என் மலர்
பெரம்பலூர்
- 108 ஆம்புலன்ஸ் மூலம் 1¾ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17 வாகனம் இயக்கப்பட்டு வருகிறது
பெரம்பலூர்
2008-ஆம் ஆண்டு தமிழக மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சுகள் 17 இயக்கப்பட்டு வருகிறது. இதில் அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்சுகள் 15-ம், அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் ஒன்றும், பச்சிளம் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் ஒன்றும் இயக்கப்பட்டு வருகிறது பெரம்பலூர் மாவட்டத்தில் சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 800 பேர் பயன்பெற்றுள்ளனர் இதில் பிரசவ தேவைக்காக மட்டும் 36 ஆயிரத்து 904 பேரும், சாலை விபத்துகளில் 28 ஆயிரத்து 324 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1 லட்சத்து 3 ஆயிரத்து 572 பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக பிரசவத்திற்காக அழைக்கப்பட்டவர்களில் 308 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் துரித நடவடிக்கையால் ஆம்புலன்சில் குழந்தையை பிரசவத்துள்ளனர். மேலும் பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 318 கர்ப்பிணி தாய்மார்கள், அவர்களது இல்லங்களிலேயே குழந்தையை ஈன்றெடுத்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளார் அறிவுக்கரசு தெரிவித்தார்."
- இடி தாக்கி விவசாயி பலியானார்
- மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி நாதன் (வயது45). விவசாயியான இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
துளசிநாதன் அவரது நண்பர் சிலம்பரசன் ஆகியோர், அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இடி துளசிநாதன் மற்றும் மாடு மீது பாய்ந்தது. இதில் துடிதுடித்து துளசிநாதன் மற்றும் மாடு சம்பவ இடதிலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒப்பந்த துப்பரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்
- தீபாவளி போனஸ் வழங்க கோரி
பெரம்பலூர்:
தீபாவளி போனஸ், மாத சம்பளம் , நிலுவைத் தொகையை உடனே தரக் கோரி பெரம்பலூர் நகராட்சியை கண்டித்து இன்று ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் இன்று காலை தங்களுக்கு மாத சம்பளம், தீபாவளி போனஸ் மற்றும் இபிஎப் நிலுவைத் தொகை தராததை கண்டித்து ெபரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில்உள்ள அரியலூர் பஸ் நிறுத்தம் எதிரில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஐம்பதிற்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- விசுவக்குடியில் மிலாது நபி விழா நடைபெற்றது.
- சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள விசுவக்குடியில் முகமது நபி பிறந்த நாளை மிலாது நபி விழாவாக அனுசரித்தனர். விழாவையொட்டி சமுதாய கூடத்தில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது சுலைமான் தலைமை தாங்கினார். லெப்பைகுடிகாடு கிழக்கு பள்ளிவாசல் இமாம் முகம்மது ஆரிப் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி கந்தூரி விருந்து நடைபெற்றது. இதில் மத நல்லிணக்கத்துடன் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்."
- வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 2,640 லிட்டர் பால் சாலையில் கொட்டி வீணானது.
- வேன் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் ஆவின் நிறுவனத்திற்கு கிராமங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்து கொண்டு ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. பெரம்பலூர்-ஆத்தூர் சாலைக்கு வருவதற்காக சோமண்டாபுதூர் பிரிவு ரோடு அருகே மலைபாதையில் பால் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வேனில் இருந்த 66 கேன்களில் இருந்த தலா 40 லிட்டர் வீதம் மொத்தம் 2 ஆயிரத்து 640 லிட்டர் பால் தரையில் கொட்டி ஆறு போல் ஓடியது. இதையடுத்து வேன் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
- தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம்
பெரம்பலூர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் வரதன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் நிறுவனர் நல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், சங்கத்தின் பொதுச் செயலாளர் நேரு, அமைப்பு செயலாளர் நாகராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து பணியாற்றி கொண்டிருக்கும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு விரைவில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். மாறுபட்ட பாடத்தில் உயர்கல்வி பயின்ற அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 2 ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். அரசாணை எண் 194, நாள் 12.9.2018-ன்படி 6.4.2018 என்ற தேதியை நீக்கம் செய்து அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் 50 சதவீதத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் பொருளாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்."
