என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
    • கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலும், இரவில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி, குன்னூா் கோத்தகிரியில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊா்ந்து செல்லும் நிலைஏற்பட்டது. கடும் குளிா் மற்றும் பனி மூட்டம் காரணமாக பெரும்பாலான முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைந்த அளவே காணப்பட்டன. காலை நேரத்தில் 16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.

    காட்சிமுனைகளைக் காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை மட்டும் கண்டு செல்லும் சூழல் ஏற்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் குன்னூர் வி.பி.தெருவில் உள்ள சில மொத்த வியாபார கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், குன்னூர் வருவாய் துறை தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் குழுவினர் அந்த பகதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அங்கு இருந்த மளிகை கடையிலும் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, அந்த கடை சுத்தம், சுகாதாரமின்றி இருந்ததும், குறிப்பிட்ட தேதியை கடந்த பின்னும் அந்த பொருட்களை விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் அந்த கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, இனி இதுபோன்று விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

    கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் பேரூராட்சி செயலாளர் மணிகண்டன், சுகாதாரத்துறை ஆய்வாளர் ரஞ்சித் திடீர் ஆய்வு மே ற்கொண்டனர்.அப்போது அங்கு சில கடைகளி ல் தடை செய்யப்ப ட்ட பிளாஸ்டி க் பொருட்களை பயன்படு த்தியது தெரியவந்தது. அதனை அதிகாரிகள் கைப்பற்றி, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ரூ.31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • இன்ஸ்பெக்டர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் ரவிகுமார் தலைமை தாங்கினார். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பஸ் நிலையத்தில் புறப்பட்ட பேரணி மார்க்கெட் திடல், காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம் வழியாக காந்தி மைதானத்தை சென்றடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகள் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், மார்பக புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்தும், அவர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது.
    • வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கூடலூர் நகரில் தாசில்தார் சித்தராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று திடீரென வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் அதை பறிமுதல் செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளுக்கு அபராத தொகை வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். தடை செய்யப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைமீதும், அதன் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    • குன்னூரிலேயே இறங்கி விட்டனர்.
    • 3 மாணவர்களையும் அழைத்து ஒப்படைத்தனர்.

    ஊட்டி,

    கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பாலிடெக்னிக்கில் பயின்று வரும் 3 மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். வாய் பேச முடியாத நிலையிலும், காது கேட்காத நிலையிலும் இருக்கக்கூடிய மாணவர்கள் வழி தெரியாமல் தவறான வழிகாட்டுதல் காரணமாக குன்னூரிலேயே இறங்கி விட்டனர். மாணவர்களின் உடமைகள் அனைத்தும் வந்த பேருந்திலேயே ஊட்டிக்கு சென்று விட்டது. இதனை அடுத்து உடனடியாக குன்னூர் காவல்துறையினர் ஊட்டி காவல்துறையினரை தொடர்பு கொண்டு இது குறித்த தகவல் அளிக்கப்பட்டது. ஊட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர், மற்றும் தலைமை காவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடைமைகளை மீட்டு அந்த 3 மாணவர்களையும் அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். காவல்துறையின் இந்த செயல் அனைத்து தரப்பு மக்களிடம் பாராட்டுதல்களை பெற்றது.

    • கப்பேறு விடுப்பு 1 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 125 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை அமைச்சா் வழங்கினாா்.

    ஊட்டி,

    ஊட்டி அரசு பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சாா்பில் மக்கள் சேவையில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழாவை வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தொடக்கி வைத்தாா்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தாா். பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் பொருட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் தொடங்கி அரசு தாவரவியல் பூங்காவில் நிறைவடைந்தது.

    இதில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மருத்துவா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா். இதில்

    வனத்துறை அமைச்சா் பேசியதாவது:-

    பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளன. மக்கள் சேவையில் பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இத்துறையின் மூலம் புறநோயாளிகள், உள் நோயாளிகள், கா்ப்பகால பராமரிப்பு, பிரசவ கால தடுப்பு திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் மருத்துவமனை பிரசவத்துக்கு ரூ.700 நிதி உதவி வழங்கப்படுகிறது. மகப்பேறு விடுப்பு 1 ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, வட்டார மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 125 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை அமைச்சா் வழங்கினாா். இதில், மாவட்ட ஊராட்சி தலைவா் பொன்தோஸ், ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, துணை இயக்குநா் பாலுசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன், நகராட்சி ஆணையா் காந்திராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட மக்கள் கோரிக்கை
    • கூலி வேலைக்கு சென்ற பெண்ணை தாக்கிக் கொன்றது.

