என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனி பொழிவு காணப்படும். அக்டோபர் மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து, உறை பனி விழும்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படும். இது போன்ற சமயங்களில் வெப்பநிலையும் ஜீரோ டிகிரி செல்சியசிற்கு செல்லும்.
ஆனால் டிசம்பர் மாதம் தொடங்கியும் கடந்த வாரம் வரை உறைபனி விழவே இல்லை. மாறாக பகலில் கடும் வெயிலும், இரவில் குளிரும் நிலவி வந்தது.
இந்தநிலையில், கடந்த 3 நாள்களாக உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகள் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.
நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறைபனி கொட்டியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்.பி.எப்., போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் வெள்ளை போர்வை போர்த்தியது போன்று உறைபனி அதிகளவில் படர்ந்து காணப்பட்டது.
இதேபோல் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் மீதும் பனித்துகள்கள் பசைபோல பரவியிருந்தன. மாவட்டத்தில் நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இன்று காலை நிலவரப்படி ஊட்டியில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
உறைபனி விழ தொடங்கியுள்ளதால், தற்போது அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது.
பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதியடைந்தனர். குளிரை சமாளிக்க, ஆட்டோ ஓட்டுபவர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் அனைவரும் தீயை மூட்டி குளிர்காய்ந்தனர்.
அதேபோல, வாகனங்களின் கண்ணாடிகள் மீது படர்ந்திருந்த பனித்துகள்களை உடைத்தும், அவற்றின் மீது வெந்நீரை ஊற்றியும் அகற்றிய பின்னரே வாகனங்களை இயக்க முடிந்தது.
ஊட்டியில் தற்போது பனிக்காலத்துக்காக குளிருக்கு உறையாத டீசல் விற்பனை செய்யப்படுவதால் உள்ளூர் வாகன டிரைவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆனால், இந்த விவரம் தெரியாமல் ஊட்டிக்கு வந்திருந்த வெளியூர் வாகனங்கள் உடனடியாக வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.
பூங்காக்கள் மற்றும் மலர்த் தோட்டங்களில் பனியின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மலர்ச் செடிகளின் மீது கூடாரங்கள் போல செடி, கொடிகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் அவற்றின் மீது தண்ணீர் பாய்ச்சப்படுவதால் பனியின் தாக்குதலிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் இயங்கி வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முழுவதும் பல் சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.
மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி செல்லும் இந்த ரெயிலில் காடுகளின் இதமான சூழல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கல்லாறு- அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரெயில் பாதையில் விழுந்தது.
இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தன. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மலை ரெயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கிடையே தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது மலை ரெயில் தண்டவாளத்தில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவு பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று குன்னூரில் இருந்து ஒரு பெட்டியுடன் வெள்ளோட்டம் விடப்பட்டது
இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிந்ததால் நாளை முதல் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே தெரிவித்துள்ளது.
நிலச்சரிவால் பழுதடைந்த ரெயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஒரு காட்டு யானை நடமாடி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கிருந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருந்தபோதிலும் அது வனப்பகுதிக்குள் செல்லவில்லை. தொடர்ந்து அங்கு முகாமிட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த யானை நஞ்சப்பசத்திரம் மேல் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்கள், கே.என்.ஆர். பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உலா வந்தது. இதனால் தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் அந்த காட்டு யானையை வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக நடப்பு ஆண்டில் உறைபனி கொட்டுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நீர்ப்பனி பெய்து வந்ததால் கடும் குளிர் நிலவியது. மாவட்டத்தில் ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரையிலும் நிலவியது.
இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சாலையோர புல்வெளிகள் என பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் உறைபனி கொட்டி வருகிறது. இந்த உறைபனியின் தாக்கம் வரும் நாட்களில் தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டியில் நிலவக்கூடிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் உறைபனியை கண்டு ரசித்து வருகின்றனர். உறைபனியால் விவசாய நிலங்களில் உள்ள வெண் புழுக்கள் அழியும் என கருதப்படும் நிலையில், ஊட்டியில் தொடங்கியுள்ள உறைபனிக்காலம் அனைத்து தரப்பினரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்டத்தில் ஊட்டியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இன்று காலை நிலவரப்படி ஊட்டியில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 5 டிகிரி செல்சி யஸாகவும், அதிகபட்சமாக 14 செல்சியசும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளிலும் உறைபனி கொட்டி வருகிறது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகிறார்கள்.
