என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும்- ஆ.ராசா எம்.பி. தகவல்
- பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
- நேரடியாக சென்று குறைகளை கோரிக்கை மனுவாக பெற்றுக் கொண்டார்.
ஊட்டி,
நீலகிரி தொகுதி எம்.பி.யும், தி.மு.க துணை பொதுசெயலாளர் ஆ.ராசா 2 நாட்களாக நீலகிரியில் முகாமிட்டு பொது மக்களிடம் குறைகள் கேட்டறிந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி ஊட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொதுமூடி, கெந்தோரை, இடுஹட்டி, கட்டப்பெட்டு போன்ற மலை கிராமங்களுக்கு நேரடியாக சென்று அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தேயிலை விவசாயம் மேற்கொள்ளும் பெண்கள், படுக சமுதாய பெண்கள் என மலை கிராமங்களில் வசிக்கும் மக்களிடத்தில் நேரடியாக சென்று அவர்களது குறைகளை கோரிக்கை மனுவாக பெற்றுக் கொண்டார். இதன்பின் கட்டப்பெட்டு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஆ.ராசா எம்.பி.பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் 120 கோடி வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளார். அந்த வளர்ச்சித் திட்டங்களில் ஒரு திட்டம் தான் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார்.
அதன்படி விரைவில் ஊட்டியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் வீடுகளை கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இதற்கான ஆயத்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், வடக்கு ஒன்றிய செயலாளர் காமராஜ், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாயன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எம் ராஜூ, முஸ்தபா உள்பட பலர் பங்கேற்றனர்.






