என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் ஏமப்பள்ளி கிராமத்தில் உள்ளது.
- மொத்தமாக 4.67 ஏக்கர் நிலங்கள் உள்ளதால் அவற்றை அளவீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் ஏமப்பள்ளி கிராமத்தில் உள்ளது. மொத்தமாக 4.67 ஏக்கர் நிலங்கள் உள்ளதால் அவற்றை அளவீடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி செயல் அலுவலர் ரமணி காந்தன், அறங்கா வலர் குழு தலைவர் தங்க முத்து, அறங்காவலர் தங்க முத்து, கோவில் பணி யாளர்கள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டது.
நாமக்கல் இந்துசமய அறநிலையத்துறை ஆலய நிலங்கள்துறை தனி தாசில்தார் சுந்தரவள்ளி, துணை தாசில்தார் குப்பு சாமி ஆகியோர் தலைமை யில் நில அளவையர்கள் நிலங்களை அளவீடு செய்து அளவை கற்கள் நட்டனர்.
- மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
- கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் புதுப்பாளை யம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோ றும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது. 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மன் ரதம் ஏறுதலும், மாலை மகா மாரியம்மன் திருத்தேரில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஆண்கள் பூ மிதித்தல் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) பொங்கல் மற்றும் மா விளக்கு பூஜை யும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கி ழமை) கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவ மும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்ன பாவாடை மற்றும் மகாதீபா ராதனையும் நடைபெறு கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, திருவிழாக்கு ழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 122 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
- முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 475 காசுகளாக நீடிக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் 6 கோடிக்கு அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முட்டை கோழிகளின் விலை நாமக்கல்லில் 3 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி நேற்று முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் முட்டை கோழிகளின் உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 94 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை, 91 ரூபாயாக குறைந்தது. இதே போல பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 122 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 475 காசுகளாக நீடிக்கிறது.
- நாமக்கல் மாவட்ட 16-வது புதிய கலெக்டராக டாக்டர் எஸ்.உமா, பொறுப்பேற்றுக் கொண்டார்.
- அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள், தன்னார்வ, தொண்டு நிறுவனத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட 16-வது புதிய கலெக்டராக டாக்டர் எஸ்.உமா, பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொது மக்கள், தன்னார்வ, தொண்டு நிறுவனத்தினர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-
பெண்கள் நலமே குடும்ப நலம் என்பதால் ஆரோக்கியமான குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்தும் சுகாதாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே அதற்கு முக்கியத்துவம் அளித்து சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அரசு துறைகளின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்த ப்படும்.
மலைவாழ் பகுதியில் தலசீமியா போன்ற மரபணு சார்ந்த பிரச்னைகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும். தாய்-சேய் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒத்துழைப்போடும் சுகாதாரத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
மேலும் அனைத்து மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு முன்னோடி மாவட்டமாக திகழ அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள உமா, எம்.பி.பி.எஸ் எம்.டி படித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர், 1995-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை அதிகாரியாகவும், 2005 முதல் 2015-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை துணை இயக்குனராகவும், 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை இணை இயக்குனராகவும், 2019-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பழனி சப்-கலெக்டராகவும் பணியாற்றி உள்ளார்.
