என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாடி அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- கல்பாடி அரசு பள்ளியில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு நுகர்வோர் கவசம் புத்தகம் வழங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்து கொண்டு பேசுகையில். தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மாணவ, மாணவிகள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும், நுகர்வோர் ஒவ்வொருவரும் பொருட்களை வாங்கும்போது தரமான பொருட்கள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் நுகர்வோர் கோர்ட்டை அணுகுவதற்கு தயங்க கூடாது என தெரிவித்தார்.
பின்னர் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு நுகர்வோர் கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர் சேசுசெல்வகுமார் பேசினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கோபி செய்திருந்தார். முன்னதாக ஆசிரியை குணசெல்வி வரவேற்றார். முடிவில் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.