- அ.தி.மு.க. பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புது அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் அதே பகுதியில் அ.தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார். ராமமூர்த்தி கடந்த 7-ந் தேதி இரவு அருகே உள்ள அடைக்கம்பட்டியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது டி.களத்தூர் பிரிவு ரோட்டில் சென்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராமமூர்த்தி படுகாயமடைந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமமூர்த்தி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கண் வலியால் அவதிப்பட்டு வந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒகளூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ராசு (வயது 73). தனது மனைவியுடன் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாகவே கண் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ராசு களைக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் வாந்தி எடுத்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மாவட்டம், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்."
- சர்வதேச முதியோர் தின விழா நடைபெற்றது
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா தந்தை ரோவர் முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவன தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மன நல மருத்துவர் டாக்டர் வினோத், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் ரஞ்சித்குமார், வட்டார மருத்துவர் டாக்டர் சூரியகுமார் ஆகியோர் பேசினர்.
விழாவையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது, அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு மருத்துவர்களால் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இதில் முதியோர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி கீதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.
- மத்திய அரசு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்
- மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பெரம்பலூர்:
மத்திய சமூக நலம் மற்றும் அதிகாரமளித்தல்துறை இணை அமைச்சர் பிரதிமா பௌமிக், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில், பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதியில், ஒரு குடியிருப்பில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பை துவங்கிவைத்து, அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதன் பின்னர் அமைச்சர் பிரதிமா பௌமிக் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நாட்டின் கட்டமைப்புகளான சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிராமப்புற பகுதிகளில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் நோக்கில் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 2020 -21 ஆம் நிதி ஆண்டில் 25 கிராம ஊராட்சிகளில் 20,118 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் வட்டம் கவுள்பாளையம் கிராமத்தில் மொத்தம் உள்ள 776 குடியிருப்புகளில் 205 குடியிருப்புகளில் குடிநீர் இணைப்புகள் ஏற்கனவே உள்ளது. மீதமுள்ள 571 வீடுகளுக்கும் ரூ.46.06 லட்சம் மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 சதவீதம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிய ஊராட்சியாக கவுள்பாளையம் உள்ளது.
போதையில்லா சமூகத்தை உருவாக்குவதில் பெற்றோர், பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. போதையிலிருந்து மீண்டவர்கள் பிரதமர் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் தங்களது பெயரை பதிவு செய்துக் கொண்டால் அவர்களின் மறுவாழ்வுக்கு நிதி உதவியும், தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடனுதவியும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி, மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, கோட்டாட்சியர் ச.நிறைமதி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கணபதி, மாவட்ட சமூக நல அலுவலர் ரவிபாலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- வருகின்ற 11-ந் தேதி நடக்க உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவானந்தம், கருணாநிதி, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினரும், தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுசெயலாளருமான சாமிநடராஜன், மத்திய, மாநிலக்குழு முடிவுகள் குறித்து விளக்க பேசினார்.
கூட்டத்தில் பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பணியாளார்கள் 28 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பது, கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் இதில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வரும் 11ம்தேதி சமூக மத நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவது, வெற்றி பெற திரளாக பொதுமக்களை கலந்து கொள்ள செய்வது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிர் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் காரணத்தால் மிகுந்த விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளதால் அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் கலையரசி, அகஸ்டின், ரெங்கநாதன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், டாக்டர் கருணாகரன், மகேஸ்வரி, சின்னப்பொண்ணு, ரெங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காட்டுபன்றி கறியை பங்கு வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- வன அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து வனச்சரக அலுவலர் பழனிகுமரன் மேற்பார்வையில் வனவர் பிரதீப்குமார், வனக்காப்பாளர்கள் செல்வகுமாரி, ராஜீ, ஜெஸ்டின் செல்வராஜ், வனக்காவலர் அறிவுசெல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் அம்மாபாளையம் பிரிவு புலியூர் பீட் எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில் சோதனை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்டுப்பன்றியை கூறு போட்டுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த பிச்சைப்பிள்ளை மகன் சங்கர் (வயது 47), தங்கராஜ் மகன் சுப்ரமணியம் (44) என்பதும், சங்கரின் வயல்காட்டில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட நாய், மக்காசோள பயிர் காட்டிற்குள் வந்த காட்டுப்பன்றியை கடித்து குதறியதால் இறந்துபோனது. நாங்கள் அதனை எடுத்து சமைப்பதற்காக கறியை கூறுப்போட ்டுக்கொண்டிருந்தோம் என்றனர்.
இது குறித்து பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் வழக்கு பதிந்து சங்கர், சுப்ரமணியம் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த காட்டு பன்றிகறியை பறிமுதல் செய்து அவர்களுக்கு 39 ஆயிரம் அபராதம் விதித்தார்.