கோத்தகிரியில் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் மழை மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் இந்த மாதங்களில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விவசாயம் செய்வது இல்லை.
இந்த நிலையில் வரத்து குறைவு காரணமாக் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்ய விளைநிலங்களை தயார் செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் மண்ணை உழுது பதப்படுத்தி இயற்கை உரங்களை மண்ணுடன் கலந்து இயற்கை விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ரசாயன உரங்களால் பாதிப்பு அதிகம் என்பதால் விவசாயிகள் இயற்கை உரத்துக்கு மாறி உள்ளனர். எனவே கோத்தகிரி பகுதியில் இயற்கை உரமான சாண உரத்தின் விற்பனை அதிகரித்து உள்ளது. இது குறித்து கோத்தகிரியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
ரசாயன உரங்களை பயன்படுத்தினால் மண் வளம் கெட்டுவிடும். அத்துடன் அதன் விலை பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் சாண உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் காரணமாக விளைச்சலும் அதிகமாக கிடைக்கிறது. ஒரு லாரி சாண உரம் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சாண உரம் விற்பனை அதிகரித்து உள்ளதால் மாடுகளை வைத்து இருக்கும் விவசாயிகளுக்கு உபரி வருவாயும் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
தமிழகத்தில் கால்வாய்கள், நீரோடைகள், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
அதுபோன்று மலைமாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் குறித்து வருவாய்த்துறையினர் தீவிரமாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று குன்னூரில் வருவாய்த்துறையினர் ராஜாஜி நகர், அம்பேத்கர் நகர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆக்கிரமித்து வீடுகள், கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து கணக்கெடுத்தனர்.
வரைபடம் கொண்டு நவீன கருவி உதவியுடன் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் எவ்வளவு, ஆக்கிரமிக்கப்பட்ட இடம் குறித்து அளவீடு செய்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு இதுகுறித்த விவரம் மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்கப்பட உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர், சுறாகுப்பம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. அவர்களுக்கு மாற்றிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குன்னூர் அருகே வெலிங்டன் கன்டோன்மெண்ட் வாரியத்தின் கீழ் 7 வார்டுகள் உள்ளன. இங்கு வசித்து வரும் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகள், கட்டிடங்களில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கூட கன்ட்டோன்மெண்ட் நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
சமீபகாலமாக உரிய அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதனை ஆய்வு செய்த கன்டோன்மெண்ட் நிர்வாகம் விதிமீறிய கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கியது.
இதையடுத்து முதல் கட்டமாக 14 கட்டிடங்களும், 2-ம் கட்டமாக 19 கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டன. இந்தநிலையில் நேற்று 3-ம் கட்டமாக விதியை மீறி கட்டப்பட்ட 16 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக வெலிங்டன் கன்டோன்மெண்ட் நிர்வாகம் 4 குழுக்களை அமைத்தது. அத்துடன் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதன் மூலம் பலத்த பாதுகாப்புடன் 16 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அனுமதி இல்லாமல் விதியை மீறி கட்டிடங்கள் கட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரளா ஆலப்புழா, கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. நீலகிரியில் பரவலை தடுக்க கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் கொண்டு வருவதை கண்காணிக்க 8 சோதனை சாவடிகளில் ஒரு கால்நடை உதவி டாக்டர் தலைமையில் குழுவினர் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பறவைக்காய்ச்சல் கோழி, வாத்து, வான்கோழி, வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க பண்ணையாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வாத்து, வான்கோழி முதலிய பல்வேறு இன பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வாகனங்கள், மற்றும் விலங்குகளை பண்ணைக்குள் நுழையக்கூடாது. உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. உபகரணங்கள் மாதம் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
நன்கு சமைத்த கோழிக்கறி மற்றும் முட்டைகளை உண்பதால் பரவாது. சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும். எனவே கேரளா மற்றும் கேரள எல்லையை ஒட்டி உள்ள கர்நாடக மாநில பிற பகுதிகளிகளில் இருந்து கோழிகள், பறவைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை நீலகிரி மாவட்டத்துக்குள் கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே கூடலூர் பகுதியில் உள்ள கர்நாடகா- கேரளா மாநில எல்லைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள்.
