என் மலர்
நீலகிரி
மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுவதோடு, உறைபனி தாக்கம் காணப்படும்.
கடந்த சில நாட்களாக ஊட்டியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானம் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது.
பச்சை புல்வெளிகள் தெரியாத அளவுக்கு அந்த இடமே வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது. காந்தல் முக்கோணம் பகுதியில் புல்வெளிகளில் உறைபனி படர்ந்திருந்தது. மேலும் உறைபனி தாக்கத்தால் தண்ணீரும் ஆவியாக மாறியது.
உறைபனி தாக்கம் அதிகரித்ததால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பூந்தொட்டிகளில் நிரப்பப்பட்ட மண் மீது உறைபனி கொட்டி கிடந்தது. ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.
அதிகாலையில் விவசாய பணிகளுக்கு செல்கிறவர்கள் குளிரை போக்க நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தும், கம்பளி ஆடைகளை அணிந்தும் சென்றனர்.
தொடர் பனியால் தாழ்வான பகுதிகளில் உள்ள புல்வெளிகள், வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் கருகி உள்ளன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. திறந்தவெளியில் நிறுத்தப்பட்டு உள்ள இருசக்கர வாகனங்கள், கார்கள் மீது உறைபனி படர்ந்து உள்ளது. அதனை அகற்றினாலும் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது. என்ஜின் சூடாக நீண்ட நேரம் ஆகிறது.
தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியின் காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உறைபனி காணப்பட்டது.
ஊட்டி:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குன்னூர், காட்டேரி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்துமாரி தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் காரில் வந்தவரிடம் உரிய ஆவணமின்றி ரூ. 69 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த செல்வராஜ் என்பதும், அவர் ஊட்டியில் வீடு கட்டி வருவதால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ. 69 ஆயிரம் பணம் எடுத்து வந்ததும் தெரியவந்தது.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் உரிய சான்றுகளை வழங்கினால் பணத்தை திருப்பி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






