என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
நீலகிரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுதாக்கல் விறுவிறுப்பு
102 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
ஊட்டி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 184 வார்டுகள் என மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட பிரதான கட்சிகள் வார்டுகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
இதனை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலும் இந்த பகுதிகளில் விறு,விறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று ஒரே நாளில் நீலகிரியில் 95 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். ஊட்டி நகராட்சியில் 33 பேர், குன்னூர் நகராட்சியில் 7 பேர், கூடலூர் நகராட்சியில் 5 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 6 பேர் என 4 நகராட்சிகளில் மட்டும் நேற்று மட்டும் 51 பேர் மனுதாக்கல் செய்தனர்.
அதிகரட்டி பேரூராட்சியில் 2 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 8 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 2 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 3 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 4 பேர், கேத்தி பேரூராட்சியில் 12 பேரும் மனுதாக்கல் செய்தனர். கீழ்குந்தா பேரூராட்சில் ஒருவர், கோத்தகிரி பேரூராட்சியில் 5 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 2 பேர், ஓவேலி பேரூராட்சியில் 3 பேர், சோலூர் பேரூராட்சியில் 2 பேர் என 44 பேர் பேரூராட்சிகளில் போட்டியிட வேட்புமனு வழங்கினர்.
வேட்பு மனுதாக்கல் தொடங்கிய 28-ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை மட்டும் நீலகிரியில் மொத்தம் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடங்களான 294 பதவிகளுக்கு 102 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். இதனால் வேட்பு மனு தாக்கல் பணி விறு,விறுப்பாக நடந்து வருகிறது. தற்போது முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது. அந்த கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று அல்லது நாளைக்கு வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு தயாராகி வருகிறார்கள்.
இதுதவிர சுயேட்சையாக போட்டியிடுபவர்களும் மனுதாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனுதாக்கலுக்கு ஒரு நாளே மிஞ்சியிருப்பதால் இன்றும், நாளையும் தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளர்கள் தலைகளாகவே காணப் படும். வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து விட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு சென்று மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நீலகிரியில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் தேர்தல்களம் களைகட்ட தொடங்கியுள்ளது..
Next Story






