என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகின்றது.
    • சிறப்பு பூஜையில் குபேரர்-சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கா ரங்கள் மேற்கொ ள்ளப்ப ட்டன.

    பெரம்பலூர்

    தீபாவளி நாளில் குபேரன் மற்றும் லட்சுமி பூஜைகள் நடத்தி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே, குபேர மற்றும் லட்சுமி வழிபாடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

    அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகின்றது.

    கொரோனா தொற்று காலம் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி நாளில் நடைபெற்ற குபேர பூஜைகள் குறைவான நபர்கள் பங்கேற்கும் விதமாகவே நடைபெற்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் குபேரர்-சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கா ரங்கள் மேற்கொ ள்ளப்ப ட்டன.

    இதில் நாணயங்கள், பொன், பொருட்களைக் கொண்டும் குபேரருக்கு சிறப்பு அர்சனைகள் நடை பெற்றன. அதனைத் தொடர்ந்து அன்ன தானமும் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடிட்டர் ஆறுமுகம் தலைமையில் பொறியாளர் ராமலிங்கம், செட்டிக்குளத்தைச் சேர்ந்த மணிக ண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    நாணயங்கள் இலவச விநியோகம் குபேர பூஜையில் வைத்து பூஜிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், நாண யங்கள், நகைகளை வீட்டில் வைத்து குபேர மற்றும் லட்சுமி பூஜைகளை செய்து வந்தால், கஷ்டங்கள் நீங்கி, லட்சுமி கடாட்ஷம் பெருகும். இதனை கருத்தில் கொண்டு, தரிசனத்துக்கு வரும் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட நாணயங்கள் உபய தாரர்கள் மற்றும் பக்தர்களால் ஆண்டு தோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயக்குமார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
    • நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    பெரம்பலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் பாட்டை தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜாமணி என்ற மனைவியும், ரேவதி என்ற மகளும், குணா என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே அவர் வெள்ளாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த குன்னம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்து போன வாலிபர் குடிபோதையில் இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • எம்.சி.ஏ. முதலாமாண்டு தொடக்க விழா நடைபெற்றது
    • எம்.சி.ஏ. முதலாமாண்டு தொடக்க விழா நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் முதுகலை கணினி பயன்பாட்டு துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு துவக்க விழா நடந்தது.

    ரோவர் கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். ரோவர் கல்வி நிறுவனங்களின் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து முதலாமாண்டு வகுப்பினை தொடங்கிவைத்து பேசுகையில், மாணவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, அவர்களிடம் படைப்பாற்றலையும் மேம்படுத்துங்கள் பேராசிரியர்கள் முயற்சி செய்யவேண்டும் என தெரிவித்தார்.

    இதில் பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக ரோவர் பொறியியல் கல்லூரியின் முதுகலை கணினி பயன்பாட்டு துறை தலைவர் சர்புதின் வரவேற்றார். முடிவில் அலுவலக மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • வெங்காயத்தில் திருகல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மகசூல் இழப்பை ஏற்படுத்தும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகள் கடைபிடித்து திருகல் நோயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்திட தோட்டக்கலைத்துறை ஆலோசனை கூறியுள்ளது.

    இது குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 215 ஹெக்டேரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் குளிர்ச்சியான தட்ப வெட்பநிலை மற்றும் மழையின் காரணமாக வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இந்நோயானது கொலிட்டோடிரைக்கம் குளோஸ்போரியாய்ட்ஸ் எனப்படும் ஒருவகை பூஞ்சை மூலம் தோன்றுகின்றது. இந்நோய் கொலிட்டோடிரைக்கம் கருகல் நோய், பறவைக் கண்நோய் எனவும் அழைக்கப்படும். இப்பூஞ்சை பாதித்த செடிகளின் தாள்கள் மடிந்து தொங்கும். அடுத்த கட்டமாக வெங்காயத்தின் கழுத்துபகுதி நீண்டு, குமிழங்கள் சிறுத்து காணப்படும். தாக்குதல் தீவரமானால் செடிகள் அழுகிவிடும்.

    இந்நோயானது 50 முதல் 100 விழுக்காடு வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும், பாதிப்பிற்குள்ளான செடிகளை பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது. ஆனால் மற்ற செடிகளுக்கு பரவாமல் தடுக்கலாம். இதற்கு இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அப்புறப்படுத்திவிட்டு பூஞ்சாணக் கொல்லிகளை தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு கார்பெண்டசிம் பூஞ்சாணக்கொல்லி ஒரு கிராம் என்ற அளவில் கலந்து செடிகள் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.

    மாற்றாக புரோபிகோனசோல் 25 இசி அல்லது ஹெக்சகோனசோல் 5 இசி இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சாணக்கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி வீதம் இலைவழியாக தெளிக்கலாம். பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும்.

    இப்பூஞ்சையானது நிலத்தில் பல ஆண்டுகள் வளரும் தன்மை பெற்றது. எனவே பாதிக்கப்பட்ட செடிகளை நிலத்தில் விட்டு வைக்காமல் அகற்றி எரித்துவிட வேண்டும். நன்மை செய்யும் பூஞ்சையான டிரைக்கோடெர்மா ஹார்சியானம் எனும் உயிரியல் கட்டுப்பாடு காரணியை 1 கிலோ எடுத்து 100 கிலோ மக்கிய எருவில் கலந்து நிலத்தில் இடுவதன் மூலம் கொலிட்டோடிரைக்கம் பூஞ்சையின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

    • பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
    • புத்தாக்கமேம்பாட்டுத் திட்டத்தில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வட்டார வள மையத்தில் பள்ளி புத்தாக்கமேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அரசின் குறு சிறு நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது பள்ளி கல்வித்துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் என்கிற திட்டத்தினை செயல்படுத்துகிறது.

