என் மலர்
நீலகிரி
- நேற்று இரவு சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.
- மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.
இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. நேற்று இரவு கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.
அந்த தெரு நாய்களை அங்கிருந்த ஒருவர் துரத்த முற்பட்ட போது அவரை அந்த நாய்கள் ஆக்ரோஷமாக கடிக்க சென்று விட்டன.
அவர் உடனே அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட திமுக., இளைஞர் அணி புதிய அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை மாநில இளைஞர் அணி செயலா ளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி மாவட்ட அமைப்பாளராக இமயம் சசிகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
துணை அமைப்பாளர்களாக பாபு,நௌபுல், நாகராஜ், முரளிதரன், பத்மநாபன், வினோத்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட தி.மு.க இளைஞரணி புதிய நிர்வாகிகள், ஊட்டி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முபாரக்கை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பொன்தோஸ், ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பில்லன், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- நீலகிரி மாவட்டத்திற்கு மழை மிக அவசியம்.
- நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
ஊட்டி:
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.58 லட்சம் செலவில் குன்னூர் தாலுகா பந்துமை முதல் ரேலியா டேம் வரை தார்ச்சாலை, பந்துமையில் ரூ.4 லட்சம் மதிப்பில் வெள்ளத்தடுப்பு சுவர், அருவங்காடு ஒசட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், காரக்கொரையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்ட நீர்தேக்கதொட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கூடலூர், ஊட்டி, குந்தாவிலும், வடகிழக்கு பருவமழை கோத்தகிரி, குன்னூரிலும் அதிகமாக பெய்யும்.
கடந்த வருடம் 239 மி.மீட்டர் மைம், நடப்பாண்டில் 264.2 மி.மீட்டர் மழை இன்று வரை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மழை மிக அவசியம். கூடலூரில் பெய்து வரும் இந்த மழையால் அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டதால் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
இதன் ஒருபகுதியாக பேரிடர் மீட்பு குழுவினர் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து துறை ஊழியர்களும் தயார்நிலையில் இருந்தனர். இதனால் நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை.
மழை தொடங்குவதற்கு முன்பாகவே கூடலூர், ஊட்டியில் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால் இந்த பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவுமில்லை.
இருந்தபோதிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மணல் மூட்டைகளும், தீயணைப்புத்துறை மூலம் பவர்சா கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், கோத்தகிரி தாசில்தார் கோமதி, ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
- தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் கோடை சீசன் நிறைவடைந்து உள்ள நிலையில், தாவரவியல் பூங்காவை 2-வது சீசனுக்கு தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக அங்கு உள்ள பூங்கா புல்வெளியில் யூரியா உரம் தூவும் பணி நடந்து வருகிறது.
அங்கு தற்போது மழைப் பொழிவு இருந்து வருகிறது. எனவே புல்வெளிகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் உருவாக்கும் வகையில் யூரியா உரம் தூவும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அடுத்த ஒரு சில வாரங்களில் பூங்கா புல்வெளி மீண்டும் பச்சை பசேலென மாறிவிடும் என்று தோட்டக்கலைத் துைறயினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்குவது வழக்கம்.
கோடை சீசன் காரணமாக அந்த மைதானம் சேதமடைந்து உள்ளது. எனவே பூங்கா புல்வெளி மையத்தை சீரமைக்கும் பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது.
- கூட்டத்தில் 583 ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.
- ஆதாா் அட்டை புதுப்பித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் தலைமையகத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, சிவிலியன் ஓய்வூதியதாரருக்கான குறைகளை நிவா்த்தி செய்யும் 2 நாள் கூட்டம் தொடங்கியது.
