என் மலர்
நீலகிரி
- தொடர் மழைக்கு குன்னூர் உழவர் சந்தை சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது.
- கனமழை காரணமாக கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர்:
கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிசோலை, ஒட்டுப்பட்டரை, பர்லியார், ஜெகதளா, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை காற்றுடன் கனமழை கொட்டியது.
விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, குன்னூர், கோத்தகிரியில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன.
தொடர் மழைக்கு குன்னூர் உழவர் சந்தை சாலையில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. மண்சரிந்து அருகே இருந்த 3 வீடுகளுக்குள்ளும் மண் விழுந்தது. அத்துடன் மழைநீரும் அந்த வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து வந்து மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் உழவர் சந்தை சாலையில் மண் மற்றும் குப்பைகள் சேர்ந்து அந்த பகுதியே சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியில் திருப்பி விடப்பட்டது.
இந்த மழைக்கு குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை உடனடியாக தீயணைப்பு துறையினர் அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
கனமழை காரணமாக கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கனமழை காரணமாக குன்னூர் கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய துறை சார்ந்த அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொடநாடு, சோலூர்மட்டம், கீழ்கோத்தகிரி உள்ளிட்ட பகுதியிலும் கனமழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழைக்கு தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள புத்தூர் காலனி குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
- தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
- தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.
ஊட்டி,
பந்தலூர் அருகே சேரம்பாடி டேன்டீ ரேஞ்ச் எண்.1,2,3,4 பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து வருகின்றன. மேலும் குடியிருப்புகளை தாக்குவதோடு, தொழிலாளர்கள், பொதுமக்களை துரத்தி வருகின்றன. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு டேன்டீ தொழிலாளர்கள் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும் ரேஞ்ச் எண்.3-ல் தோட்ட பகுதியில் யானைகள் புகுந்ததால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதை அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானைகளை விரட்டினர்.
- 100 கிலோ ரேஷன் அரிசி குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது.
- விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? மற்றும் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தநிலையில் ஊட்டி ஆர்.கே.புரம் சாலையில் உள்ள புதரில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர் வாசுகி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் 100 கிலோ ரேஷன் அரிசி ஆங்காங்கே குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி கூறுகையில் ரேஷன் அரிசியை மர்மநபர்கள் கடத்தி செல்லும்போது அதிகாரிகளிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.
- உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.
- மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
ஊட்டி
தி.மு.க இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.போட்டியை நகர மன்ற தலைவர் சீலா கேத்ரின் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் பா.மு. வாசிம் ராஜா தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற வெலிங்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு நகர செயலாளர் ராமசாமி பரிசு வழங்கினார். இரண்டாம் பரிசு கன்னி மாரியம்மன் கோவில் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைமை பேச்சாளர் ஜாகிர் உசேன் வழங்கினார். அருகில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், செல்லின் ராஜ், சாதிக் பாட்சா, நகர துணை செயலாளர் முருகேசன் மற்றும் வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன், கிளை செயலாளர் சிக்கந்தர் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, மாவட்டம் மாணவர் அணி துணை அமைப்பாளர் விஜய், ராஜ், நந்தகுமார் சதீஷ்குமார், மதிவாணன், பாலச்சந்தர், மகாலி, சதீஷ் தினேஷ், வினோத்குமார், செல்வா, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ராமச்சந்திரன்-சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்
- உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்லத்தில், சுற்றுலாத்துறையின் சார்பில், முதன்முறையாக பல்வேறு வகையான சாகச விளையாட்டுகள் அமைப்பதற்கான பூமி பூஜையினை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் முன்னிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேலாண்மை இயக்குநர், சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால், உள்மாநிலம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்வேறு சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை புரிகின்றனர். மேலும் ஊட்டி படகு இல்லத்திற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாத்துறை சாகச விளையாட்டுகளுக்கு விதிமுறைகளை கண்டறிந்து கடந்த செப்டம்பர் மாதம் நெறிமுறைப்படுத்தி விதி முறைகளை வெளியிட்டது. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா தல மேம்பாட்டு புதிய திட்டத்தினை வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 அல்லது 15 இடங்களை தேர்வு செய்து அரசின் நிதி பெற்று பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும். சில இடங்களில் தனியாருடன் இணைந்து பல்வேறு சாகச விளையாட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதில் ஊட்டி படகு இல்லம், கொல்லிமலை, ஜவ்வாதுமலை; ஏலகிரி ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சாகச விளையாட்டுகள் தனியாருடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில் கிளேம்பிங் சைட் அமைக்கபட உள்ளது.