2020 ஏப்ரல் முதல் 2021 வரை ராணிப்பேட்டையில் கூடுதல் கலெக்டராகவும், மே 2021-ல் இருந்து தற்போது வரை தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எம்.ஜி.ஆர் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபியில் தங்க பதக்கம், தமிழ்நாடு அரசின் சிறந்த டாக்டருக்கான விருது, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கான விருது உட்பட பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நாமக்கல்:
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அனுமன் ஜெயந்தி, தீபா வளி, பொங்கல் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி, வைகாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சாமிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
- அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில், கோட்டை ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. தினசரி அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை, நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
தமிழகத்தில் மற்ற இடங்களில் உள்ள விலை நிலவரத்தை அனுசரித்து காய்கறி மற்றும் பழங்கள் விலையை உழவர் சந்தை அதிகாரிகள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். அந்த விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
கத்தரி ஒரு கிலோ ரூ. 50 முதல் 70, தக்காளி ரூ. 15 முதல் 18, வெண்டைக்காய் ரூ. 20, அவரை ரூ. 40 முதல் 56, கொத்தவரை ரூ. 30, முருங்கைக்காய் ரூ. 40, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ. 30 முதல் 36, பாகல் ரூ. 40 முதல் 50, பீர்க்கன் ரூ. 40 முதல் 50, வாழைக்காய் ரூ. 24, வாழைப்பூ (1) ரூ. 7 முதல் 10, வாழைத்தண்டு (1) ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ.10 முதல் 15, மாங்காய் ரூ. 20, தேங்காய் ரூ. 30, எலுமிச்சை ரூ. 150, கோவக்காய் ரூ. 40, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 45, பெ.வெங்காயம் ரூ. 16 முதல் 20, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 70 முதல் 80, கேரட் ரூ. 50 முதல் 55, பீட்ரூட் ரூ. 30 முதல் 36, உருளைக்கிழங்கு ரூ. 20 முதல் 25, சவ்சவ் ரூ. 30, முட்டைகோஸ் ரூ.16 முதல் 18, காளிபிளவர் ரூ.15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், கொய்யா ரூ. 30 முதல் 40, மலை வாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ. 50, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.50, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 25, பலாப்பழம் ரூ.30, கறிவேப்பிலை ரூ. 50, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 220, பூண்டு ரூ. 50, பச்சை மிளகாய் ரூ. 55 முதல் 65, வாழை இலை ரூ.30,
மரவள்ளிக்கிழங்கு ரூ. 30, மக்காச்சோளம் ரூ. 30, வெள்ளரிக்காய் ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 50, கருணைக்கிழங்கு ரூ. 40, பப்பாளி ரூ. 20, நூல்கோல் ரூ. 28 முதல் 32, பச்சை பட்டாணி ரூ. 70, நிலக்க டலை ரூ. 50, சர்க்கரை வள்ளிக் கிழங்கு ரூ. 50, மாம்பழம் ரூ. 60, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விளாம்பழம் ரூ. 40-க்கு விற்கப்பட்டது.
- பரமத்திவேலூர் பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற் றிலை போன்ற ரகங்களை பயிர் செய்துள்ளனர்.
- வெற்றிலை வரத்து குறைந்ததாலும், முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், அனிச்சம் பாளையம், குப்புச்சிப்பா ளையம், நன்செய் இடை யாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்ட மங்கலம், வெங்கரை, அண்ணா நகர், செல்லப்பம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற் றிலை போன்ற ரகங்களை பயிர் செய்துள்ளனர்.
வெற்றிலை பறிக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பறித்து 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளியாகவும், பின்னர் 104 கவுளி கொண்ட ஒரு சுமையாகவும் கட்டு கின்றனர். இதனை உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பாலத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
வெற்றிலை சுமைகளை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியா பாரிகள் வந்து இருந்து தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வெற்றிலையை வாங்கி, லாரிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, திண்டுக் கல், திருச்சி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.3 ஆயிரத்து 500-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.8 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்து 500-க்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ. 3 ஆயிரத்து 200-க்கும் ஏலம் போனது.
வெற்றிலை வரத்து குறைந்ததாலும், முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளதாலும் வெற்றிலை விலை உயர்வடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்.
- கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி வண்ணாம்பாளையம் பகுதியில், கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி, கரும்பு காட்டுக்குள் பாவாயி (வயது 70) என்பவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக கிடந்தார். இந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்து தனியாக வசித்து வந்த பழனியம்மாள் (64) என்பவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாணமாக கிடந்தார். 2 மூதாட்டிகளும் தனியாக வசித்து வந்த நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 சம்பவமும் ஒரே மாதிரியாக இருந்ததால், குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் 2 மூதாட்டிகளையும் கொடூரமாக கொலை செய்தது சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (32) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கைதான செல்வம் மது, சாராயம், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையம் அருகே அண்ணாநகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். எப்போதும் போதையில் இருக்கும் செல்வம் சைக்கோ போல் சுற்றித்திரிந்துள்ளார். காட்டு வேலைக்கு மட்டும் செல்வார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஓடப்பள்ளி பகுதி பக்கமாக சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த பாவாயியை கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் சந்தேகிக்காதபடி எப்போதும்போல் காட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இதையடுத்து, கடந்த 12-ந் தேதி அண்ணாநகர் அருகே காட்டுப்பகுதியில் தனியாக இருந்த பழனியம்மாளை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது காதில் இருந்த தங்க தோட்டை திருடி சென்று விட்டார்.
