர்கள் மற்றும் சகல ஜீவவராசிகளையும் காக்க சண்டன்,முண்டன், ரக்த பீஜன், மகிஷன் போன்ற வல் அசுரர்களையே வதம் செய்த அகிலாண்ட நாயகியை அற்ப மந்திரவாதியால் என்ன செய்து விட முடியும். அவனது செருக்கையழித்து வதம் செய்து பக்தர்களைக் காப்பதோடு துஷ்டர்களையும் தான் அழிப்பவள் என்று காட்டினாள் அன்னை மதுர காளியம்மன்.

     செல்லியம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இத்தலத்திலேயே கோவில் கொள்கிறாள் அன்னை. செல்லியம்மன் அருகிலுள்ள பெரியசாமி மலை சென்று கோவில் கொள்கிறாள். ஆதியிலே இங்கே அமர்ந்தவள் என்பதால் செல்லியம்மனுக்கே இப்போதும் முதல் மரியாதை செய்யப்படுகின்றது. பூசையின் போது தீபாரதனை முதலில் மலை நோக்கி காட்டப்பட்டு, பின்னரே மதுர காளியம்மனுக்குத் தீபாராதனை காட்டப்படுகின்றது.

    மதுரை காளியம்மன் என்ற திருநாமமே மருவி மதுரகாளியம்மனாக மாறியது என்றும் சினங்கொண்டு வந்த மதுரை காளியம்மன் இங்கு வந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவதால் மதுர காளியம்மன் என்ற திருநாமம் கொண்டாள் என்பதும் வழக்கு.

    சிறுவாச்சூருக்கு வெள்ளியன்று வந்த அம்மன் திங்களன்று பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தாள் என்பதனால் வெள்ளி மற்றும் திங்கள் மட்டுமே அன்னையின் சன்னதி திறக்கப்பட்டு பூசை செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் செல்லியம்மனுடன், மதுர காளியம்மனும் பெரிய சாமி மலையிலே தங்குவதாக ஐதீகம். காலை 6 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது.

    இரவு 8 மணி வரை அன்னையை தரிசிக்கலாம். மாலையில் சில நாட்களில் சந்தனக்காப்பு அலங்காரமும் அன்னைக்கு செய்யப்படுகின்றது. திங்கள், வெள்ளிக்கிழமைகள் தவிர பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், நவராத்திரி நாட்களிலும் மதுரகாளியம்மனை தரிசிக்கலாம்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • மகாளய அமாவாசையையொட்டி நடந்தது

    பெரம்பலூர்

    புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. மகாளய அமாவாசை என்பதால் கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    பெரம்பலூர் மாவட் டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ளது மதுரகாளியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டு திருவிழா கடந்த 7-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 14-ந்தேதி மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையடுத்து சந்தி மறித்தல், குடி அழைத்தல், சிவ வழிபாடு, பெருமாள் வழிபாடு, மாரியம்மன், அய்யனார் மற்றும் மலை வழிபாடுகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் அம்பாளுக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மதுரகாளியம்மன் பல்வேறு அலங்காரத்துடன் சுவாமியுடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து மதுரகாளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேச கங்கள் செய்யப்பட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக நிலையை வந்தடைந்தது.

    இன்று அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை 25 -ந்தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்கள் திரு வீதி உலா வருதல் மற்றும் விடையாற்றி விழா நடைபெற உள்ளது. 26-ந் தேதி மூலஸ்தான வழிபாட்டுடன் சுவாமிமலை ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
    ×