search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த சிறுத்தைகள்
    X
    குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த சிறுத்தைகள்

    குன்னூர் அருகே ஒரே நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த சிறுத்தை, கரடிகள் கூட்டம்

    கரடிகள் வீடுகள் மற்றும் கோவில்களில் வைத்திருக்க கூடிய எண்ணெய்களையும், மரத்தில் உள்ள தேனையும் குடிப்பதற்காக அங்கேயே முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ளது கரிமறா அட்டி கிராமம்.

    இந்த கிராமத்தை சுற்றிலும் வள்ளுவர் நகர், வாசுகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தை சுற்றி அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இதில் சில தேயிலை தோட்டங்கள் பராமரிப்பின்றி காடுகள் போல் காட்சியளிக்கிறது.

    இதனால் வனத்தை விட்டு வெளியில் வரும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் பதுங்கி கொண்டு இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் புகுந்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. சிறுத்தை இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து வீடுகளில் வளர்க்க கூடிய நாய் மற்றும் வீட்டு விலங்குகளை அடித்து கொன்று விடுகிறது.

    கரடிகள் வீடுகள் மற்றும் கோவில்களில் வைத்திருக்க கூடிய எண்ணெய்களையும், மரத்தில் உள்ள தேனையும் குடிப்பதற்காக அங்கேயே முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    கரடிகள் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 2 சிறுத்தைகள் மற்றும் 3 கரடிகள் ஒரே நேரத்தில் கரிமாறா அட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது. கரடிகளும், சிறுத்தையும் வெகுநேரமாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தன.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விவசாயத்திற்காக வைக்கப்பட்டிருந்த உர மூட்டையையும் எடுத்து தூக்கி சாலையில் எறிந்து விட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டன.

    குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த கரடிகள் கூட்டம்.


    வெகுநேரத்திற்கு பிறகே சிறுத்தைகளும், கரடிகளும் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்றன. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் முத்து என்பவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. இதனை பார்த்ததும் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பதால் இங்கு வாழ அச்சமாக இருப்பதாகவும், உடனே சிறுத்தை, கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×