இதில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வகையான சாகச விளையாட்டுகளான இழைவரிக்கோடு, விதானப் பயணம், இழைவரி சுழற்சி, மாபெரும் ஊஞ்சல், ரோலர் கோஸ்டர் இழைவரிக் கோடு, பங்கீ ஜம்பிங், ராக்கெட் வெளியேற்றி, தொங்கு பாலம், மற்றும் நான்கு இருக்கைகள் கொண்ட மனித கைரோ, ஆகிய சாகச விளையாட்டுகள் இடம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை செலவாகும். இப்பணிகள் முடிவடைய 6 முதல் 7 மாதங்கள் வரை ஆகும். ஏற்கனவே இது போன்ற சாகச நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருப்பவர்கள் பதிவு செய்து இது மட்டுமின்றி வேறு நிகழ்ச்சிகள் செய்பவர்களுக்கு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் இது போன்று நிகழ்ச்சிகளை மேற்கொள்ள சுற்றுலாத்துறையில் பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கு தேவையான அனுமதி வழங்கப்படும்.
சுற்றுலாத்துறையின் மூலம் மிதக்கும் உணவகம் அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளது. மேலும், இதுபோன்று பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மண்டல மேலாளர் வெங்கடாச்சலம், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
- ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆனைக்கட்டி என்ற இடம் உள்ளது.
இங்கு பிரசித்தி பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அந்த கோவிலில் தீப வழிபாடு நடந்து வந்தது. இதனால் இந்த மாதம் முழுவதும் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்படும்.
மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியின் நடுவில் உள்ள இந்த கோவிலுக்கு அங்குள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றை கடக்க தரைப்பாலம் ஒன்று உள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.
நேற்று மாலையும் அந்த கோவிலில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர். வழிபாடு முடிந்து பக்தர்கள் இரவு நேரமானதும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்படத் தயாரானார்கள்.
பக்தர்களில் ஒரு பகுதியினர் தரைப்பாலத்தை கடந்து ஆற்றின் மறுகரைக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டோடியது. இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் அலறி அடித்து மீண்டும் கோவில் உள்ள ஆற்றங்கரைக்கு தப்பி ஓடினர்.
ஆனால் 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை ஆற்று வெள்ளம் காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததாலும், இருள் சூழ்ந்து இருந்ததாலும் 4 பேரையும் மீட்க முடியவில்லை.
இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கரைக்கு வர முடியாமல் கோவில் பகுதியில் தவித்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். மொத்தம் 800 பேரை கயிறு கட்டி மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் குறித்து மசினக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கவரட்டி, ஜெக்கலொரை என்ற இடத்தைச் சேர்ந்த சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தொடங்கியது. இரவு வெகு நேரமாகி விட்டதால் அவர்களை தேடும் பணி பாதிக்கப்பட்டது.
இன்று காலை மாயமான 4 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். படகு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஆற்றில் இறக்கி மீட்பு பணி நடந்தது.
வெள்ளத்தில் சிக்கி மாயமான பெண்களை உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்கள் இறந்த நிலையில் பிணமாக த்தான் மீட்கப்பட்டனர்.
முதலில் வாசுகி, சரோஜா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் மற்ற 2 பெண்களின் உடல்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண் பக்தர்கள் பலியான சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது.
- ரஞ்சித் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
- ரஞ்சித் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஊட்டி,
ஊட்டி அருகே தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி திவ்யா. இவர்கள் கோவையில் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தங்காடுக்கு வந்தனர்.