    இத்திட்டத்தினை செயல்படுத்த பள்ளி கல்வித்துறையின் மாவட்ட சுற்று சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் களஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு பள்ளியிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒரு வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு பள்ளி புத்தாக்கமேம்பாட்டுத் திட்டம் குறித்தும் அதனை 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொண்டு செல்லும் பொருட்டு ஒருநாள் பயிற்சி நடந்தது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கிவைத்தார். யுனிசெப் நிறுவன கருத்தாளர் ராஜேஷ், திருச்சி அண்ணா பல்கலைகழக கள ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 46 வழிகாட்டி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • கருப்பு சட்டை அணிந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த 28 நபர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 1 ந்தேதிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே தொழிலாளர் நலத்துறை உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்றுடன் 25 வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கருப்புச்சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர். இந்த தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளியாக உள்ளதென தெரிவித்துள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

    • புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் பயனடைந்துள்ளனர்
    • கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்::FILEPOTO:FILEPOTO

    புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளார். பெண்கள் முன்னேற்றத்துக்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக 440 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், நிதி கல்வி புத்தகம் அடங்கிய புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து, 2 ஆம் கட்டமாக 1,182 மாணவிகளு வழங்கப்பட்டது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1,622 மாணவிகள் இத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடையில் பணியில் இருந்த இளையராஜா நேற்று அதிகாலை கடையை பூட்டிவிட்டு சென்றார்.
    • தீ விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் வீல் அலைன்மென்ட் மற்றும் கார் உதிரி பாகங்கள், டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முழுவதும் கடையில் பணியில் இருந்த அவர் நேற்று அதிகாலை கடையை பூட்டிவிட்டு சென்றார்.

    இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் அந்த கடையில் இருந்து அதிக அளவில் கரும்புகை வந்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதியினர் உடனடியாக கடையின் உரிமையாளரான இளையராஜாவுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

    இதைடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கார் உதிரி பாகங்கள், டயர்கள், கார் அலைன்மென்ட் செய்ய பயன்படுத்தும் எந்திரங்கள் மற்றும் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் உள்ளிட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

    இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 4 ஏரிகள் நிரம்பின கடல் போல் காட்சியளிக்கின்றன
    • அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பச்சைமலை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள் மீண்டும் நிரம்பி வருகின்றன. இதில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், லாடபுரம் பெரிய ஏரி, அரும்பாவூர் பெரிய ஏரி, வடக்கலூர் ஏரி ஆகியவை ஏற்கனவே நிரம்பின. தற்போது நூத்தப்பூர், வடக்கலூர் அக்ரகாரம், வெண்பாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளும், வெங்கலம் சிறிய ஏரியும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது."

    • விபத்தில் நர்சிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.
    • 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    பெரம்பலூர்

    திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் பிரியங்கா (வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற பிரியங்கா தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் மாலையில் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது திடீரென்று பிரேக் போட்டதில் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியங்கா தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து பிரியங்காவை மீட்டு பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெட்டும் கரும்புக்கு முன்பணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பது வழக்கம்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெட்டும் கரும்புக்கு விவசாயிகளுக்கு முனபணமாக அக்டோபர் மாததத்தில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பது வழக்கம். கரும்பு விவசாயிகள் இந்த தொகையை வைத்துதான் முன்பணம் கொடுத்து கரும்பு வெட்ட ஆட்களை தக்க வைப்பார்கள். ஆனால் 2022-23-ம் ஆண்டுக்கு இதுவரை சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு முன்பணம் வழங்கவில்லை. இதனால் கரும்பு வெட்டும் ஆட்களுக்கு முன்பணம் கொடுப்பதில் விவசாயிகளுக்கு தாமதம் ஏற்படுகிறது. கரும்பு வெட்டும் ஆட்களும் வேறு ஆலைக்கு ஒப்புதல் ஆகிவிட்டால் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டுவதில் இன்னும் தாமதம் ஏற்படும். எனவே பெரும்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு இந்த மாதத்திலேயே முன்பணம் கொடுக்க வேண்டும் என்று ஆலையின் தலைமை நிர்வாகிக்கு விவசாயிகளும், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • மகா அபிஷேகம் நடத்தப்பட்டது

    பெரம்பலூர்

    இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகள் தான் வந்தன. எனவே பெருமாள் பக்தர்கள் ஐப்பசி மாத முதல் சனிக்கிழமையை புரட்டாசி மாத 5-வது சனிக்கிழமையாக பாவித்து நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். அதன்படி பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள பத்மாவதி தாயார், கோதை ஆண்டாள் நாச்சியார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6 மணிக்கு சேத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பெருமாள் கோவிலுக்கு கவச வீதி உலா நடந்தது. அதனை தொடர்ந்து கோவிலில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. பின்னர் பிரசன்ன வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், கோதை ஆண்டாள் நாச்சியார் ஆகிய மூலவர்களுக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசிய கவசம் சாத்தப்பட்டு, மதியம் 12 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்."

    ×