என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி மலை ரெயில் (கோப்புப்படம்)
    X
    ஊட்டி மலை ரெயில் (கோப்புப்படம்)

    மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கம்

    சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததால் நாளை முதல் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே தெரிவித்துள்ளது.
    ஊட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் இயங்கி வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை முழுவதும் பல் சக்கரங்களால் இயக்கப்படும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்வது அலாதி சுகமானது.

    மலை முகடுகளிடையே பல்வேறு குகைகளை தாண்டி செல்லும் இந்த ரெயிலில் காடுகளின் இதமான சூழல் மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக கல்லாறு- அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு மலை ரெயில் பாதையில் விழுந்தது.

    இதனால் தண்டவாளங்கள் சேதமடைந்தன. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மலை ரெயில் சேவை கடந்த ஒரு மாதமாகவே நிறுத்தப்பட்டிருந்தது.

    இதற்கிடையே தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது மலை ரெயில் தண்டவாளத்தில் சேதமடைந்த தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் அனைத்தும் முடிவு பெற்றுள்ளது. இதையடுத்து நேற்று குன்னூரில் இருந்து ஒரு பெட்டியுடன் வெள்ளோட்டம் விடப்பட்டது

    இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிந்ததால் நாளை முதல் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே தெரிவித்துள்ளது.

    நிலச்சரிவால் பழுதடைந்த ரெயில்வே பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    Next Story
    ×