என் மலர்
பெரம்பலூர்
- போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பதாகைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பெரம்பலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அப்பகுதியில் உள்ள விளம்பர பதாகையால், பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை
பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை அதிகாரிகளும், போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் கண்டும், காணாதது போல் சென்று விடுகின்றனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அப்பகுதியில் உள்ள விளம்பர பதாகையால், பாலக்கரை ரவுண்டானா பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் தெரிவதில்லை.
இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில் கலந்து கொண்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களின் குறை தீர்க்கும் கூட்டம், பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட மின்நுகர்வோர்கள் தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டனர். கூட்டத்தில் மொத்தம் 7 மனுக்கள் பெறப்பட்டன. இதில் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள், மின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கல்பாடி அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு நுகர்வோர் கவசம் புத்தகம் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்து கொண்டு பேசுகையில். தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாணவ, மாணவிகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும், நுகர்வோர் ஒவ்வொருவரும் பொருட்களை வாங்கும்போது தரமான பொருட்கள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் நுகர்வோர் கோர்ட்டை அணுகுவதற்கு தயங்க கூடாது என தெரிவித்தார்.
பின்னர் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு நுகர்வோர் கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் சேசுசெல்வகுமார் பேசினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கோபி செய்திருந்தார். முன்னதாக ஆசிரியை குணசெல்வி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
- பழைய பொருட்களை எரிக்காதீர்கள்
- புகையில்லா போகியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழக அரசின் உத்தர வின்படி இந்த ஆண்டு புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் நகராட்சியில் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒன்று முதல் எட்டு வரை ஒரு மண்டலம் 9 முதல் 16வரை ஒரு மண்டலம், 17 முதல் 21 வரை மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு துப்புரவு பணி மேற்பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு வீடுகளில் சேமிக்கப்படும் தேவையில்லாத பழைய துணிகள், டயர், பயன்படுத்த இயலாத புத்தகம் மற்றும் இதர பயன்படுத்த முடியாத பழைய பொருட்களை எரிககாமல் வீடு தோறும் நகராட்சி மூலம் 7 - ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நகராட்சி வாகனங்களில் சேகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு புகையில்லா போகி உருவாக்குவதற்கு மேற்படி பழைய பொருட்களை நகராட்சி வாகனங்களில் வழங்கி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பொதுமக்கள் மேற்படி பழைய பொருட்களை சாலைகளில் வீசி எறிந்தாலும், டயர்களை சாலைகளில் தீ வைத்து கொளுத்தினாலோ, பொது இடங்களில் குப்பைகளை கொட்டினாலோ அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவு
- வெட்டி விற்க முயன்ற கோவில் மரங்கள் பறிமுதல் ெசய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், 0.90 செண்டு நிலம் வேலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் வளர்ந்திருந்த வதனாரை மரங்களை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அசோக் (வயது40) என்பவர் வெட்டி தனி நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.இது பற்றி வந்த தகவலின்பேரில் தனி தாசில்தார் பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மரங்களை கைப்பற்றினார். சட்ட விரோதமாக கோயில் நிலங்களிலிருந்த மரங்களை வெட்டி விற்பனையில் ஈடுபட முயன்ற அசோக் மீது மேல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
- பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.
- புதுநடுவலூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் புதுநடுவலூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளனூரில் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முகாமிற்கு மண்டல இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் குணசேகரன் மற்றும் டாக்டர்கள் ஷர்மிளா, மூக்கன், சுப்பிரமணியன், கலியபெருமாள், முத்துசெல்வன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
முகாமில் ஊராட்சி தலைவர் ஜெயந்தி, துணை தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மூன்று சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊக்க பரிசும், சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை கையாளும் விவசாயிகள் மூன்று பேருக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினர்.மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை பைகள் வழங்கப்பட்டது. இதில் கால்நடைகள், கோழிகள் மற்றும் செல்லப்பிராணிகளை பரிசோதனை செய்து தடுப்பூசிபோடுதல், குடற்புழு நீக்கம், செயற்கை கருவூட்டல், ஆண்மை நீக்கம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. மேலும் மாடு மற்றும் கன்றுகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசிகள் போடப்பட்டது.
- மாவட்ட இணை செயலாளர் நன்றி கூறினார்.
