என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே நள்ளிரவில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்
    X

    கூடலூர் அருகே நள்ளிரவில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்

    • பார்வுட் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையால் சேதம் அடைந்த வீட்டை பார்வை யிட்டனர்.

    ஊட்டி,

    கூடலூர் தாலுகா ஓவேலி பகுதியில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு யானைகள் வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பாரம் பகுதியில் வீடுகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.

    பின்னர் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். இந்த நிலையில் பார்வுட் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் வந்தது.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அப்போது அங்குள்ள வீட்டை காட்டு யானை ஒன்று உடைத்து அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது.

    இந்த சமயத்தில் வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். இந்நிலையில் மின்சாரமும் தடைபட்டது. சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையால் சேதம் அடைந்த வீட்டை பார்வை யிட்டனர்.

    அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து ஓவேலி வனச்சரகர் யுவராஜ், வனவர் சுதிர்குமார் ஆகியோர் கூறியதாவது, சம்பந்தப்பட்ட தொழிலாளி வீட்டில் பலாப்பழங்கள் வைத்துள்ளனர். அதன் வாசனையை முகர்ந்தபடி காட்டு யானைகள் அப்பகுதிக்கு வந்துள்ளது. இதனால் தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் தனியார் எஸ்டேட் நிர்வாகமும் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×