என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் அறிவுரை
    X
    குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் அறிவுரை

    வாக்காளர்கள் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் - குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் அறிவுரை

    18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற நிகழ்ச்சியில்  18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களுக்கு வண்ண புகைப்படத்துடன் கூடிய புதிய வாக்காளர் அட்டைகளை  குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் வழங்கினர். 

    மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் அவர்கள் வழங்கினர். தொடர்ந்து குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி கூறியதாவது:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர் களிடையே பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    குறிப்பாக எதிர் வரும் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையினை நிலைநாட்ட வேண்டும் என்பதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

    வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் உரிமை அதனை எந்த காரணத்திற்காகவும் விட்டு கொடுக்க கூடாது. ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்குகளும் மிகவும் முக்கியமானது என்பதை மனதில் நிறுத்தி தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். 

    18 வயது பூர்த்தியடைந்த  இளம் வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை எண்ணி தவறாமல் வாக்களிக்க முன் வரவேண்டும். 

    தேர்தல் நாளன்று அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுக்கு உட்படாமலும் பணம், பரிசு பொருட்கள் எதுவும் பெறாமல் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், திட்ட இயக்குனர் ஜாகீர் உசேன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, துணை இயக்குனர் பாலுசாமி, தனி தாசில்தார் புஷ்பா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×