என் மலர்
நீலகிரி
- டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.
- ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஓய்வுபெறும் டேன் டீ தொழிலாளா்களுக்கு நடுவட்டம் பேரூராட்சியில் வீடு கட்டுவதற்கு தோ்வு செய்யப்பட்ட இடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.அதனால், ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினா் நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததன் பேரில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், டேன் டீ மேலாண்மை இயக்குநா் (பொ) வெங்கடேஷ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்த் ராவ், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநரும் இண்கோ சா்வ் முதன்மைச் செயல் அலுவலா் மோனிகா ராணா, வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, டேன் டீ பொது மேலாளா் அக்பா், வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்
- காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
- அந்த பகுதியில் 2 காா்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாகச் சென்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
இந்நிலையில், உதகை அருகே சோலூா் சோமா்டேல் எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாள்களாக அடையாளம் தெரியாத நபா்கள் கைகளில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், வனத் துறையினா் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், சோமா்டேல் எஸ்டேட் பகுதியில் பைக்காரா வனத் துறையினா் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த பகுதியில் 2 காா்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாகச் சென்றது. இதையடுத்து, வனத் துறையினா் அந்த காா்களை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினா்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் காரை சோதனை செய்தபோது, அதில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் வெட்டு கத்திகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கூடலூா் பகுதியைச் சோ்ந்த குட்டி கிருஷ்ணன், திவாகா், சுரேஷ், மணி, விவேக் என்பதும், இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த வனத் துறையினா் அவா்களிடமிருந்த துப்பாக்கி, கத்திகளை பறிமுதல் செய்தனா்.
- கோவில்மேட்டில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் குருசாமியை கைது செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி கோவில்மேட்டில் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில்மேடு பஸ் நிறுத்தத்தில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் இடுஹட்டி பகுதியை சேர்ந்த குருசாமி என்பதும், மதுவை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய அங்கு நின்றதும் தெரிய வந்தது. பின்பு அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
- போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
- தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
குன்னூர்,
டெல்லி ஐ.சி.எஸ்.சி கவுன்சில் சார்பில் தேசிய அளவிலான ஆக்கி போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது.போட்டியில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், பீகார், பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
தமிழக அணி சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் நீலகிரி மாவட்ட குன்னூர் கோழியின சென்ட் பள்ளி மற்றும் பிருந்தாவன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர். இவர்களை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
- 20 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழுவினா் நீலகிரியில் முகாமிட்டுள்ளனா்.
- மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.
ஊட்டி,
வடகிழக்கு பருவமழையின்போது, ஏற்படும் இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காப்பாற்ற அரக்கோணத்தில் இருந்து 20 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழுவினா் நீலகிரியில் முகாமிட்டுள்ளனா்.
இவா்கள், குன்னூரில் உள்ள உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இயற்கை சீற்றத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம், பயிற்சி அளித்தனா். இதில், குன்னூா் தாசில்தாா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
குன்னூா், கோத்தகிரி, குந்தா, பந்தலூா், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள், முதியோா் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் நவம்பா் 14-ந் தேதி வரை பேரிடா் செயல் விளக்கம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளனா்.
- பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
- நேரடியாக சென்று குறைகளை கோரிக்கை மனுவாக பெற்றுக் கொண்டார்.
ஊட்டி,
நீலகிரி தொகுதி எம்.பி.யும், தி.மு.க துணை பொதுசெயலாளர் ஆ.ராசா 2 நாட்களாக நீலகிரியில் முகாமிட்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொதுமூடி, கெந்தோரை, இடுஹட்டி, கட்டப்பெட்டு போன்ற மலை கிராமங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தேயிலை விவசாயம் மேற்கொள்ளும் பெண்கள், படுக சமுதாய பெண்கள் என மலை கிராமங்களில் வசிக்கும் மக்களிடத்தில் நேரடியாக சென்று அவர்களது குறைகளை கோரிக்கை மனுவாக பெற்றுக் கொண்டார். இதன்பின் கட்டப்பெட்டு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஆ.ராசா எம்.பி.பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் 120 கோடி வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார். அந்த வளர்ச்சித் திட்டங்களில் ஒரு திட்டம் தான் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.
அதன்படி விரைவில் ஊட்டியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் வீடுகளை கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்கான ஆயத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாயன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம் ராஜூ, முஸ்தபா உள்பட பலர் பங்கேற்றனர்.
- குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது.
- பனிமூட்டம், குளிர் நிலவினாலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலும், மதியத்திற்கு பிறகு இதமான கால நிலையும் நிலவுகிறது.
மேலும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்கிறது. சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
தற்போது மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கடும் பனிமூட்டமும் குளிரும் நிலவுகிறது.
குறிப்பாக குன்னூர், ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. காலை நேரத்தில் வெயில் அடிக்கிறது. திடீரென பகல் வேளையில் நகர பகுதி பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.
பகல் வேளையே இரவு போல் காணப்படுவதால் சாலை முழுவதும் மறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.
பனிமூட்டத்துடன் கடுமையாக குளிரும் வீசுகிறது. இதனால் பொதுமக்களும், அதிகாலையில் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகளும் சிரமம் அடைகின்றனர். குளிரில் இருந்து காத்துக்கொள்ள சிலர் ஆங்காங்கே தீமூட்டி குளிர் காய்வதையும் பார்க்க முடிகிறது.
மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரின் காரணமாக முக்கிய சாலைகளில் குறைந்த வாகனங்களே காணப்பட்டன. பனிமூட்டம், குளிர் நிலவினாலும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர். காட்சி முனைகளை மட்டுமே அவர்களால் பார்க்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணப்படுகிறது.
அவ்வப்போது மாவட்டத்தில் மழையும் பெய்து வருவதால், குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- 4-வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
- இவருக்கு நெல்லை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் தும்பி பெட்டு பகுதியை சேர்ந்தவர் பாலன். விவசாயி. இவரது மனைவி ராதா. அவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஸ்ரீமதி (வயது 20). இவர்கள் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள். ஸ்ரீமதி கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வில், தேர்ச்சி பெற்று 406 மதிப்பெண்கள் பெற்றார்.
இதைத்தொடர்ந்து டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் டாக்டருக்கு படிக்க முயற்சி செய்துள்ளார். தொடர்ந்து யூடியூப் வீடியோக்களை பார்த்து தானாகவே படித்து நீட் தேர்வு எழுதினார். ஆனால், தேர்ச்சி பெற முடியவில்லை. இதையடுத்து ஸ்ரீமதி கோவையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வு பயிற்சி பெற்றார். அதன் பின்னர் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
சமீபத்தில் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொண்டார். இதில் மாணவி ஸ்ரீமதிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது. இந்தநிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை ஸ்ரீமதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இது குறித்து மாணவி ஸ்ரீமதி கூறியதாவது:-
நான் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன். மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் 4 முறை நீட் தேர்வு எழுதினேன்.
அப்போது 2 முறை தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், அங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதால், என்னால் சேர முடியவில்லை. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில், வேறு எந்த உயர்கல்வியிலும் சேராமல் 3 ஆண்டுகள் காத்திருந்தேன். தற்போது 4-வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.
தற்போது மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. டாக்டராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய உள்ளேன். குழந்தைகள் நல டாக்டராக முடிவு செய்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் இருளர் இன மாணவி ஒருவர் முதல் முறையாக எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது.
- விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் முட்டைக்கோஸ் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே முட்டைக்கோஸ் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது. இதற்கிடையே கொள்முதல் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சமீபகாலமாக விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை போன்றவற்றை எதிர்கொண்டு வருகிறோம். மேலும் வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.20-க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வாய்ப்பு உள்ளது. ஆனால், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.
- கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர்.
- இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஊட்டி,
ஊட்டியில் அனுமதிக்கப்பட்ட தூரத்திற்கு மேல் விதியை மீறி ஆட்டோக்களை இயக்கக்கூடாது என கலெக்டரிடம், சுற்றுலா வாகன டிரைவர்கள் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஊட்டி சுற்றுலா மேக்சி கேப் ஓட்டுநர் சங்கம் சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நீலகிரியில் தொழிற்சாலைகளோ மற்றும் வேறு தொழில்கள் இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன டிரைவர்கள் உள்ளனர். இந்தநிலையில் நீலகிரியில் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட அதிக தூரம் சுற்றுலா பயணிகளையும், உள்ளூர் மக்களையும் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அழைத்து சென்று வருகின்றனர். இதனால் சுற்றுலா வாகன டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
- பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது.
- நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி:
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள டானிங்டன் பகுதியில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய பகுதியாகவும், பல ஊர்களுக்கு செல்ல முக்கிய சந்திப்பாகவும் இருந்து வருகிறது.
இந்த பகுதியில் வானங்கள் அதிகமாக சென்று வருவதால் பொதுமக்கள் செல்ல சாலையின் ஓரத்தில் பல லட்ச மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதை மக்களுக்கு பயன்பட்டு வருவதை விட இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகளின் உபயோகப்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்தி வைக்கவே அதிகமாக பயன்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் சாலையில் நடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகமாக உள்ளது.
வாகனங்களை நிறுத்தி வைத்தது குறித்து அந்த பழுது பார்க்கும் கடைகளின் உரிமையாளர்களிடம் அப்பகுதியினர் போய் கேட்டால் அவர்களை கடை உரிமையாளர்கள் மிரட்டுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களின் பின்புறம் அப்பகுதியினரின் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே போக்குவரத்து போலீசார் இந்த பயன்பாடற்ற வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தி நடைபாதையை மீட்டு தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை.
- தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொ ணவக்கரை ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக துரைராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறாா். தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஊராட்சி நிா்வாகம் கடந்த பல மாதங்களாக தனக்கு ஊதியம் தரவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடா்பாக அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கொணவக்கரை ஊராட்சியில் 1997-ம் ஆண்டில் நிரந்தரப் பணியாளராகப் பணியில் சோ்ந்தேன். எனக்கு ஊதிய உயா்வு உள்பட ஒரு சில சலுகைகள் 7 ஆண்டுகளாக கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நான் அண்மையில் பக்கவாத நோயால் பாதிக்க ப்பட்டேன். சுய நினைவு இல்லாமல் இருந்த என்னை எனது குடும்பத்தாா் மைசூரு அழைத்து சென்று 2 மாதங்கள் மருத்துவமனை யில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், கடந்த பல மாதங்களாக எனக்கு ஊராட்சி நிா்வாகம் ஊதியம் அளிக்கவில்லை. இதனால், மருந்து வாங்கவோ, மருத்துவமனைக்கு செல்லவோ முடியாமல் அவதியடைந்து வருகிறேன். எனவே, என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.
இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். கலெக்டர் அலுவலகம் வந்து தூய்மை பணியாளர்ஒருவர் தன்னை கருணை கொலை செய்யும்படி மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.