இந்தநிலையில் ரஞ்சித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கிராம மக்கள் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். இதற்கிடையே ரஞ்சித் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சித் சாவு குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
- கரடி வீட்டு வாசலில் உலா வந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை இருக்கிறது.
அங்கு பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கரடி ஒன்று பெரியார் நகரில் புகுந்தது. அங்குள்ள வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றது.
இதை பார்த்து வளர்ப்பு நாய் குரைத்தது. சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் விளக்கை ஒளிரச் செய்து பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தபோது கரடி வீட்டு வாசலில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
சற்று நேரம் அங்கேயே நின்ற கரடி பின்னர் அருகே உள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே, பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடிகளை கூண்டு வைத்துப் பிடிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சிலரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
முதுமலையில் இருந்து கடத்தி சென்ற 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மசினகுடியை சேர்ந்த 5 பேரை கர்நாடகா வனத்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் குண்டல்பெட் அருகே பசவன்பூர் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக சிலர் நடமாடுவதாகவும், மேலும் யானை தந்தங்கள் வைத்திருப்பதாகவும் பந்திப்பூர் புலிகள் காப்பக வன பாதுகாவலர் ரமேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி வன அலுவலர் நவின்குமார் தலைமையிலான வனத்துறையினர் பசவன்பூர் கிராமத்துக்கு சென்று கண்காணித்து வந்தனர்.
பின்னர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிலரை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவர்கள் வந்த சுற்றுலா வேனை சோதனை செய்தனர். அதில் 2 யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் உள்ள காட்டு யானையின் தந்தங்கள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பந்திப்பூர் வனத்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்த ரங்கசாமி (வயது 35), சஜீவகுமார் (35), வினோத் (36), கதிரேசன் (45), செல்வநாயகம் (44) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 2 யானை தந்தங்கள், அதை கடத்துவதற்கு பயன்படுத்திய சுற்றுலா வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே காட்டு யானை தந்தங்கள் பிடிபட்டது தொடர்பாக சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த காட்டு யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து கடத்தி சென்று விற்க முயன்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக மேலும் சிலரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூடலூர், மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.
- சுற்றுலாத்தலங்களை குடை பிடித்தவாறு குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடா் சாரல் மழையும் கடும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. மேலும் அதிகாலையில் கடுங்குளிரும் வாட்டுகிறது.
இந்த குளு,குளு சீசனை அனுபவிக்க வார இறுதி நாட்களில் தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளிமாவ ட்டங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் அதிகள வில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
நேற்று விடுமுறை என்பதால் இங்குள்ள முக்கியச் சுற்றுலாத்தலங்களை குடை பிடித்தவாறு குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்ட பெட்டா, படகு இல்லம், டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் பெய்த சாரல் மழையின் காரணமாக குளிா்ந்த காலநிலை நிலவியது. இந்த குளிா்ந்த கால நிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்ததோடு, சாரல் மழையில் குடையைப் பிடித்தவாறு முக்கிய இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனா்.
- ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடத்தினை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
- கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்று தரப்படுகின்றன
ஊட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உபதலை ஊராட்சி கரிமராஹட்டியில் ரூ.16.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கக்குச்சி ஊராட்சி ஒன்னதலையில் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு சமுதாயக்கூடத்தினை அமைச்சர் ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது, அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவு, கல்வி மற்றும் நல்லொழுக்கங்கள் கற்று தரப்படுகின்றன. தாய்மார்கள் தங்களது குழந்தைகளை கட்டாயமாக அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒன்னதலை கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்பு, அரசின் பங்களிப்புடன் ரூ.42.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு சமுதாய கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (எ) மாதன், குன்னூர் சுனிதா நேரு, உபதலை ஊராட்சி தலைவர், கக்குச்சி ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
- சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஊட்டி
குன்னூர் நகராட்சி 28-வது வார்டு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை நகர மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான ராமசாமி மற்றும் நகர மன்ற துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரமன்ற உறுப்பினர் மணிகண்டன் நகர துணை செயலாளர் முருகேஷ், கிளை செயலாளர் லியாகத் அலி, பழனி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் சையது மன்சூர் நன்றி கூறினார்.






