என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வர அறிவுறுத்தப்பட்டது
    • விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    வணிகர்கள் முன் கூட்டியே வருமான வரி செலுத்த முன்வரவேண்டும் என பெரம்பலூரில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி அறிவுறுத்தினார். பெரம்பலூரில் வருமான வரி துறை அலுவலகம் சார்பில் முன் கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில்

    வருமானவரி செலு த்துபவர்கள் நான்கு தவணைக ளில் செலுத்த வேண்டிய நடப்பாண்டிற்குண்டான வரியில் 75 சதவீதம் மூன்றாவது தவணை வரியை டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் செலுத்தியிருக்க வேண்டும். முன்கூட்டியே வருமான வரி செலுத்துபவர்களுக்கு நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். அப்படி செலுத்த தவறனால் பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்ததோடு, நன்மை மற்றும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார்.

    திருச்சி வருமான வரி அதிகாரி கண்ணன் வருமானவரி தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். பெரம்பலூரி வருமானவரி அதிகாரி உமாமகேஸ்வரி, மாவட்ட வணிகர் சங்க தலைவர் சண்முக நாதன் மற்றும் வணிகர்கள், ஆடிட்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட வருமான வரி அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். முடிவில் வருமான வரி ஆய்வாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
    • மேம்பாட்டு ஆணைய செயலாளர் நடவடிக்கை

    பெரம்பலூர்:

    விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டா்.

    இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் கல்யாணி, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் தற்காப்பு பயிற்சி (டேக்வாண்டோ) அளித்துவரும் பயிற்றுனர் தர்மராஜன் என்பவர் மதுபோதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷிடம் புகார் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பயிற்றுனர் மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய சுரேஷை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில், விளையாட்டு விடுதி மாணவிகள் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலாளர் உத்தரவிட்டார்.

    • வாகன விபத்தில் விவசாயி பலியானார்
    • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45) விவசாயி. இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணாபுரம் சென்றுவிட்டு பின்னர் பாண்டகப்பாடி நோக்கி சென்றார். அப்போது நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் கிருஷ்ணாபுரம் நோக்கி மொப்பட்டில் வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரத்திகு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் மோதிக்கொண்டன். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கனகராஜுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு

    பெரம்பலூர்:

    சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தி.மு.க. அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் மற்றும் அமைப்பு செயலாளர் வரகூர் அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.

    கிழக்கு ஒன்றிய செயலாளர் கர்ணன் அனைவரையும் வரவேற்றார், மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட பாசறை செயலாளர் இளஞ்செழியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, முன்னாள் சேர்மன் வெண்ணிலா, துணை சேர்மன் சுசீலா, மாணவரணி துணை செயலாளர் ராஜா, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாணவரணி கலையரசன், மேற்கு அவைத்தலைவர் வேணுநாதன், கிழக்கு அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஆலத்தூர் துணை சேர்மன் கமலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட பொருளாளர் மதுபாலகிருஷ்ணன், மருதடி சரவணன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன . முடிவில் ஸ்டாலின் நன்றி கூறினார். 

    • வேப்பூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியப் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆசியுடன் எதிர்க்கட்சி தலைவரும், முன்னால் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமி யின் ஆணைக்கிணங்க வேப்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, பால் விலை உயர்வு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளிட்ட கோரிக்கள் மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் வேப்பூர் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரகாசி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முத்தமிழ் செல்வன், ஒன்றிய கவுன்சிலர் இளங்கோவன், திருமாந்துறை கிளைகழக உறுப்பினர் சிலம்பரசன் உட்பட தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் 500 -க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • வேப்பந்தட்டையில் அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடந்தது
    • தி.மு.க. அரசை கண்டித்து

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் அ.தி.மு.க ஒன்றிய கழகத்தின் சார்பில் தி.மு.க அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவப்பிரகாசம், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் முன்னாள் எம்.எல்.ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு தமிழக அரசின் விலைவாசி உயர்வு குறித்து சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேப்பந்தட்டை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் இருந்து திரளான அ.தி.மு.க வினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வினோத் வரவேற்று பேசினார். முடிவில் செல்லப்பிள்ளை நன்றி கூறினார்.

