என் மலர்tooltip icon

    நீலகிரி

    புலியின் நடமாட்டத்தை அறிய, 10 இடங்களில் காமிராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்
    ஊட்டி:
    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மாவனல்லா குடியிருப்பு பகுதிக்கு   வந்த புலி, அப்பாஸ் என்பவரின் பசு மாட்டை தாக்கி கொன்றது. 

    மக்கள் கூறுகையில் கூடலூர் மற்றும் மசினகுடியில் மூன்று மாதங்களுக்கு முன், 16-க்கும் மேற்பட்டமாடுகள், நான்கு பேரை கொன்ற, ‘டி-23’ புலியை, 21 நாட்கள் தேடுதலுக்கு பின், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

     தற்போது, இப்பகுதியில், மீண்டும் ஒரு புலி, பசுமாட்டை கொன்றுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை தாக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றனர்.

    வனத்துறையினர் கூறுகையில்,  புலியின் நடமாட்டத்தை அறிய, 10 இடங்களில் காமிராக்கள் வைத்து கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் இரவில் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்‘ என்றனர்.  
    போதிய நெட்வொர்க் வசதி இல்லாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தே படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    ஊட்டி:
    தமிழகத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது.  

    இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மாநில எல்லைப் பகுதியான மஞ்சள்மூலா குக்கிராமத்தைச் சேர்ந்த மனோகர் நிதின் (வயது 19)  மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்   அம்பலமூல  அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார்.  கடந்த 2020 -21ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வு எழுதினார். 

    அதில் வெற்றி பெற்றபோதும் முன்னுரிமை கிடைக்காத நிலையில் மீண்டும் படித்து நீட் தேர்வு எழுதினார். இதில் 342-வது இடம்பிடித்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ளார். 

    இவரின் தந்தை பிரகாசன் மாடு  வளர்ப்பதுடன், விவசாய தொழிலும் மேற்கொண்டு வருகிறார். தாயார் அனிதா கணவருக்கு துணையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    மாணவர் நிதின் கூறுகையில் ஆர்வத்துடன் படித்தால் சாதிக்க முடியும் . நான் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி சுயமாக படித்து, நம்பிக்கையுடன் நீட் தேர்வு எழுதியதால் வெற்றி பெற முடிந்தது என்றார். 

    மேலும் இதே பள்ளியில் படித்த, அய்யங்கொல்லி பரிவாரம் பகுதியைச் சேர்ந்த மாணவி அனகா (18) . இவர்  வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வில், 543-வது இடம் பிடித்து பல் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளார். இவரின் தந்தை பாலச்சந்திரன் விவசாயம் செய்து வருகிறார்.

    தாயார் பிரதீபா கூலி வேலைக்கு செல்கிறார். இந்த மாணவர்களின் வீடுகளும் போதிய வசதி இல்லாததுடன், நெட்வொர்க் சேவை இல்லாமல் இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயா, நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முகமது சாதிக் மற்றும் ஆசிரியர்கள், பி.டி.ஏ. தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

    ஊட்டியில் பெண் போலீசுக்கு பாலியக் தொல்லை கொடுத்த தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் அதிகாரிகளை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோல நீலகிரி மாவட்டத்திலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றும் பாபு (வயது 35) என்பவர் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று காலை பாபு தலைமையில் 4 பேர் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனைக்கு சென்றனர். அவருடன் ஊட்டி மகளிர் போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவரும் பாதுகாப்பு பணிக்காக சென்றார்.

    சிறிது நேரம் வாகன சோதனை நடத்திய நிலையில் பெண் போலீஸ், ஜீப்பில் அமர்ந்து ஓய்வெடுத்தார். அந்த சமயம் ஜீப்பில் ஏறிய துணை தாசில்தார் பாபு, பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். உடனே துணை தாசில்தாரை, பெண் போலீஸ் கண்டித்து என்னிடம் இப்படி நடந்து கொள்ளாதீர்கள்? என சத்தம் போட்டார்.

    பின்னர் துணை தாசில்தார் தன்னிடம் அத்துமீறியது குறித்து பெண் போலீஸ் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் துணை தாசில்தார், பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.

    இதையடுத்து துணை தாசில்தார் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு அவரை கைது செய்தனர். பின்னர் ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பாபு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து குன்னூர் கிளை ஜெயிலில் பாபு அடைக்கப்பட்டார். 
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஊட்டியில் தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    தமிழகத்தில் பிப்ரவரி 19-ந்  தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஊட்டியில்  கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி,  குன்னூர், கூடலூர்  மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்ச்சோலை, உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கோத்தகிரி, கீழ்குந்தா, நடுவட்டம், ஓவேலி மற்றும் சோலூர் ஆகிய 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இத்தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 4-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5-ந்   தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். வேட்பு மனுக்களை பிப்ரவரி 7-ந்  தேதி திரும்பப் பெறலாம். இதையடுத்து, பிப்ரவரி 19-ந்  தேதி வாக்குப் பதிவும், பிப்ரவரி 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். தேர் தல் நடவடிக்கைகள் பிப்ரவரி 24-ந்  தேதி வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு மார்ச் 3-ந்  தேதியும், மறைமுகத் தேர்தல்கள் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர்  மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மார்ச் 4-ந்  தேதியும் நடைபெறவுள்ளது.

