என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.20-க்கும், அரளி கிலோ ரூ.80-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் ஏலம் போனது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70-க்கும், அரளி கிலோ ரூ.200-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.1000-க்கும், செவ்வந்திப்பூ ரூ.140-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்ததால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா மெட்டாலா துணை மின் நிலையத்தில் வருகின்ற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பிலிப்பாக்குட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர் மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன் சோலை, பெரியக்குறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர்கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்வினியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர் பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் மற்றும் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது.
    • மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகள், வெல்ல ஆலையில் இருந்த குடியிருப்புகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, வீடுகள் மீது மண்எண்ணை பாட்டில் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும், ஆயிரக்கணக்கான பாக்கு, வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்றது.

    இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டும், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர் செல்லும் சாலையில் இரவு நேரத்தில் இரும்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஏராளமான போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோமணி (எ) சுப்பிரமணி (42) என்பவரது 5 ஏக்கரில் பயிர் செய்து இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமார் 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று காலை விவசாய தோட்டத்திற்கு வந்த சுப்பிரமணி 5 ஏக்கரில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி சாய்க்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இது குறித்த தகவலின் பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் கமிஷனர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி, பரமத்தி இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகன்யா, பரமத்திவேலூர் தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நீடிக்கிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்
    • நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களான 11, 12, 13-ந் தேதி ஆகிய 3 தினங்களுக்கு பாதுகாப்பு பணியை அதிகப்படுத்த உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் முழுவதும் பகல் மற்றும் இரவு ரோந்து மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து செல்ல போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதன்படி நாளொன்றுக்கு 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்து உள்ளார். என்றார்.

    • கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும்.
    • 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள், பெண்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டதால் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டும். பள்ளிப்பாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே கடந்த 4-ந் தேதி முதற்கட்ட போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. தீபாவளிக்கு இன்னும் 2 நாள் மட்டுமே உள்ளதால் போனஸ் பேச்சு வார்த்தை விரைவில் முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று 3-ம் கட்ட பேச்சு வார்த்தை இரவு 10.30 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறியதாவது:-

    6 மாதங்களுக்கு முன்பு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டதால் கடந்தாண்டு வாங்கிய போனசை விட இந்தாண்டு தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் போன்ஸ் கிடைக்கும். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் தேக்கம் அடைந்து தொழில் தொய்வு நிலையில் உள்ளதால் போனஸ் சதவீதம் உயர்த்தினால் மேலும் உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். கடந்தாண்டு வழங்கியது போல 9.50 சதவீதம் போனஸ் இந்தாண்டும் வழங்கப்படும் என தெரிவித்தோம். ஆனால் தொழிற்சங்கத்தினர் இதனை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

    இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

    ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த காட்சி கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இந்த நிலையில் தான் மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.
    • கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைக்கு மழைநீர் வர தொடங்கியுள்ளது. வறண்ட நிலையில் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் அருகே வேமன் காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி? கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய நபரை மீட்பது எப்படி? கியாஸ் சிலிண்டர் கையாளும் முறை, ஆறு, ஏரி, கிணறு ஆகிய நீர் நிலைகளில் மூழ்கிய நபரை மீட்பது, ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்வோரை மீட்பது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்தும், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர். அனைவருக்கும் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் ஐப்பசி மாத தேர்த் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்று விழா, பொங்கல் வைத்தல் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. மேலும் நாள்தோறும் ஒவ்வொரு கட்டளை தாரர்கள் சார்பில் வாணவேடிக்கை மேளதாளத்துடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

    முக்கிய நிகழ்வாக இன்று அதிகாலை தீ மிதி விழா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தும் வேப்பிலையை கையில் ஏந்தியும் பயபக்தியுடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும் சில பக்தர்கள் கைக்குழந்தையுடனும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தீ மிதித்தனர்.

    தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்துவதற்காக கோவிலில் இருந்து பழைய கோர்ட்டு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்தனர். ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் நூற்றுக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மாலையில் அம்மன் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் சாமி நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கை, நையாண்டி மேள தாளத்துடன் சப்தா பரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    12-ந் தேதி வசந்த உற்சவம், 13-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விடையாற்றி கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    • விவசாயிகளுக்கு மகோகனி மரக்கன்றுகள் கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
    • தேவைப்படும் விவசாயிகள் ஆதார், சிட்டா நகல் கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மகோகனி மரக்கன்றுகள் கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் ஆதார், சிட்டா நகல் கொண்டு வந்து பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் 2.50 ஏக்கர் வேம்பு கன்று நடவு செய்ய ரூ.17,500 அரசு மானியம் வழங்கப்படுகிறது. நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கபிலர்மலை வட்டார வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.
    • மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி (வயது 39). இவர் மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிக்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக கடந்த 4 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று டாஸ்மாக் கடைக்கு வேலைக்கு சென்று வருவதாக தனது மனைவி சக்தியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். வேலை முடிந்து இரவு 11.30 மணி அளவில் பாலசுப்பிரமணி மற்றும் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சக்திவேல், மற்றொரு விற்பனையாளர் ராமசாமி ஆகியோர் தனித்த னியாக ேமாட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோகனூர் -பரமத்தி வேலூர் சாலையில் உள்ள வண்டிகேட் பகுதியில் சாலை ஓரமாக மின் விளக்கும் எரியாமல் இருளில் நின்று கொண்டிருந்த லாரி மீது பாலசுப்ரமணி ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

    அவரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.

    இது குறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×