கூடலூர்- கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச் சாவடியில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் பகவத்சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாக பெய்து உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து தீவிரமாக மழை பெய்தது. இதனால் ஊட்டியில் உள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
குறிப்பாக ஊட்டி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பார்சன்ஸ்வேலி அணை, மார்லி மந்து, டைகர்ஹில், கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர் உள்பட 10 அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து உள்ளது. அதுபோன்று 39 அடி கொள்ளளவு கொண்ட டைகர்ஹில் அணை நிரம்பியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கோடப் பமந்து அப்பர், தொட்டபெட்டா லோயர், கிளன்ராக் உள்பட 4 அணைகளும் நிரம்பின.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் ஊட்டி அணைகளில் நீர்மட்டம் அதிகமாக உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
50 அடி உயரம் கொண்ட ஊட்டி பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 45 அடியாகவும், 23 அடி கொள்ளளவு கொண்ட மார்லிமந்து அணையின் நீர்மட்டம் 18.5 அடியாகவும், 31 அடி உயரம் கொண்ட தொட்டபெட்டா அப்பர் அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் அதிகரித்து இருக்கிறது.
இதுதவிர 5 அணைகளும் நிரம்பி உள்ளன. எனவே ஊட்டியில் அடுத்த ஆண்டு கோடை சீசன் நடந்தாலும் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட கூடுதலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. டைகர்ஹில் அணை, கோடப்பமந்து, அப்பர், தொட்டபெட்டா, லோயர், கிளன்ராக் உள்பட 5 அணைகளும் நிரம்பியுள்ளன.
தற்போது மாவட்டம் முழுவதும் மழை குறைந்து சற்று வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உறைபனி கொட்ட தொடங்கியுள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான காந்தல் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலையோர புல்வெளிகளிலும் உறைபனி காணப்படுகிறது.
இன்று அதிகாலை நேரத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடிகள், மரங்களில் உள்ள இலைகள் மற்றும் தாவரவியல் பூங்கா புல்வெளி தரைகள், மலர்செடிகள் என அனைத்திலும் உறைபனி காணப்பட்டது.
உறைபனியால் காலையில் கடும் மேகமூட்டம் நிலவியதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள சோலூர் மட்டம், கொடநாடு, கீழ் கோத்தகிரி பகுதிகளிலும் உறைபனி நிலவியது. உறைபனி காரணமாக காலை நேரங்களில் சாலையோரம் இருந்த புல்வெளிகள் அனைத்தும் பனிகட்டியாக காட்சியளித்தன. வெயில் வந்த பின்னரே உறைபனி உருக தொடங்கியது.
உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காலை நேரங்களில் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். வெயில் வந்த பின்னரே வீடுகளை விட்டு வெளியில் வந்தனர். கடுமையான பனியால் அதிகாலையில் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதிகளில் அதிகளவில் மலைக் காய்கறிகளான கேரட், முள்ளங்கி மற்றும் தேயிலை செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் உறைபனி காரணமாக தேயிலை மகசூல் பாதிப்படைந்துள்ளது.
இதுதவிர மலைக்காய்கறிகளான கேரட், முள்ளங்கி போன்ற பயிர்களில் பூச்சிகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயிர்கள் சேதமாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் அருகே கேரளா வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ளது குருக்கன்மூலா கிராமம்.
இந்த கிராமத்தை யொட்டிய பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புலி ஒன்று சுற்றி திரிகிறது. இந்த புலி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்க கூடிய கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 15க்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடி உள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலீசார் வருவாய்த்துறையினருடன் இணைந்து புலியை பிடிக்க அந்த பகுதியில் கூண்டு வைத்து, அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் புலி சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதுதவிர கண்காணிப்பு கேமராவும் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புலியை கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர் 2 கும்கிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். கும்கிகள் உதவியுடன் அந்த பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வனத்துறையினர் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் புலியின் உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த காட்சி பதிவான இடத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வனவிலங்கு வேட்டைக்கு வைக்கப்பட்ட சுருக்கில் புலி சிக்கியிருக்கலாம். இதனால் புலிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டு, அதன் காரணமாக வீட்டில் வளர்க்க கூடிய கால்நடைகளை உணவுக்காக வேட்டையாடி வருகிறது. விரைவில் அந்த புலியை பிடித்து அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றனர்.