    இத்தேர்தல் நடவடிக்கைகளின்போது தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் பொருட்டு ஊட்டியில்  மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 0423-2441822 மற்றும் 0423-2444821 ஆகிய இரண்டு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. எனவே, தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் இந்த தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கொடிக்கம்பங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
    ஊட்டி:

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து கீழ்குந்தா மற்றும் பிக்கட்டி பேரூராட்சிகளுக்குட்பட்ட மஞ்சூர், பிக்கட்டி, எடக்காடு, குந்தாபாலம் உள்பட சுற்றுபுற பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டது. 

    பல்வேறு இடங்களில் அகற்றாமல் இருந்த கொடி கம்பங்கள், சுவரொட்டிகள், பேனர்களை கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் ஊழியர்கள் மூலம் அகற்றினார்கள். இதேபோல் சாலையோரங்களில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான தடுப்பு சுவர்களில் இருந்த கட்சி விளம்பரங்கள், வாசகங்கள் அழிக்கப்பட்டது. 
    நீலகிரியில் 294 பதவிக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
    ஊட்டி:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் வேட்பு மனுதாக்கல் செய்ய 15 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஊர்வலமாக வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

    நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. நகராட்சிகளில் 108 இடங்கள், பேரூராட்சிகளில் 186 இடங்கள் என மொத்தம் 294 பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. 

    நீலகிரியில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சி அலுவலகங்கள், அதிகரட்டி, பிக்கட்டி, தேவர்சோலை , உலிக்கல், ஜெகதளா, கேத்தி, கீழ்குந்தா, கோத்தகிரி, நடுவட்டம், ஓவேலி, சோலூர் ஆகிய 11பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு பெறப்படுகிறது. 

    ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. 9 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 

    இதையொட்டி நகராட்சி,பேரூராட்சி அலுவல கங்களில் முன்னேற் பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: & நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து, கிருமி நாசினி  கொண்டு கைகளை சுத்தப்படுத்தி, கையுறை அணிந்து வேட்பு மனுதாக்கல் செய்ய வரவேண்டும்.  2 வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். 

    வேட்பு மனுதாக்கலின்போது சம்பந்தப்பட்டவர் மட்டும் அலுவலகத்திற்குள் சென்று தாக்கல் செய்யலாம். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவருக்கு பதிலாக முன்மொழிபவர் தாக்கல் செய்யலாம். 

    நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தடுப்புகள் வைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய ஊர்வலமாகவோ அல்லது பேரணியாகவோ வரக்கூடாது. வேட்புமனு பெறும் அலுவலகங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தி பதிவு செய்யப்படும். வேட்புமனு பரிசீலனை, திரும்ப பெறுவது, சின்னங்கள் ஒதுக்கீடு போன்றவை கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
     
    மஞ்சூர் அருகே மலைப்பாம்பு ஒன்று தொழிலாளர்களை அச்சுறுத்தியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை உள்ளது. இப்பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை மற்றும் அதன் அருகே தோட்டத் தொழிலாளர்கள் குடி யிருப்புகள் அமைந்துள்ளது. 

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் நடமாடி வந்தது. அடிக்கடி தேயிலை தோட்டங்களில் செடிகளுக்கிடையே மலைப் பாம்பு ஊர்ந்து செல்வதை கண்டு தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். 

    மேலும் கோழிகளை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிகளிலும் பாம்பு நடமாடியதால் அச்சம் அடைந்த பொதுமக்கள் மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பசுந்தேயிலை கொள்முதல் மையம் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு இருப்பது தெரியவந்தது. 

    இதை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் வனவர் ரவிக்குமார் தலை மையில் வனக்காப்பாளர் அர்ஜூன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். தொடர்ந்து தேயிலை தோட்டத்தில் செடிகளுக்கு அடியில் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். 

    தொடர்ந்து  பாம்பை  எடுத்து சென்ற வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்குள் விடுவித்தனர். 10 நாட்களுக்கும் மேலாக அச் சுறுத்தலை ஏற்படுத்திய மலைப்பாம்பு பிடிபட்டதால் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
     
    வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் மேலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதி கரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் குன்னூர் வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி கல்லூரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுமார் 600 பேருக்கு மாதிரிகள் சேகரித்து பரிசோதனை நடைபெற்றது. இதில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்குள்ள மற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர் களுக்கு பரிசோதனை மேற் கொள் ளப்பட்டது.  இதில் கடந்த 3 நாட்க ளில் தொற்று பாதிப்பு  ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தங்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஊட்டியில் இன்று நடந்த குடியரசு தினவிழாவில் பழங்குடியின மக்களின் ஒரு நடன நிகழ்ச்சி மட்டும் நடந்தது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 73-வது குடியரசு தின விழா இன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத் தினார். 

    தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. பின்னர் சிறப்பாக பணிபுரிந்த போலீசார் 10 பேருக்கும், தீயணைப்பு மீட்பு பணித்துறையைச் சேர்ந்த 22 பேருக்கு சான்றிதழ்களை வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி வழங்கினார். 

    மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத் துறை அதிகாரிகளுக்கும் அவர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இன்று நடந்த விழாவில் பல்வேறு துறைச் சேர்ந்த  மொத்தம் 94 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கி கவுரவித்தார். 

    இன்று விழாவில் பழங்குடியின மக்களின் ஒரு நடன நிகழ்ச்சி மட்டும் நடந்தது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ& மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதேபோல விழாவில் பங்கேற்க பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

    விழாவுக்கு வந்த அரசு அதிகாரிகள், ஊழியர்கள் முக கவசம் அணிந்து பங்கேற்றனர். முன்னதாக அவர்களின் உடல் வெப்பநிலை பரி சோதிக்கப்பட்டது. அதன்பிறகே விழா மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். 
    18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற நிகழ்ச்சியில்  18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அட்டைகளை  குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் வழங்கினர். 

    மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் அவர்கள் வழங்கினர். தொடர்ந்து குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறியதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர் களிடையே பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    குறிப்பாக எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையினை நிலைநாட்ட வேண்டும் என்பதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

    வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை அதனை எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க கூடாது. ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். 

    18 வயது பூர்த்தியடைந்த  இளம் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க முன் வரவேண்டும். 

    தேர்தல் நாளன்று அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கு உட்படாமலும் பணம், பரிசு பொருட்கள் எதுவும் பெறாமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், திட்ட இயக்குனர் ஜாகீர் உசேன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, துணை இயக்குனர் பாலுசாமி, தனி தாசில்தார் புஷ்பா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    பனிப்பொழிவின் காரணமாக வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கும். அதன்பிறகு நவம்பரில் உறைபனி சீசன் தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை அதன் தாக்கம் நீடிக்கும். இந்த காலங்களில் வெப்பநிலை அளவு செல்சியசில் பூஜ்ஜியத்தை தொடும், சில நாட்களில் மைனஸ் டிகிரி செல்சியசிக்கும் கீழ் இறங்கும்.

    உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலை காய்கறி பயிர்கள் கருகும். இந்த ஆண்டு நீடித்த வடகிழக்கு பருவ மழை மற்றும் பருவம் தவறி பெய்த மழையால் உறைபனி தாமதமானது. டிசம்பர் மாதம் மத்தியில் பனிப்பொழிவு தொடங்கிய நிலையில், அதன் தாக்கம் அதிகரித்து உறைபனி பொழிவு ஏற்பட்டது.

    சில தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், பனியின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று மற்றும் இன்று அதிகாலை கடும் உறைபனி பொழிவு ஏற்பட்டது. இன்று 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், படகு இல்லம், கூட்ஸ் ஷெட் உட்பட பல பகுதிகளில், வெள்ளை கம்பளம் விரித்ததுபோல புல்வெளிகள் காணப்பட்டது. அதிகாலை, இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால், மக்கள் மிகுந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் கடும் பனிப்பொழிவின் காரணமாக ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைபனி சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்களில் டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    குறிப்பாக பனியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதால் அதிகாலை காய்கறி விவசாயத்தில் ஈடுபடும் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள், வாகன டிரைவர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.



    15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் முதன்மை மாவட்டமாக விளங்குவதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 88 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    4 சதவீதத்தினர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுகின்றனர். பாதிக்கப்பட்ட 1413 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 90 பேர் கொரோனா சிறப்பு மையங்களில் சிகிச்சை பெறுகின்றனர்.

    வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றாளர்களுக்கு தினமும் தொலைபேசி மூலமாக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு கொரோனா கிட் வழங்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் கண்காணிக்கின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி 99 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 10 லட்சத்து 66 ஆயிரத்து 446 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 25 ஆயிரத்து 600 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு நீலகிரி முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. 9 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

    கொரோனா பரவலால் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள், மாணவர்களுக்கு அனுமதியில்லை. கட்டுப்பாடுகளுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    ஊட்டி கோழிப்பண்ணை பகுதியில் பாறைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக கோபால் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து உடைக்கப்பட்ட பாறைகளை அளவிட்டு அளிக்கும் பரிந்துரையின் பேரில் கோட்டாட்சியர் அபராதம் விதிப்பார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×