இது தொடர்பாக செல்வத்தை தேடி வந்தோம். அவனிடம் செல்போன் இல்லை, இதனால் கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக நேற்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று செல்வத்தை கைது செய்தோம்.
கொலையுண்ட பழனியம்மாள் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் வேலை பார்த்து வந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. கைதான செல்வத்தை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
- வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
- கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தனது உடலை பரிசோதனை செய்தார். ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், அதே போல் உடலில் ரத்த அழுத்த அளவும் அதிகமாக இருப்ப தாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் செல்வராஜ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் போது நான் சீக்கிரமாக செத்து விடுவேன் என்று புலம்பிக்கொண்டிரு ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.
பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி மல்லிகாவிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது. அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற் கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்வராஜின் மனைவி மல்லிகா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
- தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதையடுத்து 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெற்றது. 15-ந் தேதி முதல் நேற்று 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று 21-ந் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 22-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், மாலை 3.30 மணிக்கு மகா மாரியம்மன் திருத்தேரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஆண்கள் அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் 24-ந் தேதி புதன்கிழமை பொங்கல் வைத்து, மாவிளக்கு கொண்டு வந்து பூஜையும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது.
- தமிழ்மணி, இவரது மனைவி தனம். அவர்கள் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக பாத்திரக்கடை நடத்தி வருகின்றனர். தனத்திற்கு தற்போது 56 வயதாகிறது.
- 42வருடங்களுக்கு பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி, இவரது மனைவி தனம். அவர்கள் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக பாத்திரக்கடை நடத்தி வருகின்றனர். தனத்திற்கு தற்போது 56 வயதாகிறது. இவரது 2மகன்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் உளளனர். 8ம் வகுப்பு முடித்த 2ஆண்டுகளிலேயே, தனத்திற்கு திருமணமாகி விட்டது. அதன் பிறகு, பல்வேறு தருணங்கிளல் படிப்பை தொடர முயன்றும், குடும்பபொறுப்பு அதிகரித்ததால் காலம் கடந்து வந்தது.
இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அவர், 247 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளியை விட்டு நன்று 42வருடங்களுக்கு பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது. குறித்து அவர் கூறியதாவது: 1980ல் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினேன். அதன் பிறகு பள்ளி செல்லவில்லை. பதினைந்து வயதில் திருமணமானது. இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி, பரக் குழந்தைகள் உள்ளனர். தற்போது, மனவளக்கலையின் யோகா பறிற்சி வகுப்பில் சேர்ந்து, அடிப்படை கோர்ஸ் முடிந்துள்ளேன்.
யோகா ஆசிரியர் பயிற்சி பெற விரும்புகிறேன். ஆனால் அதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக தனியார் பயிற்சி மையத்தில் 3மாதமாக படித்தேன். எனது கணவர் மற்றும் மகன்கள் ஊக்கமளித்தனர். படிப்பிற்கு எந்த தடையும் இல்லை ஆர்வமும், முயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் படித்து தேர்ச்சி பெறலாம். எனது இந்த முயற்சியை, தெரிந்தவர்கள் யோகா பயிற்சியளார்கள், உறவினர்கள் பலரும் பாராட்டுகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு தனம் கூறினார்.
- பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சாமிக்கு வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன் சாமிக்கு வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாறு மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிர மணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி, பொத்தனூர் அருகே உள்ள பச்சைமலை முருகன், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், வேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன்,
அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், சக்தி நகரில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி யாண்டவர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.
இதில் அந்தந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர் களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






