என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் புல்வெளிகளில் படர்ந்துள்ள உறைபனி
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் புல்வெளிகளில் படர்ந்துள்ள உறைபனி

    வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ்: ஊட்டி-கூடலூரில் கொட்டும் உறைபனி

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சாலையோர புல்வெளிகள் என பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் உறைபனி கொட்டி வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.

    இதன் காரணமாக நடப்பு ஆண்டில் உறைபனி கொட்டுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நீர்ப்பனி பெய்து வந்ததால் கடும் குளிர் நிலவியது. மாவட்டத்தில் ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரையிலும் நிலவியது.

    இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சாலையோர புல்வெளிகள் என பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் உறைபனி கொட்டி வருகிறது. இந்த உறைபனியின் தாக்கம் வரும் நாட்களில் தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊட்டியில் நிலவக்கூடிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் உறைபனியை கண்டு ரசித்து வருகின்றனர். உறைபனியால் விவசாய நிலங்களில் உள்ள வெண் புழுக்கள் அழியும் என கருதப்படும் நிலையில், ஊட்டியில் தொடங்கியுள்ள உறைபனிக்காலம் அனைத்து தரப்பினரிடத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மாவட்டத்தில் ஊட்டியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 7 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது. இன்று காலை நிலவரப்படி ஊட்டியில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 5 டிகிரி செல்சி யஸாகவும், அதிகபட்சமாக 14 செல்சியசும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளிலும் உறைபனி கொட்டி வருகிறது.

    Next Story
    ×