என் மலர்
நாகப்பட்டினம்
சிக்கலில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்:
கீழ்வேளூர் பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சிக்கல் கடைத்தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிக்கல் கீழக்கரையிருப்பு பகுதியை சேர்ந்த வெள்ளிநாதன் (40) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளிநாதனை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் நெய்க்குப்பை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, டாக்டர் மணிவேல் ஆகியோர் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். முகாமை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் பார்வையிட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ராமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதேபோல் திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பக்கிரிசாமி ஆகியோர் பார்வையிட்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகாமசுந்தரி திருநீலகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
வேதாரண்யம் அருகே கூலித்தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கரன்(வயது 36). கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள திரவுபதை அம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது சிவசங்கரனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றியதில் சிவசங்கரனை அவரது நண்பர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சிவசங்கரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நேற்று அதிகாலை சிவசங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த காஞ்சிநாதனுக்கும், கொலை செய்யப்பட்ட சிவசங்கரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக சிவசங்கரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த காஞ்சிநாதன், முருகையன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சிவசங்கரனுக்கு மலர்க்கொடி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
வேளாங்கண்ணியில் இருந்து படகில் தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேளாங்கண்ணி:
தமிழகத்தில் இருந்து இலங்கை அகதி ஒருவர் நாகப்பட்டினம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல இருப்பதாக கடலோர காவல் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வேளாங் கண்ணி கடலோர காவல் படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், ஆனந்தவடிவேல், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வேளாங்கண்ணி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சோதனை செய்தபோது சந்தேகத்தின் பேரில் அங்கு தங்கி இருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர், காஞ்சீபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் மூவரசம்பட்டு சுப்ரமணியன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ஜனார்த்தனன் (வயது 26) என்பதும், இலங்கை அகதி என்பதும் தெரிய வந்தது. இவர் வேதாரண்யம் ஆர்காடு துறையை சேர்ந்த ஒருவரின் படகு மூலம் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல இருந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனே அவரை பிடித்து வேளாங் கண்ணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வேளாங் கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜனார்த்தனனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, மருத்துவர்கள் மணிவேல், பிரித்திவிராஜ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதனை திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் பார்வையிட்டனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியமணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமிஅன்பழகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாய்மேடு அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி மற்றும் போலீசார் ஆயக்காரன்புலம் கடைத்தெரு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேதாரண்யம் தெற்கு வீதியை சேர்ந்த சாமிநாதன் (வயது52) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 60). எலக்ட்ரீசியனான இவர், கீழையூர் அருகே திருவாய்மூர் பகுதியில் உள்ள மாசிலாமணி என்பவரது வீட்டில் விசேஷ நிகழ்ச்சிக்கு மின்விளக்கு அமைத்து இருந்தார். பின்னர் விஷேசம் முடிந்தவுடன் மின் விளக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி அருகே கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மருதூர் வடக்கு குட்டியப்பபிள்ளைகட்டளை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). இவர் விறகு வியாபாரம் செய்து வந்தார். வியாபார சம்பந்தமாக திருத்துறைப்பூண்டியில் இருந்து திருப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருப்பூண்டி அருகே சென்றபோது எதிரே நாகையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் தீடீரென எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வியாபாரி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றவர் விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் நரேந்திரன் (23) என்பது தெரியவந்தது அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆடுதுறை அருகே லாரியில் அடிபட்டு ஜவுளி வியாபாரி தனது மகன் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்தார்.
திருவிடைமருதூர்:
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் திருச்சம்பள்ளி மேல தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது52). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று திருநாகேஸ்வரத்தில் உள்ள தனது பேத்தி வீட்டு விசேஷத்துக்கு மகன் சுரேஷ் (26) உடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
ஆடுதுறை அருகே சென்றபோது எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் கீழே விழுந்த பழனிவேல் மீது மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரியின் சக்கரம் ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே மகன் கண்ணெதிரிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சுரேஷின் கால் எலும்பு முறிந்தது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
குத்தாலம் அருகே ஆட்டூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 39). இவர், ஆட்டூர் நண்டலார் பாலம் அருகே சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு குணசேகர் சாராயம் விற்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல ஆட்டூர் சுடுகாடு அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை வேதம்பிள்ளை தெருவை சேர்ந்த பாலு மகன் அருண் (22) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கீழ்வேளூரில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடியை சேர்ந்தவர் பட்டு (வயது75). நேற்று முன்தினம் இவர் கீழ்வேளூரில் உள்ள ஒரு வங்கியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த பணத்தை எடுக்க வந்தார். பணத்தை எடுத்துவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பட்டுவின் பேரன் திவாகர் கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கழுத்தில் வெள்ளை நிறம் கொண்ட காகம் அந்த பகுதியில் திரிகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கழுத்தில் வெள்ளை நிறம் கொண்ட காகம் அந்த பகுதியில் திரிகிறது. வீடுகளில் வைக்கும் உணவை சாப்பிட்டு செல்கிறது. இந்த காகத்துக்கு கழுத்து பகுதியில் ரோமம் (முடி) இல்லை. இதனால் காகத்தின் கழுத்துப்பகுதி வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
கோழி வகைகளில் இதுபோல் கழுத்து பகுதியில் ரோமம் இல்லாமல் உள்ள கோழிகளை கிராப் கோழி என்று அழைப்பர். அதுபோல் காகம் இனத்திலும் இந்த வகை காணப்படுவது அதிசயமாக உள்ளது.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கழுத்தில் வெள்ளை நிறம் கொண்ட காகம் அந்த பகுதியில் திரிகிறது. வீடுகளில் வைக்கும் உணவை சாப்பிட்டு செல்கிறது. இந்த காகத்துக்கு கழுத்து பகுதியில் ரோமம் (முடி) இல்லை. இதனால் காகத்தின் கழுத்துப்பகுதி வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
கோழி வகைகளில் இதுபோல் கழுத்து பகுதியில் ரோமம் இல்லாமல் உள்ள கோழிகளை கிராப் கோழி என்று அழைப்பர். அதுபோல் காகம் இனத்திலும் இந்த வகை காணப்படுவது அதிசயமாக உள்ளது.






