என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் உறைபனி படர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் உறைபனி படர்ந்திருப்பதை படத்தில் காணலாம்.

    ஊட்டியில் இன்று 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை- புல்வெளிகள், வாகனங்கள் மீது கொட்டி கிடக்கும் உறைபனி

    உறைபனி விழ தொடங்கியுள்ளதால், தற்போது அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை பனி பொழிவு காணப்படும். அக்டோபர் மாதம் நீர் பனி விழும். அதனை தொடர்ந்து, உறை பனி விழும்.

    டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாகவே காணப்படும். இது போன்ற சமயங்களில் வெப்பநிலையும் ஜீரோ டிகிரி செல்சியசிற்கு செல்லும்.

    ஆனால் டிசம்பர் மாதம் தொடங்கியும் கடந்த வாரம் வரை உறைபனி விழவே இல்லை. மாறாக பகலில் கடும் வெயிலும், இரவில் குளிரும் நிலவி வந்தது.

    இந்தநிலையில், கடந்த 3 நாள்களாக உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகள், வனங்கள் மற்றும் புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகள் உறைபனி படர்ந்து காணப்படுகிறது.

    நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறைபனி கொட்டியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், பைக்காரா, காமராஜ் சாகர் அணை சுற்றியுள்ள பகுதிகள், எச்.பி.எப்., போன்ற பகுதிகளில் உள்ள புல் மைதானங்களில் வெள்ளை போர்வை போர்த்தியது போன்று உறைபனி அதிகளவில் படர்ந்து காணப்பட்டது.

    இதேபோல் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் மீதும் பனித்துகள்கள் பசைபோல பரவியிருந்தன. மாவட்டத்தில் நேற்று ஊட்டியில் குறைந்தபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இன்று காலை நிலவரப்படி ஊட்டியில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    உறைபனி விழ தொடங்கியுள்ளதால், தற்போது அதிகாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது.

    பனிப்பொழிவால் அதிகாலை நேரங்களில் தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் குளிரால் கடும் அவதியடைந்தனர். குளிரை சமாளிக்க, ஆட்டோ ஓட்டுபவர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் அனைவரும் தீயை மூட்டி குளிர்காய்ந்தனர்.

    அதேபோல, வாகனங்களின் கண்ணாடிகள் மீது படர்ந்திருந்த பனித்துகள்களை உடைத்தும், அவற்றின் மீது வெந்நீரை ஊற்றியும் அகற்றிய பின்னரே வாகனங்களை இயக்க முடிந்தது.

    ஊட்டியில் தற்போது பனிக்காலத்துக்காக குளிருக்கு உறையாத டீசல் விற்பனை செய்யப்படுவதால் உள்ளூர் வாகன டிரைவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

    ஆனால், இந்த விவரம் தெரியாமல் ஊட்டிக்கு வந்திருந்த வெளியூர் வாகனங்கள் உடனடியாக வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.

    பூங்காக்கள் மற்றும் மலர்த் தோட்டங்களில் பனியின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மலர்ச் செடிகளின் மீது கூடாரங்கள் போல செடி, கொடிகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் அவற்றின் மீது தண்ணீர் பாய்ச்சப்படுவதால் பனியின் தாக்குதலிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அதேபோல, தேயிலைப் பயிர்களும் இந்த பனிக் காலத்தில் கருகிவிடும் என்பதால் அவற்றின் மீது கோத்தகிரி மெலார் எனப்படும் தாவர வகையைக் கொண்டு மூடும் பணிகளும் தொடங்கியுள்ளன. ஊட்டியில் காலதாமதமாகத் தொடங்கியுள்ள பனிக்காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.


    Next Story
    ×