- பட்டதாரி ஆசிரியர் கழக பரிசளிப்பு விழா நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பட்டதாரி - முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 - ம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பூலாம்பாடி பிளஸ் மேக்ஸ் குரூப் ஆப் கம்பெனி நிர்வாக இயக்குனர் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்துகொண்டு, பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுதந்த தலைமையாசிரியர்கள், 2022-2023 கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசினார்.
தொடர்ந்து மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ், கவுரவ தலைவர் பாபுவாணன், முன்னாள் மாநில துணை தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேசினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மகளிரணி செயலாளர் ஜெயந்தி வரவேற்றர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
- இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
- தலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 2022-23-ம் நிதியாண்டில் புதிதாக விண்ணப்பிக்க 2-வது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுக்குள் இ-சேவை மையத்தில் இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.புதிதாக விண்ணப்பிக்க இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்ய, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, தந்தையின் கல்வி மாற்று சான்று, தாயாரின் கல்வி மாற்று சான்று, 40 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றின் நகல்கள் மற்றும் குடும்பப் புகைப்படம், குழந்தைகளின் பிறப்பு சான்றுகள் அசல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யவும்.இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வைப்பு தொகை ரசீது பெற்று 18 வயது முதிர்வடைந்த அனைத்து பயனாளிகளும் முதிர்வு தொகை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே 2001-04 வரை பதிவு செய்து வைப்புத்தொகை பெற்றுள்ள அனைத்து பயனாளிகளும் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
- ஒருவர் பலி: 2 பேர் கவலைக்கிடம்
- 3 பேர் சென்ற பைக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காரைக்கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர்கள் அழகர் (வயது 34), சின்னதுரை (34), பிரபு (25). இவர்கள் மூன்று பேரும் ேஜ.சி.பி. ஆப்ரேட்டர்கள்.இவர்கள் வேலை தொடர்பாக பெரம்பலூருக்கு செல்ல வேண்டியிருந்ததால், ஒரு இருசக்கர வாகனத்தில் 3 பேரும் ெபரம்பலூருக்கு சென்றனர். அங்கு தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டு காரைக்கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.வாகனத்தை அழகர் ஓட்டியுள்ளார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து இருந்தனர். வாகனம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாரணமங்கலம் அருகே வந்த போது, எதிர் பாராதவிதமாக வாகனம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அழகர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். உயிருக்கு ேபாராடிக் கொண்டிருந்த பிரபு, சின்னதுரையை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வந்த தகவலின் பேரில் பாடாலூர் போலீசார் விரைந்து வந்து இறந்த அழகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை முதல் மாலை வரை நடைபெற்றன
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர்:
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது.அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வழங்குவதற்காக படிவம் 6-பி என்ற புதிய படிவம் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணியானது கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியினை விரைவுபடுத்துவதற்காகவும், வாக்காளர்களின் வசதிக்காகவும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று சிறப்பு முகாம்கள் காலை முதல் மாலை வரை நடைபெற்றன.முகாமில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து 6-பி படிவத்தை பெற்று தங்களது ஆதார் எண்ணினை பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக தாக்கல் செய்து வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொண்டனர்.
- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
- தம்பதியை அரிவாளால் தொழிலாளி வெட்டியுள்ளார்
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே குரும்பலூர் 3-வது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (வயது 49). இவரது மனைவி அமுதவள்ளி (42). இவர் நேற்று காலை வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூப்பனார் கோவில் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த அமுதவள்ளியின் மீது, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் மது போதையில் கல்லை எடுத்து வீசியுள்ளார்.இதனை தட்டி கேட்ட அமுதவள்ளியையும், அவரது கணவர் பிச்சை பிள்ளையும் கண்ணன் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அரிவாளை எடுத்து வந்து பிச்சை பிள்ளையையும், அமுதவள்ளியையும் வெட்டியுள்ளார். இதில் இடது கையில் வெட்டு காயமடைந்த பிச்சைபிள்ளை, அமுதவள்ளி ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் பொதுமக்கள் கண்ணனை பிடித்து பெரம்பலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கண்ணனுக்கும் லேசான காயம் ஏற்பட்டதால் போலீசார் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கண்ணன் கடந்த 15 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகனை விட்டு பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். மேலும் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்த அவர் மது குடிக்கும் பழக்கத்திற்கும் அடிமையானார். மது போதையில் அவர் அடிக்கடி ஊர்க்காரர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
- மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என்று பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.