இதில் ராணுவ மேஜர் ஜெனரல் ராஜேந்திர ராய் பேசும்போது, ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் நிலுவைத் தொகையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், ஓய்வூதியத்தை அனுமதிப்பது முதல் வழங்குவது வரை ஸ்பாா்ஷின் பங்கு ஆகியவை குறித்து விளக்கி கூறினாா்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 583 ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா். அப்போது அவர்களுக்கு டிஜிட்டல் லைப் சான்றிதழ், இசிஎச்எஸ் சரிபாா்ப்பு, ஆதாா் அட்டை புதுப்பித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- கூடலூர் படகு இல்லம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு செல்ல நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
- கூடலூர் படகு இல்லம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
கூடலூர் பைக்காரா படகு இல்லத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. எனவே அங்கு வாகன நிறுத்துமிடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், சுற்றுலா வளர்ச்சிக்கழக மண்டல மேலாளர் யுவராஜ், தாசில்தார் மணி மேகலை ஆகியோர் அடங்கிய குழுவினர் பைக்காரா படகு இல்லத்துக்கு வந்திருந்தனர். அப்போது வாகனம் நிறுத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது.
இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், பைக்காரா படகு இல்லத்தில் முதல் கட்டமாக இடம் கேட்டு வனத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள் ஒப்புதல் தந்தவுடன், அதற்கான தொகை ஒதுக்கப்பட்டு, அடுத்த கட்டமாக எத்தனை வாகனங்கள் நிறுத்துவது என்பவை உள்ளிட்ட பணிகள் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.
கூடலூர் படகு இல்லம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு செல்ல நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இந்த சாலை குண்டும், குழியுமாக சிதலம் அடைந்து உள்ளது. இதற்காக சிறப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே கூடலூர் படகு இல்லம் ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கீதா ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஊட்டி,
கோவை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியாக இருந்த கீதா, தற்போது நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவர் ஊட்டி பிங்கர் போஸ்ட் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருக்கு சக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்ட கீதாவை நஞ்சநாடு, கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியின் செயலர் மூர்த்தி, முதல்வர் ரங்கநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
- பல போட்டிகளில் ஷாம் ஆல்வின் சாதனை படைத்துள்ளார்
- ஸ்னூக்கா் பயிற்சியாளா் சூா்யநாராயணனிடம் பிரத்யேக பயிற்சி பெற்று வருகின்றனர்.
ஊட்டி,
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஸ்னூக்கா் சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்த ஷாம் ஆல்வின் (வயது 15) என்பவர் தகுதி பெற்று உள்ளார்.
இவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இது குறித்து ஷாம் ஆல்வின் கூறுகையில், நான் ரோனி ஓ சல்லிவனின் தீவிர ரசிகா்.
10 வயதில் இருந்து ஸ்னூக்கா் விளையாடி மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து உள்ளேன். இந்த நிலையில் சவூதி அரேபியாவில் நடக்க உள்ள சர்வதேச ஸ்னூக்கர் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது மகிழ்ச்சி தருகிறது என்று தெரிவித்தார். ஷாம் ஆல்வின் மூத்த சகோதரி மரியம் ஆக்னஸ் என்பவர் தேசிய அளவிலான ஸ்னூக்கா் போட்டியில் 2-வது இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது
ஷாம் ஆல்வின் தந்தையும், பயிற்சியாளருமான ஜோசப் செல்வகுமாா் கூறுகையில், சா்வதேச அளவிலான ஸ்னூக்கா் போட்டியில் இந்தியா சாா்பில் ஆல்வின் பங்கேற்பது பெருமை தருகிறது. இதற்காக அவர் ஸ்னூக்கா் பயிற்சியாளா் சூா்யநாராயணனிடம் பிரத்யேக பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்தார்.
- இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படுவோரை தங்கவைக்க ஏதுவாக, மாவட்டம் முழுவதும் 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
- நீலகிரியில் இதுவரை 4 இடங்களில் மண்சரிவும், 3 இடங்களில் இதர சேதங்களும் ஏற்பட்டு உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்கு உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஊட்டி நடுவட்டம் இந்திரா நகரில் ஆய்வு மேற்கொண்டார். கூடலூர் தூக்குப்பாலம் பகுதியில் அபாய நிலையில் உள்ள பெரிய மரங்கள் அகற்றப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து கூடலூர் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ், கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். பேரிடர்மீட்புக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்-நெடுஞ்சாலை அதிகாரிகள் மீட்பு பணிகளுக்கு தயார்நிலையில் இருந்தனர். எனவே நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். தற்காலிக நிவாரண முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மழை வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மணல் மூட்டைகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
கால்வாய்களை தூா்வாரி சுத்தமாக வைக்க வேண்டி உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக் குழுவினா், மருந்து இருப்பு ஆகியவை தயாா் நிலையில் உள்ளன. அனைத்து துறை அதிகாரிகளும் மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படுவோரை தங்கவைக்க ஏதுவாக, மாவட்டம் முழுவதும் 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
இதுதவிர பருவமழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி நம்பர் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை 18 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. அங்கு பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. நீலகிரியில் இதுவரை 4 இடங்களில் மண்சரிவும், 3 இடங்களில் இதர சேதங்களும் ஏற்பட்டு உள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகின்றன
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வருவாய் கோட்டாட்சியா்கள் துரைசாமி, பூஷ்ணகுமாா், கூடலூா் நகராட்சி ஆணையா் முகம்மது குதுரதுல்லா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளம், நெல்லியாளம் நகா்மன்றத் தலைவா் சிவகாமி உள்ளிட்ட பலா் உடன் இருந்தனர்.
- தாா் கலவை தொழிற்சாலையை அகற்றக்கோரி போராட்டம் நடந்தது.
- நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஊட்டி,
தேவாலா பஜாரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூடலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமை வகித்தாா்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: கூடலூா் வட்டம், தேவாலா, போக்கா் காலனியில் தாா் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்
நச்சுப் புகையால் அப்பகுதி மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இந்த ஆலையை இப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்."
- ஊட்டிக்கு வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
- கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.
மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் வடிந்தோடுகிறது. தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதையும் காண முடிகிறது.
இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி உள்பட அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் மழை பெய்து கொண்டே இருந்தால் அணைகள் தங்களது முழு கொள்ளளவை எட்டிவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.மஞ்சூர், ஊட்டி, கூட லுார், பந்தலுார், அவலாஞ்சி பகுதிகளில் நள்ளிரவில், 7 இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு மீட்பு குழு, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய ஊழியர்கள் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
கடந்த சில தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வரத்து கணிசமாக குறைந்து காணப்படுகிறது. அப்படி வருபவர்கள் மழையால் வெளியில் சென்று சுற்றி பார்க்க முடியாமல் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஊட்டி படகு இல்லம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில் நிறுத்தப்பட்ட படகுகளில் தண்ணீர் தேங்கியதால், துடுப்பு மற்றும் பெடல் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.
தண்ணீரை வெளியேற்றி படகுகளை சுத்திகரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மோட்டார் படகு மட்டும் இயக்கப் பட்டன.
இதேபோல் தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் குளிர் நிலவியதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- பார்வுட் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது.
- வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையால் சேதம் அடைந்த வீட்டை பார்வை யிட்டனர்.
ஊட்டி,
கூடலூர் தாலுகா ஓவேலி பகுதியில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாரம் பகுதியில் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். இந்த நிலையில் பார்வுட் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்போது அங்குள்ள வீட்டை காட்டு யானை ஒன்று உடைத்து அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது.
இந்த சமயத்தில் வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். இந்நிலையில் மின்சாரமும் தடைபட்டது. சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையால் சேதம் அடைந்த வீட்டை பார்வை யிட்டனர்.
அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஓவேலி வனச்சரகர் யுவராஜ், வனவர் சுதிர்குமார் ஆகியோர் கூறியதாவது, சம்பந்தப்பட்ட தொழிலாளி வீட்டில் பலாப்பழங்கள் வைத்துள்ளனர். அதன் வாசனையை முகர்ந்தபடி காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தனியார் எஸ்டேட் நிர்வாகமும் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






