என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நீலகிரியில் விவசாயிகளின் குழந்தைகள் மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சி

    போதிய நெட்வொர்க் வசதி இல்லாத நிலையில் மாணவர்கள் வீட்டில் இருந்தே படித்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    ஊட்டி:
    தமிழகத்தில் 2021-2022-ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடந்தது.  

    இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மாநில எல்லைப் பகுதியான மஞ்சள்மூலா குக்கிராமத்தைச் சேர்ந்த மனோகர் நிதின் (வயது 19)  மருத்துவ படிப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்   அம்பலமூல  அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார்.  கடந்த 2020 -21ம் கல்வி ஆண்டில் நீட் தேர்வு எழுதினார். 

    அதில் வெற்றி பெற்றபோதும் முன்னுரிமை கிடைக்காத நிலையில் மீண்டும் படித்து நீட் தேர்வு எழுதினார். இதில் 342-வது இடம்பிடித்து மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்றுள்ளார். 

    இவரின் தந்தை பிரகாசன் மாடு  வளர்ப்பதுடன், விவசாய தொழிலும் மேற்கொண்டு வருகிறார். தாயார் அனிதா கணவருக்கு துணையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். 

    மாணவர் நிதின் கூறுகையில் ஆர்வத்துடன் படித்தால் சாதிக்க முடியும் . நான் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி சுயமாக படித்து, நம்பிக்கையுடன் நீட் தேர்வு எழுதியதால் வெற்றி பெற முடிந்தது என்றார். 

    மேலும் இதே பள்ளியில் படித்த, அய்யங்கொல்லி பரிவாரம் பகுதியைச் சேர்ந்த மாணவி அனகா (18) . இவர்  வீட்டிலிருந்தே படித்து நீட் தேர்வில், 543-வது இடம் பிடித்து பல் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளார். இவரின் தந்தை பாலச்சந்திரன் விவசாயம் செய்து வருகிறார்.

    தாயார் பிரதீபா கூலி வேலைக்கு செல்கிறார். இந்த மாணவர்களின் வீடுகளும் போதிய வசதி இல்லாததுடன், நெட்வொர்க் சேவை இல்லாமல் இருந்து வருகின்றது.

    இந்த நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயா, நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முகமது சாதிக் மற்றும் ஆசிரியர்கள், பி.டி.ஏ. தலைவர் ரமேஷ் குமார் உள்ளிட்டோர் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×