என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட தூக்குப்பாலம் பகுதியில் முன்எச்சரிக்கையாக அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. அந்த பணியை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி
நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் 18 வீடுகள் சேதம்
- இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படுவோரை தங்கவைக்க ஏதுவாக, மாவட்டம் முழுவதும் 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
- நீலகிரியில் இதுவரை 4 இடங்களில் மண்சரிவும், 3 இடங்களில் இதர சேதங்களும் ஏற்பட்டு உள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்கு உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சுற்றுலா அமைச்சர் கா.ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஊட்டி நடுவட்டம் இந்திரா நகரில் ஆய்வு மேற்கொண்டார். கூடலூர் தூக்குப்பாலம் பகுதியில் அபாய நிலையில் உள்ள பெரிய மரங்கள் அகற்றப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து கூடலூர் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ், கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோம். பேரிடர்மீட்புக்குழுவினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்-நெடுஞ்சாலை அதிகாரிகள் மீட்பு பணிகளுக்கு தயார்நிலையில் இருந்தனர். எனவே நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். தற்காலிக நிவாரண முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. மழை வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மணல் மூட்டைகள் தயாா்நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
கால்வாய்களை தூா்வாரி சுத்தமாக வைக்க வேண்டி உள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக் குழுவினா், மருந்து இருப்பு ஆகியவை தயாா் நிலையில் உள்ளன. அனைத்து துறை அதிகாரிகளும் மாவட்ட நிா்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படுவோரை தங்கவைக்க ஏதுவாக, மாவட்டம் முழுவதும் 456 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
இதுதவிர பருவமழை மற்றும் இயற்கை இடா்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி நம்பர் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழைக்கு இதுவரை 18 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. அங்கு பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. நீலகிரியில் இதுவரை 4 இடங்களில் மண்சரிவும், 3 இடங்களில் இதர சேதங்களும் ஏற்பட்டு உள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகின்றன
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வருவாய் கோட்டாட்சியா்கள் துரைசாமி, பூஷ்ணகுமாா், கூடலூா் நகராட்சி ஆணையா் முகம்மது குதுரதுல்லா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளம், நெல்லியாளம் நகா்மன்றத் தலைவா் சிவகாமி உள்ளிட்ட பலா் உடன் இருந்தனர்.