    ஊட்டி,

    ஊட்டி அருகே மாவனல்லா மற்றும் வாழைத்தோட்டம் கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி திரிந்து வருகிறது.

    இந்த யானை கடந்த சில வாரங்களுக்கு முன் மாவனல்லா அருகே கூலி வேலைக்கு சென்ற மங்கலி என்ற பெண்ணை தாக்கிக் கொன்றது. அதனைத் தொடா்ந்து வாழைத்தோட்டம் கிராமத்தையொட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெருமாள் என்ற முதியவரையும் தாக்கிக் கொன்றது.

    இந்த யானை தொடா்ந்து கிராமப் பகுதிகளை ஒட்டியே சுற்றித் திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். சாலையில் செல்லும் வாகனங்களையும் இந்த யானை துரத்துவதால் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனா்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வாரங்களாக யானை நடமாட்டம் காணப்படுகிறது. யானை தொடர்ந்து குடியிருப்பையொட்டி சுற்றுவதால் நாங்கள் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது. எனவே இங்கு சுற்றி திரியும் யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.
    • மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    ஊட்டி:

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1,500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன.

    வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தமிழகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு வருகின்றனர்.

    இங்கு பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சியையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

    தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் பறவைகள் தொடர்புடைய பொருட்களை மறு உத்தரவு வரும் வரை கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    • காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது.
    • அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

    இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கில் தனிப்படை போலீசார் மறுவிசாரணை நடத்தி வந்தனர். இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி தலைமையிலான ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் கடந்த 26-ந்தேதி கொடநாடு எஸ்டேட்டில், 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.

    அப்போது காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது. அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.

    கொடநாடு வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சாட்சிகளை கலைத்தது போல் அந்த மரத்தை எஸ்டேட் ஊழியர்கள் வெட்டி உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதா என ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, வனத்தில் வெட்டப்படும் மரங்கள் குறித்து வனத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். கொடநாட்டில் மரம் வெட்டப்பட்டதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    ஊட்டி,

    கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள பண்ணையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுமார் 1, 500 வாத்துகள் திடீரென உயிரிழந்தன. வாத்துகளுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதியானது. இதனால், அங்கு மேலும் 25 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கக்கனல்லா, நம்பியார் குன்னு, தானூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய 8 சோதனை மற்றும் தடுப்புச் சாவடிகளில் ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலை மையில், ஒரு கால்நடை ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியா ளர்கள் கொண்ட குழு போலீசார், வனத்துறை மற்றும் வருவாய் துறையுடன் இணைந்து பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

    குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் உள்ளதால், அங்கிருந்து இறைச்சியையோ, முட்டைகளையோ தமிழகத்துக்குள் கொண்டு வர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, டயர்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

    தற்காலிகமாக கேரள மற்றும் கர்நாடகவில் இருந்து வரும் பறவைகள் தொடர்புடைய பொருட்களை மறு உத்தரவு வரும் வரை கொண்டு வர உத்தரவிட்டுள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய அரசு பறவை காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

    • தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது
    • 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அதிகப்படியான குறுகிய சாலை வளைவுகள் உள்ளன.

    இந்த சாலை வளைவுகளில் வெளியூர் சுற்றுலா பயணிகள் அவ்வப்போது வளைவுகள் தெரியாமல் வாகனங்களை சாலைகளின் ஓரத்தில் இறக்கி விபத்தில் சிக்கி விடுவர்.

    குறிப்பாக தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு சாலை வளைவு உள்ளூர் மற்றும் வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சவாலாக இருந்து வந்தது.

    கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த சாலை வளைவில் 50-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்பட்டு இருக்கின்றன. உயிர் பலிகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

    இந்த சாலை வளைவை சரி செய்ய வேண்டும் என்று பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தது.

    இதனால் இந்த சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை விரிவு செய்ய முடிவு செய்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த சாலை வளைவை விரிவு செய்ய பணிகள் நடைபெற துவங்கின. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.
    • பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி என்.பி.ஏ. நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநல பணி திட்டம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் தூய்மை இந்தியா மற்றும் வலிமையான இந்தியா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    மாரத்தானை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆல்ப்பிரட் எபனேசர், கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகோப்பை மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×