    • மின்சிக்கன வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பாலக்கரையில் தொடங்கிய மாரத்தான் ரோவர் ஆர்ச், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு சந்திப்பில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மினி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிகாரி அம்பிகா கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். விழாவில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • 35 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றன
    • பலத்தமழை காரணமாக

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சிறிது நாட்களிலேயே லாடபுரம் பெரிய ஏரியும், லாடபுரம் கீழேரியும் நிரம்பின. பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பின. அதனைத்தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு கடந்த 13-ந்தேதி கன மழை பெய்தது. பெரம்பலூரில் 2 மணிநேரம் மழை கொட்டியது. அதனைத்தொடர்ந்து இரவு வரையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது.

    தொடர்மழையின் காரணமாக லாடபுரம் ஏரிகள், குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி, பெரம்பலூர் பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை மீண்டும் நிரம்பின.

    பெரம்பலூரில் உள்ள திரவுபதி குளம் என்றழைக்கப்படும் தெப்பக்குளம் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பியது. மழை நீரும், காட்டாற்று ஓடைகளின் ஊற்றுநீரும் ஏரி, மதகுகளின் வழியே வழிந்தோடுவது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. பெரம்பலூர் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பிரதான மதகில் நீர் வழிந்தோடியது. இதையடுத்து, பெரிய ஏரி ஆயக்கட்டு பகுதி விவசாயிகள், மதனகோபாலசுவாமி கோவில் பணியாளர்கள் பெரிய ஏரியில் நீர்நிலைக்கு தேங்காய் உடைத்தும் நிவேதனம் செய்தும் வழிபட்டனர். பின்னர் பூக்களை தூவி புதுவெள்ளநீரை வரவேற்றனர்.

    பெரிய ஏரியில் கடை வழிந்தோடிய மழைநீரில் மீன்கள் அதிகம் தென்பட்டதால், மீன்பிடிப்பவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்து சென்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து பெரிய ஏரியில் நீர்வழிந்தோடியதை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் உபரிநீர் வாய்க்காலிலும், துறைமங்கலம் பெரிய ஏரி வழிந்தோடும் மதகு பகுதியிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் டவுனில் பெய்த பலத்த மழை காரணமாகவும், பெரம்பலூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடி வருவதாலும், பெரம்பலூரில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை நிரம்பின.

    பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் ஏரிகள் மொத்தம் 73 உள்ளன. இவற்றில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. பென்னகோணம், வெங்கலம், பேரையூர் ஆகிய ஏரிகள் 80 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன. செங்குணம், அன்னமங்கலம், நாரணமங்கலம், காரை பெரியஏரி, சின்னாறு போன்ற ஏரிகள் 50 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளன.

    • பெரம்பலூரில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திரா நகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழச்செல்வன் தெரிவித்துள்ளார்."

    • வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
    • ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள துறைமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பின்னர் பொதுமக்கள் அந்த ஓடையில் அடைப்பை சரி செய்ததையடுத்து மழைநீர் வடிந்தது. மேலும் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையின் கிழக்குப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், ரோஸ்நகர், ரெங்காநகர் ஆகிய பகுதியில் இருந்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோவர் சாலையில் வெள்ளந்தாங்கியம்மன் ஏரிக்கு செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக சென்ற மழைநீர் சாலையில் புகுந்தது. இதனால் அந்த வழியாக கார்கள், மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மெதுவாக அப்பகுதியை கடந்து சென்றனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • 19-ந் தேதி நடக்கிறது

    பெரம்பலூர்

    மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வருகிற 19-ந் தேதி மாலை 3 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மின்னல் தாக்கி மாடு உயிரிழந்தது
    • வேப்பமரத்தில் கட்டியிருந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமத்தில் வசித்து வருபவர் மோகன்பாபு(வயது 44). விவசாயி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர் நேற்று கொட்டகையில் இருந்த பசுமாட்டை வெளியில் உள்ள வேப்பமரத்தில் கட்டிவிட்டு, வயல் வேலைக்கு சென்றார். அப்போது மதிய நேரத்தில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு செத்தது. இது குறித்து வருவாய் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா, கால்நடை மருத்துவருடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ×