என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் 2 நாட்கள் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பின்பு மழை குறைந்து, வெயிலும், குளிரும் மாறி அடித்து வருகிறது.
தற்போது கடந்த சில தினங்களாக குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டுப்பட்டரை, வண்டிச்சோலை, குன்னூர் பஜார் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
இரவு, பகல் என எந்நேரமும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. மாலை 3 மணிக்கெல்லாம் குளிர் அடிக்க தொடங்கி விடுகிறது. குளிருடன் நீர் பனியும் சேர்ந்து கொட்டி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர தயங்கும் நிலை காணப்படுகிறது. குளிருக்கு பயந்து வீடுகளுக்குள்ளேயே முடங்கி விடுகின்றனர்.
காலை நேரத்தில் கொட்டும் நீர்பனி மற்றும் குளிரால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலையில் தொப்பி, பனியன் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து கொண்டு தங்கள் பணியில் ஈடுபடுகின்றனர். சிலர் தோட்டங்களில் வேலை பார்க்கும் இடத்தின் அருகே விறகுகளை எரித்து தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டே பணியில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது.
ஆட்டோ டிரைவர்கள், வேன் டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க சுவர்ட்டர், குல்லா போன்றவற்றை அணிந்திருக்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட அதிகமாக குளிர் மற்றும் நீர்பனி நிலவுவதால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதிகளவிலான பெரியவர்கள் தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதையும் பார்க்க முடிகிறது.
இதுவரை குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் உறைபனி கொட்ட தொடங்கவில்லை. உறைபனியும் கொட்ட தொடங்கினால் இன்னும் குளிர் அதிகமாக இருக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய நிலவரப்படி குன்னூரில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இங்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிருந்த வெளிநாட்டினை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உள்பட 600 பேர் சமீபத்தில் பயிற்சிக்காக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு பயிற்சிக்கு சென்றனர்.
பயிற்சி முடிந்து சில நாட்களுக்கு முன்பு குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு திரும்பி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து அங்குள்ள மற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 63 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, சமீபத்தில் இங்குள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக நாட்டின் பல்வேறு பகுதிக்கு சென்று வந்தனர். அவர்களில் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழகத்தின் பிற பகுதிகள், கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுற்றுலா தலங்களை காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கி விட்டது.
இதனால் பூங்காக்கள், படகு இல்லங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அவ்வாறு வர கூடிய ஒரு சில சுற்றுலா பயணிகளும் நகரில் பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் சுற்றுலா தலங்களுக்கு அருகில் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் ஊட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்கள், ஓட்டல்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வர கூடிய நிலையில் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாக கூடிய சூழல் உருவாகி உள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும், 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் கடந்த, 2020-ல் 6 லட்சம், 2021-ல் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டும் வருகை தந்துள்ளனர்.
இதன் மூலம், 6 கோடி ரூபாய் மட்டும் நுழைவு கட்டணம் வசூல் ஆகியுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணை மூலம் அதிக வருவாய், ஊட்டி தாவரவியல் பூங்கா மூலம்தான் வசூலாகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்ததால், 16 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ளது கரிமறா அட்டி கிராமம்.
இந்த கிராமத்தை சுற்றிலும் வள்ளுவர் நகர், வாசுகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதில் சில தேயிலை தோட்டங்கள் பராமரிப்பின்றி காடுகள் போல் காட்சியளிக்கிறது.
இதனால் வனத்தை விட்டு வெளியில் வரும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் பதுங்கி கொண்டு இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சிறுத்தை இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்க கூடிய நாய் மற்றும் வீட்டு விலங்குகளை அடித்து கொன்று விடுகிறது.
கரடிகள் வீடுகள் மற்றும் கோவில்களில் வைத்திருக்க கூடிய எண்ணெய்களையும், மரத்தில் உள்ள தேனையும் குடிப்பதற்காக அங்கேயே முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
கரடிகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 2 சிறுத்தைகள் மற்றும் 3 கரடிகள் ஒரே நேரத்தில் கரிமாறா அட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. கரடிகளும், சிறுத்தையும் வெகுநேரமாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தன.

வெகுநேரத்திற்கு பிறகே சிறுத்தைகளும், கரடிகளும் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றன. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் முத்து என்பவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பதால் இங்கு வாழ அச்சமாக இருப்பதாகவும், உடனே சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






